பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப்பகுதியில் சுமார் 30,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் தலிபான், அல் கய்டா தீவிரவாதிகளுக்கு எதிராக முழு நேர தாக்குதலுக்கு தயாராகியுள்ளனர்.
தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாத நடவடிக்கைக்கு சுமார் 175 பேர் கடந்த வாரங்களில் பலியானதால், இந்த ஒட்டுமொத்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளுப்பட்டு வருகிறது.
தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில்தான் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ துருப்புகளுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டமிடப்பட்டுவதால் இந்த பகுதியில் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு வாஜிரிஸ்தானில் இந்த தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தாலும், தீவிரவாதிகள் தப்பித்து ஆப்கானிற்கும் பிற பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்புகள் கணித்துள்ளன.
அம்னெஸ்டி இன்டெர்னேஷனல் அமைப்பு, இந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடங்கியது முதல் சுமார் 1 லட்சம் முதல் 1,50,000 வரை பொது மக்கள் பலர் தங்கள் இடங்களை காலி செய்து விட்டு புலம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் மேலும் கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.