தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2008ஆம் ஆண்டு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நாட்குறிப்பேடொன்று இராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமான பயணப் பொதியொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கமொன்று தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் அவ்விலக்கத்துக்குச் சொந்தக்காரராகிய முஸ்லிம் இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்தள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றினுள் அனாதரவாகக் கிடந்த பொதியிலிருந்தே நேற்று முன்தினம் மேற்படி நாட்குறிப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பிரபாகரனின் கையெழுத்தினாலேயே எழுதப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அந்த நாட்குறிப்பேட்டின் முன் பக்கத்தில் அவருடைய பெயர் விலாசம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவ்வாண்டு கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது மேற்கொள்ளவிருந்த தாக்குதல் திட்டம் போன்றன குறித்த பல தகவல்கள் மேற்படி நாட்குறிப்பேட்டில் எழுதப்பட்டிருந்தன.
இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் வடக்கிலுள்ள இராணுவ முகாமொன்றில் சேவையாற்றி வருபவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் விடுமுறைக்காக வீடு திரும்பும் போதே மேற்படி பயணப் பொதியினை பஸ்ஸிலேயே விட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பதுங்கு குழியொன்றிலிருந்தே மேற்படி நாட்குறிப்பேட்டினைக் கண்டெடுத்ததாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இது பிரபாகரனுடையது என்ற சந்தேகிக்கப்பட்டே தான் அதனை எடுத்துக்கொண்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். அத்துடன் கடந்த வருட சுதந்திர தினத்தன்று புலிகள் இயக்கத்தினரால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை முன்னெடுத்த புலி உறுப்பினரின் பெயர் மற்றும் விபரங்கள் அந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களது விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த மேற்படி நாட்குறிப்பில் பிரபாகரனுடைய புகைப்படம் அவ்வியக்கத்தினரால் பயன்படத்தப்பட்ட அதி தொழிநுட்பம் வாய்ந்த ஆயுதங்களின் புகைப்படங்கள் பயிற்சி பெறும் போராளிகளின் புகைப்படங்கள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த நாட்குறிப்பேட்டினை எடுத்துச் சென்ற இராணுவ வீரர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
Mathialahi
சொல்லுறவன் சொன்னால் கேக்கிறவன் என்ன கேணையனா? தலைவர் டயறி எழுதித்திரியும் அளவுக்கு தெளிவாக இந்திருக்கிறார் என்றே சொல்லவாறியள்? உப்பிடி எத்தனை புளுடாக்கள் விடுவினம். எதிர்த்தக் கேள்விகேட்க யார் இருக்கிறார்கள்?