10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகை – டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு

baalu.jpgஇலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பி னர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர். இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர். அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர். மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்ப டுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர். 

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    //பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!//

    எருமை மாட்டின் சொரணைக்கு சவால் விடும் நமது வியாதிகள் ராசபக்சே வீட்டில் பிரியாணி தின்ன தயாராகி வருகிறார்கள்..இதில் கூத்து என்னவென்றால் இவ்வளவு நாட்கள் அங்கே தமிழினம் முட்கம்பி வேலிகளுக்குள் சிக்குண்டு இருப்பது தெரியாதா? இப்போதுதான் இவர்களுடைய பூனைக்கண் திறந்ததா? கூர்ந்து கவனித்தால் தமிழர்களுக்கு ஒன்று புலப்படும்.. அமெரிக்கா பிரிட்டன் உட்பட மே மாத பேரவலத்தினை தடுத்து நிறுத்த முயன்ற போது அதை குறுக்குசால் ஓட்டி கெடுத்தது யார்? என்பது நன்றாகவே தெரியும்.இப்போதும் அதே நோக்கத்தில் தான் இந்த பிரியாணி தின்னும் நிகழ்வு நடைபெற போகிறது..

    அங்கே மேற்குலகம் முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை விடுதலை செய்..அங்கே மனிததிற்கான அடிப்படை உரிமைகள் துளி கூட இல்லை.. gsp+ வரிசலுகையை நிறுத்துவோம் என மிரட்டிகொண்டிருக்கும் போது.. தனது சக ஆரிய பங்காளி துன்புறுவதை இந்தியா பார்த்து கொண்டு இருக்குமா? நம் கையை கொண்டே நமது கை குத்தும் வஞ்சகத்தினை நாசுக்காக நீண்ட நாட்களாக இந்தியா செய்து கொண்டுள்ளது அதில் முதலில் பலியாவது பதவிசுகத்திற்கு அலையும் அரசியல் பதர்கள்..

    ஏற்கனவே ஈழ பிரச்சனைக்காக தெரு முக்கில் கத்திவிட்டு போகும் இந்த வியாதிகளை உண்மையானவர்கள் என இளித்தவாய் தமிழர்கள் நம்பி இருக்கும் வரை இவர்கள் கூறுவதுதானே உண்மை.. டில்லிகாரனுக்கு தலையையும் தமிழ்நாட்டுக்கு வாலையும் காட்டும் இவர்கள் போய் வந்து என்ன அறிக்கை விடுவார்கள் என்பது நாம் அறிந்ததே! அது கொலையாளிகள் மேனன் மற்றும் நாராயணன் கொடுக்கும் அறிக்கையின் மீள்பதிவாகவே இருக்கும்! சக தமிழினத்தவரே சொல்லிவிட்டார்கள் அகதி முகாம்கள் நன்றாக உள்ளது என நீர் என்னயா சொல்வது என மேற்குலத்தின் வாயை அடைக்க போகிறார்கள்..

    நாம் இங்கு எழுதுவது முட்கம்பிகளுக்குள் இருக்கும் தமிழர்களுக்கு தெரியாது எனினும் நம்முடைய வேண்டுகோள் ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை போன்று அங்கு வரும் எங்கள் வியாதிகளை கல்லால் அடித்து விரட்டுங்கள்..ஆமை புகுந்த கிணறும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள் ..இவர்களை பொறுத்தவரை இது சரியே!

    புரட்சிகர தமிழ்தேசியன்..
    திருவண்ணாமலை

    Reply
  • BC
    BC

    //பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!//

    அருட்சல்வன் தெரிவித்த செய்தியில் மேலேயுள்ள வசனம் வரவில்லையே!

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    It is like a Tamil film scene.Who are these people;Why do they want to visit Sri Lanka/They should address the problems of the millions of Tamils suffering in Tamilnadu.We are better off.They are the people who promoted cross border terrorism in Sri Lanka and now come to see the progress of our welfare camps.

    Reply
  • அருட்சல்வன்
    அருட்சல்வன்

    இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசமான வாகரைக்கு இவர்கள் விஜயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    மேலும் இந்திய உதவியுடன் தற்போது பொலன்னறுவைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுள்ள ரயில் பஸ் சேவையை பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.

