லாக்கர் பியில் 1988 இல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான லிபிய நபரை விடுதலை செய்வதற்கான தனது முடிவு ஸ்காட்டிஸ் சட்டங்கள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படியிலானது என்றும், இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு அதில் இடம் கிடையாது என்றும் ஸ்காட்டிஷ் நீதியமைச்சர் கென்னி மக் அஸ்கில் கூறியுள்ளார். அப்தல் பஸத் மெக்ராஹி என்னும் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வெற்றிவீரருக்கான வரவேற்பு ஆகியவை குறித்து சர்வதேச கண்டனம் எழுந்துள்ளது.
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அந்த வரவேற்பு பொருத்தமற்றது என்று கூறிய மக் அஸ்கில் அவர்கள், வரவேற்பு குறைந்த அளவிலேயே நடக்கும் என்று தமக்கு உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மனிதாபிமான அடிப்படையில் மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டார்.