இலங் கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. இந்த பணத்தின் மூலம் ஹில்டன் ஹோட்டல் போன்று மூன்று ஹோட்டல்கள் அமைக்க முடியும். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியக் கடன் கிடைத்துள்ள நிலையில் பல நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய தயாராகி வருகின்றதென ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய கடன் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது :-
நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய தொகையை விட கூடுதலான தொகை எமக்குக் கிடைத்துள்ளது. 2011 மே மாதம் வரை 8 தவணைகளில் இந்த கடன் தொகை இலங்கைக்கு கிடைக்க உள்ளது. இலங்கை மீதான நம்பிக்கை காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் இந்தளவு பாரிய கடன் தொகையை வழங்கியுள்ளது.
இந்தக் கடனின் மூலமாக நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறதென ஐ. தே. க. கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கடனின் காரணமாக நாடு மேலும் அபிவிருத்தி அடையும். பெருமளவு பணம் கிடைத்திருப்பதால் மத்திய வங்கிக்கு தனியார் வங்கிகளிடம் கடன்பெற வேண்டிய தேவை ஏற்படாது.
இலங்கைக்கு பெருமளவு பணம் கிடைத்திருப்பதால் தனியார் வங்கிகளுக்கு சிறப்பாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னர் வட்டி வீதம் அதிகமாக காணப்பட்டதோடு சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக வட்டி வீதம் மேலும் குறையும், தொழில் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் இலங்கைக்கு 31 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.
இந்த நிதியினூடாக ஹில்டன் ஹோட்டல் போன்று 3 ஹோட்டல்கள் நிர்மாணிக்க முடியும்.
வரவு – செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை 7 வீதமாக வைத்திருக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஆனால், 2010ஆம் ஆண்டாகும் போது துண்டு விழும் தொகையை 5 வீதமாக வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாட்டை அபிவிருத்தி செய்ய பெருமளவு நிதி செலவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடன் எம்மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டதாக ஜே. வி. பி. தெரிவித்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அரசாங்கம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தக் கடனின் மூலம் நாணய நிதிய தேவைகள் நிறைவேறுவதாக கருத முடியாது என்றார்.