    மட்டக்களப்பு மாநகர சபை மாலையில் இவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடனான சந்திப்பொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

    கிழக்கு மாகாணத்திற்கான இவர்களது விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக நேற்றிரவே தனக்கு அறிவிக்கப்பட்டதாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

    இன்று முழுநாளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இவர்கள் மேற்கொள்ளவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அதேவேளை, குறிப்பிட்ட நாடாளுமன்ற குழுவினருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

    தற்போது கொழும்பில் தங்கியுள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

    Reply
  • Appuhamy
    Appuhamy

    SRI LANKAN OPPOSITION MPs ARE BANNED FROM VISITING THESE CAMPS WHEREAS ALIENS ARE ALLOWED TO GO ON AN UNGUIDED TOUR IN THIS CAMP!! WHAT IS GOING ON ????

    Reply
  • poor themulu
    poor themulu

    Why the chiefminister’s son Stalin Karunanidhi and he is also the chiefminister-in-charge preferred to stay back, is it a ploy to say later, the Sri Lankan govt, guided them to places of their choice and they couldn’t see the plight of the IDPs in real situations or the IDPs talked under duress? etc., They may issue a statement to the local press and another contradictory one to consume for the so called Tamil diaspora!

    Reply
  • sumi
    sumi

    இவ்வருகை ஒரு அரசியல் வித்தை. ஏதோ ஒரு அரசியல் தேவைக்காக புலம் பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய பிரஜாவுரிமை என்று நாடகமாடிய கருணாநிதிக்கு,அதன் பின்விளைவுக்கான எதிர்ப்பை சமாளிப்பதற்கான சாமர்த்தியம்தான் இந்த நாடகம். அகதிமுகாம்களை விஜயம் செய்யும் இக்குழுவினர் இந்தியா திரும்பியதும் விடப்போகும் அறிக்கை என்ன தெரியுமா?-இலங்கையில் தமிழர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை.
    அரசு இவர்களை நல்ல முறையிலேயே நடத்துகின்றது.வெகுவிரைவில் இவர்கள் அனைவரும் சகல உரிமையுடனும் வாழ வழி அமைக்கப்படுகின்றது. ஆகவே இந்தியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டிய தேவையில்லை.சகல வசதிகளுடனும் இவர்கள் தங்கள் தாயகம் திரும்பலாம். இதுவே இவ்விஜயத்தின் குறிக்கோள்.–பொறுத்திருந்துதான் பார்ப்போமே—–

    Reply
  • mano
    mano

    முகாம்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட வந்தவர்கள்> அவர்களைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிடலாமே. கூட்டமைப்பினர் இத்தனை நாட்களால் தமிழ்நாட்டில்தானே நின்றார்கள்> அங்கே கேட்காத கேள்வி எதைத்தான் கொழும்பில் வைத்துக் கேட்டுவிடுவார்கள்?
    என்னவோ? வருபவர்களுடைய ஆசையில் யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதும் பெரிதாக இருக்கும். அதுவும் நிறைவேறிவிடும். அங்கே டக்ளஸ் ஐயா காட்டுவார். அவருக்கு யதார்த்தநிலை தெரியும். முகாம் மக்களை வெளியே விடச்சொல்லி இவர்களிடம் கேட்கமாட்டார்> கோத்தபாயவிடம்தான் கேட்பார். சாப்பாடு தண்ணீ என்று ஏதாவது உதவி செய்யுங்கோ என்று தமிழ்நாட்டிடம் கேட்பாரோ?
    யாழ் பல்கலைக்கழகத்து பேராசிரியர்களுக்கும் முகாம் மக்களுக்கும் என்ன சம்பந்தம்> ஏன் அவர்களைச் சந்திக்கினமாம்? முகாமிலிருந்து விடுதலையான மாணவர்களைச் சந்தித்து> எப்படி வந்தனீங்கள் என்று கேட்கப் போகிறார்களாக்கும்.

