தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணத்தை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதம நீதிவான் நிசாங்க கப்புஆராச்சி அனுமதி வழங்கியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் கிடைக்க ஒத்துழைத்தாரெனக் கூறப்படுவது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கனகரட்ணம் எம்.பி.யைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரியதையடுத்தே இந்த அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று கண்காணித்த பின்னரே கொழும்பு பிரதம நீதிவான் இந்த அனுமதியை வழங்கினார்.
யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து கடந்த மே மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்தபோதே இவர் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.