டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென கியூபா நாட்டில் பயன்படுத்தப்படும் பக்டீரியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இம்முடிவுக்கு அமைய கியூப நாட்டிலிருந்து பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Subspecies Isreelenesis) என்ற இந்த பக்டீரியாவை இவ்வாரம் இந்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் நாட்டிலுள்ள பத்து மாவட்டங்களில் இருக்கும் 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் பெரிதும் பரவியுள்ளது. அதேநேரம் இக்காய்ச்சல் காரணமாக இற்றைவரையும் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர். இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.நுளம்புகளால் பரப்பப்படுகின்ற இக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சு அதிகாரிகள் பங்குபற்றிய கலந்துரையாடலொன்று கடந்த வாரம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென கியூபா நாட்டில் பாவிக்கப்படும் வழிமுறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பிலுள்ள கியூப நாட்டு உயர் ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பக்aரியாவை துரிதமாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனடிப்படையில் இப்பக்டீரியா தொடர்பான இரு மருத்துவ நிபுணர்களின் சேவையை இலங்கைக்கு பெற்றுத் தருவதற்கும் கியூப உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் உறுதியளித்திருக்கிறார். நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இந்த பக்டீரியா 1982ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பக்டீரியா நுளம்புகளின் குடம்பியை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனூடாக டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பக்டீரியாவைப் பயன்படுத்தி நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைப் பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் குருநாகல் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவென இந்த பக்aரியா ஏற்கனவே பரீட்சிக்கப்பட்டது தெரிந்ததே.