    இந்தியாவிலிருந்து வந்தவர்களை சிங்களவர்களும்> தமிழர்களும் இலங்கையில் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்துகிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு அங்கே குடியுரிமையும் வேலையும் கொடுத்து வைத்திருக்கிலாமே. இலங்கைப் பிரச்சினை அவர்களுக்கு நல்ல சினிமாக் கதை போல இருக்கிறதாக்கும். சுவாரசியம் தேவையென்று புலுடாக் கதையெல்லாம் விடுகிறார்கள். அதை நம்பிக்கொண்டு எங்கட சனமும் அங்கே கிடைக்குமோ? இங்கே கிடைக்குமோ? என்று பறந்துகொண்டிருக்கினம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    எனக்கும் இவர்கள் வருகையில் பெரும்பாலும் உடன்பாடு இல்லை, சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்; கமலகாஸன் சொல்லுவார் அதிகாரம் உள்ள சில தீர்வுகளை எடுக்ககூடிய ஒரு அதிகாரியுடன்தான் பேச வேண்டும்; மற்றவர்களுடன் பேசி தனது நேரத்தை வீணடிக்க தான் விரும்பவில்லை என, நான் கமலகாஸனாய் இங்கு பார்ப்பது எமது சிறை வாழ்மக்களை மட்டுமே; ஆனாலும் திரு ,கனி ;இருப்பதால் அரசுக்கு எதிரான ஒரு புள்ளி(கரு) இந்திய பாராளமன்றத்தில் உருவாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம், இங்கு கூட தோழரும் சிறுத்தையும் எட்டவே நிற்ப்பதாக கொழும்பு செய்தி சொல்லுகிறது; பாலுவும் சம்பந்தரும் பல கால நண்பர்கள்; காங்கிரஸை பொறுத்த மட்டில் திருவின் செயல்பாட்டின் எதிர்நகர்வுகளை கவனிப்பதில் கவனமாக நிற்க்குறார்கள், அனைத்துக்கும் மேலாக மகிந்தா குடும்பம் எப்படியும் திருவை புலிக்கெதிரா ஒரு நபராக மாற்றுவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள், அதனால்தான் நம்ம பிள்ளையானிடம் கூட கூட்டி செல்லாமல் தமது கையில் வைதிருக்கிறார்கள்; இதில் திரு இக்கட்டான சூழலில்தான் இருக்கிறார்; சிலவாரத்துக்கு முன்பே தமிழர் தரப்பு(அப்படிதானே தம்மை சொல்லுகினம்) திருவுக்கு சில அதிர்ச்சி வையித்தியம் புலம்பெயர் தேசத்தில் செய்தார்கள்; அதைவிட மகிந்தா குடும்பம் செய்ய முன்வரலாம், அதையே டெல்லி விரும்புகிறது, எது எப்படியோ வந்தவர்கள் கூட்டமைப்பை மதிக்கின்றனர் என்பது மட்டும் அரசுதரப்பு வெறுப்பு செய்தியென அரசதரப்பு ஊடகமே தருகிறது;

    Reply
  • santhanam
    santhanam

    யாழ் பல்கலைகழகமாணவனின் கேள்விக்கு பாலுமெளனம் கேள்வி இது தான் எவ்வளவு காலம் முன்னால் இந்தியபிரதமரின் கொலையைசொல்லி என்னும் எவ்வளவு தமிழர்களை கொலை செய்யபோகிறியல்.?

    Reply
  • ganka
    ganka

    கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.

    இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

    மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது. ஆனால் அக்டோபர் ஐந்தாம் தேதி இதன் முக்கியமான பம்பிங் யூனிட் அணைக்கபட்டது. நதியில் மிக குறைவான அளவு நீரோட்டம் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லபட்டது. இதன் காரணமாக முகாம்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு முப்பது லிட்டர் தண்ணீர் தான் அளிக்கபடும் என நிபந்தனை செய்திருக்கிறார்கள். ஐ.நாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு பதினைந்து லிட்டர் தண்ணீர் கொடுக்கபட வேண்டுமென பரிந்துரை செய்தது மீறப்பட்டு இருக்கிறது.

    முகாமில் உள்ள 38 வயதான ஜீவிதா, “இன்று காலை நான் என் குடும்பத்திற்காக இருபது லிட்டர் தண்ணீர் வாங்கினேன். என் குடும்பத்தில அஞ்சு பேர். நாளை காலை வரை வேற தண்ணீ கிடைக்காது. நாங்க குடிக்கிறதுக்கு, சமைக்கிறதுக்கு, துணி துவைப்பதற்கு, குளிப்பதற்கு எல்லாம் இவ்வளவு தண்ணீ தான். வேற கிடையாது. மூணு நாளா எங்க குடும்பத்துல யாருமே குளிக்கலை. கேம்ப் நிர்வாகிகளுக்கு இத பத்தி கவலையே கிடையாது,” என்று சொன்னார்.

