ருபெல்லா தடுப்பூசி ஏற்றப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் மரணமானதையடுத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ள தாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுஅதேநேரம், வாரியப்பொல மினுவான்கெட்டே வித்தியாலயத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி நேற்று மரணமான சம்பவத்தை விசாரிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.
நான்கு பேர் கொண்ட இந்தக்குழு இன்று காலை விசாரணைகளை ஆரம்பிக்குமென பொதுச் சுகாதார பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்தார். டொக்டர் மனோரி சேனநாயக்க, டொக்டர் ரஜீவ டி சில்வா, டொக்டர் ஆனந்த சமரசேகர, டொக் டர் சிறியானி திஸாநாயக்க ஆகிய நால்வருமே மேற்படி குழுவின் அங்கத்தவர்களாவர்.
வாரியப்பொல மினுவான் கெட்டே வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது.
இத்தடுப்பூசி மருந்தின் ஒவ்வாமை காரணமாக மூன்று மாணவிகள் பாதிக்கப்பட்டு வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.
இவர்களில் ஒரு மாணவி மிக ஆபத்தான நிலையில் குருணாகலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். இங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இம்மாணவி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.