சுமார் 400 மின்மாற்றிகளின் துணையுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது என மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் மேலும் பேசுகையில்:-
மின்சார உற்பத்தியின் போது பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளது. மின்சாரத்தை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் போது அலகொன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் நட்டமேற்படுகிறது. இதன்படி 40 மில்லியன் ரூபாவை தினமொன்றுக்கு நஷ்டமடைய வேண்டியுள்ளது. டீசலை எரிபொருளாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுவதாலேயே அதிக உற்பத்தி செலவை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கு மாற்டாகவே நிலக்கரியினாலான மின் ஆலையை உருவாக்கி வருகிறோம். முதற்கட்ட வேலைகள் பூர்த்தியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனு¡டாக 300 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும்.
இரண்டாவது கட்டத்தை விரைவிலேயே ஆரம்பிக்கவுள்ளோம். எக்ஸிம் வங்கியூடாக கடனை பெற்றுக் கொண்டு இரண்டாவது கட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக 900 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும். அத்துடன் இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் திருகோணமலையில் அரம்பிக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் இவ் வருட இறுதியில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. என்றும் அமைச்சர் ஜோன் சென விரட்ன கூறினார்.