    முப்பது வயது ஆனந்தி தனது ஒரு வயது மகனுடன் முகாமில் இருக்கிறார். “இன்னிக்கு நாலறை மணி நேரமா கியூவுல நின்றிருந்தேன். அதுக்கு மேல நிற்க முடியல்லை. ரொம்ப அசதியாயிடுச்சு. நேத்து நடு ராத்திரியில் இருந்தே கியூவுல நின்னு காலையில ஒன்பது மணிக்கு தான் தண்ணீ கிடைச்சுது. முப்பது லிட்டர் கிடைச்சுது. எனக்கு பரவாயில்லை, நானும் என் மகனும் தான். ஆனா பத்து பேர் குடும்பத்துல இருந்தாலும் இவ்வளவு தண்ணீர் தான் குடுக்கிறாங்க. அவங்க பாடு இன்னும் கஷ்டம்,” என்கிறார் ஆர்த்தி.

    முப்பத்தி இரண்டு வயதான மாதவி,” தண்ணீ கஷ்டத்துல மக்கள் ரொம்ப துவண்டு போயிட்டாங்க. இங்க ரொம்ப நிலைமை சிக்கலா இருக்கு. ஏழாம் தேதி திடீரென்று அரை மணி நேரம் தண்ணீ வந்தது. மக்கள் எல்லாம் பக்கெட்டை தூக்கிட்டு ஓடி போய் அடிதடி தள்ளுமுள்ளாகி பெரிய சண்டை ஆகிடுச்சு. ஒருத்தருக்கொருத்தர் வாய் தகராறு ஆகி கற்கள் எல்லாம் வீசிக்கிட்டாங்க. நாளைக்கு இதே நிலைமை இருந்தா இந்த முகாம் முள்வேலிகளை தூக்கி எறிஞ்சிட்டு எல்லாரும் நதிக்கு போய் நாங்களா தண்ணீர் பிடிப்போம்னு பேசிக்கிட்டாங்க,” என்று நடந்ததை சொன்னார்.

    கடந்த இரண்டு வாரங்களாக வவூனியா மானிக் முகாம்களில் பலத்த காற்று அடிப்பதால் முகாம் கூரைகள் பல இடங்களில் அறுந்து விட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் வசிக்கும் குமரவேல் என்பவர்,” மரத்து கிளைகள் எல்லாம் பலத்த காத்துல உடைஞ்சு முகாம் கூரைங்க மேல விழுது. டென்ட்டிற்கு வெளியே தான் சமையல் செய்ய வேண்டியதிருக்கு. பலத்த காத்துனால தூசியும் மண்ணும் சாப்பாட்டுல விழுது. இங்க வாழறது ரொம்ப கடினமான விஷயம்,” என்கிறார்.

    வவூனியாவில் உள்ள மானிக் முகாமின் இரண்டாவது பிரிவில் குமரவேல் தற்போது இருக்கிறார். இங்கு உள்ள இடப்பற்றாகுறை காரணமாக அவருடைய குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் மற்றும் வேறொரு குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் ஒரே டெண்ட்டில் வசிக்க வேண்டியதிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைத்த அளவுகள்படி பார்த்தால் இந்த இரண்டாவது பிரிவில் 29,000 பேருக்கு குறைவாக தான் தங்க வைக்கபட முடியும். ஆனால் உண்மையில் இங்கு 52,000 பேர் வசிக்கிறார்கள். இரவுகளில் பெண்கள் டெண்ட்களில் தூங்குகிறார்கள். ஆண்கள் டெண்ட்டிற்கு வெளியே தூங்க வேண்டியதிருக்கிறது. அக்டோபர் மாதம் வழக்கமாய் வரும் மழைக்காலம் தொடங்கி விட்டால் தங்களது நிலை என்னாவாகும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார் குமரவேல். “போன மாசம் கடுமையா மழை பெய்ஞ்சுது. இங்க மழை தண்ணீ ஓடறதுக்கு வழியில்லை. அது அப்படியே தேங்கிடுது. அப்புறம் நாங்க நடக்கவே முடியாத நிலைமை வந்துடுது,” என்று கவலைபடுகிறார் குமரவேல்.

