யாழ். குடா இ. போ. ச டிப்போக்களுக்கு 7 பஸ்கள், உதிரிப்பாகங்கள் அனுப்பி வைப்பு

bus.jpgயாழ். மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை, காரைநகர், யாழ்ப்பாணம் டிப்போக்களுக்கு ஏழு பஸ் வண்டிகள், டயர்கள், மற்றும் உதிரிப் பாகங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் நாரஹேன்பிட்டிய தலைமைக் காரியாலயத்திலிருந்து ஏழு பஸ் வண்டிகளும் நேற்றுப் பகல் 12.30 க்கு புறப்பட்டுச் சென்றன. யாழ். குடாநாட்டிலுள்ள டிப்போக்களில் தற்போது உதிரிப்பாகங்கள் இன்றி டயர்கள், பட்டறிகள் இன்றி சேவையிலீடுபடுத்த முடியாமலுள்ள பஸ் வண்டிகளையும் சேவையிலீடுபடுத்த ஏதுவாக 36.9 மில்லியன் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்களை யாழ். நகருக்கு அனுப்பி வைக்க போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக நேற்றும் உதிரிப்பாகங்கள், டயர்கள், பற்றரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

வடபகுதி போக்குவரத்துச் சபை பிரதம பிராந்திய முகாமையாளர் கே. கணேச பிள்ளை ஏழு பஸ் வண்டிகளையும் உதிரிப்பாகங்களையும் நேற்று போக்குவரத்துச் சபை தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மூன்றாவது கட்டமாக அடுத்து வரும் சில வாரங்களில் வவுனியா, மன்னார் டிப்போக்களுக்குரிய மேலும் சில பஸ் வண்டிகளும் அனுப்பப்படவிருப்பதாகவும் கே. கணேசபிள்ளை தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை தலைமை அலுவலகத்திலிருந்து பஸ் வண்டிகள் யாழ். நோக்கி புறப்படுவதற்கு முன்னதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண, இ. போ. ச. தலைவர் தம்மிக்க ஹேவாபத்திரன ஆகியோர் பஸ் வண்டிகளை பார்வையிட்டனர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட டிப்போக்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட பஸ் வண்டிகளே நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *