‘தடுப்பு முகாம்களில் உள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பம்’ என்ற பெயரில் விண்ணப்பமொன்று நூறு ரூபாய் விலையில் யாழ். குடாநாட்டில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரே அன்றி அம்மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட வில்லை. எனவே, தடுப்பு முகாம்களில் அம்மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி சட்டத்திற்கு புறம்பான முறையில் ஒரு சாரார் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் கூறினார். இவ்வாறான நபர்களிடம் அகப்பட்டு பொதுமக்கள் தங்க ளது பணத்தையும் நேரத்தையும் வீணாகச் செலவிடக் கூடாதென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலி விண்ணப்பமானது குடாநாட்டில் தற்போது பல்வேறு முக்கிய இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் இவ்விண்ணப்பங்களை விலை கொடுத்து வாங்கி பெரும் ஏமாற்றங்களைச் சந்தித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பயனாக யாழ் மாவட்ட நலன்புரி நிலையங்களில் இருந்து யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தற்போது கட்டம் கட்டமாக தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான சட்ட விரோதமான விண்ணப்பங்களை விநியோகிப்போர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.