    கடந்த கடும்மழை காரணமாக கழிவறையில் இருந்து மல கழிவுகள் டெண்ட் வழியாக ஓட தொடங்கி விட்டது. இத்தகைய அசாதாரண வாழ்க்கை சூழலில் முகாம்வாசிகள் ராணுவத்தினருடன் சில சமயம் மோதல்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. செப்டம்பர் 26-ம் தேதி ராணுவத்தினர் இப்படி ஏற்பட்ட மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்காக கூட்டத்தினை பார்த்து சுட்டிருக்கிறார்கள். இதில் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. ஒரு குழந்தையினை துப்பாக்கி குண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை பற்றி முகாம் நிர்வாகம், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்,” என்று சொல்லியிருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

    வவூனியாவில் உள்ள மானிக் முகாமில் முதல் பிரிவிற்கு இரண்டாம் பிரிவிற்கும் இடையில் தடுப்பு அமைக்கபட்டிருக்கிறது. Zone one & two என்று இவை அழைக்கபடுகின்றன. இந்த இரு பிரிவிற்கு இடையே உள்ள மக்கள் தங்களது உறவுகளை சந்திக்க சிலசமயம் அனுமதிக்கடுகிறார்கள். முதல் பிரிவில் சமையல் செய்ய விறகுகள் கிடைப்பதில்லை என்பதால் அதற்காகவும் மக்கள் இரண்டாம் பிரிவிற்கு போகிறார்கள். அன்று மாலை ஐந்தரை மணிக்கு இந்த பிரிவுகளுக்கு இடையிலான ரோட்டினை கடந்து போக அனுமதி வேண்டி மக்கள் நீண்ட கியூவில் நின்று காத்து இருந்தார்கள். அப்போது விறகுகளை சுமந்தபடி ரோட்டினை கடந்த ஒரு மனிதனை ராணுவத்தினர் எந்த காரணமும் இல்லாமல் தாக்க துவங்கியிருக்கிறார்கள். மக்கள் இதனை தடுக்க முயன்ற போது மேலும் ராணுவத்தினர் அங்கு கூடி முகாம் மக்களை அடித்து இருக்கிறார்கள். ஒரு ராணுவ வீரன் கையெறி குண்டினை கூட்டத்தின் மீது எறிவதாக தூக்கி காட்டியிருக்கிறான். அதற்கு அடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் தான் இருவருக்கு காயமேற்பட்டு இருக்கிறது. இதற்கு பிறகு வேறொரு ராணுவ வீரன் முதலில் அடிபட்ட ஆள் கொணடு வந்த விறகு கட்டின் மேல் வெடிகுண்டினை பொருத்தி அதனை தனது செல்போன் கேமராவில் படமெடுத்து இருக்கிறான். இதனை தொடர்ந்து பத்தொன்பது பேர் கைது செய்யபட்டார்கள். அவர்களில் சிலர் மட்டுமே பிறகு விடுவிக்கபட்டார்கள். கைது செய்யபட்டவர்களை ராணுவத்தினர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததாக சொல்லபடுகிறது.

    செப்டம்பர் 23-ம் தேதி இது போல வவூனியாவில் உள்ள மற்றொரு முகாமில் (பூந்தோட்டம் முகாம்) ராணுவத்தினர் முகாம்வாசிகளை அடித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு ஒரு முகாம்வாசி திடீரென ராணுவத்தினரால் வேறு இடத்திற்கு அழைத்து செல்லபட இருந்தார். அதனை மக்கள் தட்டி கேட்டார்கள். இதில் ராணுவத்தினரின் வாகனங்கள் அடிக்கபட்டன. இதன் காரணமாக மூன்று மணி நேரம் அங்கு கலவரச் சூழல் இருந்தது.

    ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மானிக் முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டினை பற்றி தனக்கு அறிக்கை கொடுக்குமாறு கேட்டிருக்கிறது. இச்சூழலில் உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு இங்குள்ள மக்கள் அனைவரும் சுதந்திரமாய் தங்களது ஊருக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டுமென வற்புறுத்தியபடி இருக்கிறார்கள்.

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் பத்து பேர் கொண்ட குழு ஒன்று தற்போது இலங்கை முகாம்களை நேரடியாக பார்வையிட சென்றிருக்கிறது. கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுதர்ஸன நாச்சியப்பன், ஜே.எம்.ஆருண் உள்ளடக்கிய இந்த குழு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம்களை பார்வையிட்டு இருக்கிறார்கள். நாளை அவர்கள் வவூனியா முகாம்களுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு செல்வதற்கு கொடுக்கபட்டிருந்த அனுமதியினை இலங்கை அரசு ரத்து செய்து இருக்கிறது. இந்த குழுவினர் என்னென்ன கண்ணீர் கதைகளை நேரில் பார்க்க போகிறார்கள் என்பதையும் இவர்களது நேரடி பயணம் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Reply