இந்தோ னேசியாவில் பூகம்பம் ஏற்பட்ட பதாங் நகரில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் 21 வயது மாணவி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள பதாங் நகரில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.
ஒட்டுமொத்த நகரமே தரைமட்டமாகி விட்டதைப் போல் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டி விட்டது. மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் ஏராளமான பிணங்கள் கிடக்கின்றன. எனவே பிணங்களை முழுமையாக அகற்றிய பின்னர்தான் சரியான இறப்பு எண்ணிக்கை தெரியவருமெனக் கூறப்படுகின்றது.
பதாங் நகரில், இடிந்து விழுந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடத்தின் இடிபாடுகளை மீட்புக்குழுவினர் அகற்றிய போது ஒரு பெண்ணின் குரல் லேசாக கேட்டது. இதனால் உஷாரான அவர்கள் இடிபாடுகளை மெதுவாக அகற்றி உள்ளே சிக்கி இருந்த சாரி என்ற 21 வயது மாணவியை மீட்டனர். மிகவும் தாகமாகவும், பசியாவும் இருப்பதாக சாரி கூறியதை தொடர்ந்து அவருக்கு உடனடியாக பால் கொடுக்கப்பட்டது. அவர் மீட்கப்பட்டதும் அங்கு திரண்டு இருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவி சாரி உடனடியாக அம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்து 40 மணி நேரத்திற்கு பின் அந்த மாணவி உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். பள்ளிக்கூட கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தெரிய வந்து உள்ளது. அவர்களையும் பத்திரமாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.