வன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொந்தமாக நிகழ்ச்சித் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகின்றது என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்து உரையாடினர்.
வன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகியன குறித்து இச்சந்திப்பின்போது பிரதானமாக பேசப்பட்டது. இச்சந்திப்பில் கூட்டமைப்புச் சார்பாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான என்.ஸ்ரீகாந்தா குறித்த சந்திப்பு குறித்து “ஏசியன் ட்ரிபியூன்” ஆங்கில இணையத்தள பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே வன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகியன சம்பந்தமாக கூட்டமைப்பு சொந்தமாகத் தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: நாம் வன்னி அகதிகளின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகியன தொடர்பாக சொந்தமாக சில திட்டங்களையும், யோசனைகளையும் வைத்திருக்கின்றோம். ஆனால், அவற்றை விளங்கப்படுத்துவதற்கு இது உரிய தருணம் அல்ல. நாம் இவை தொடர்பாக நிகழச்சித்திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறோம்.