பாராளு மன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டுமென ஐ.தே.க. எம்.பி.ஜயலத் ஜயவர்த்தனா கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசின் அழைப்பிற்கிணங்கவே இலங்கையில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் மனிதாபிமானப் பணிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பதும் ஒன்று.
ஆனால், வவுனியா அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் பல உறவினர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களைக் கண்டு பிடித்துக் கொடுக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சர்வதேசத்திற்கு அரசு இவ்வாறு தடை விதித்திருப்பது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் காணாமல் போனால் நாம் எப்படித் துடிப்போம் அதே நிலைதான் தமிழ் மக்களுக்கும் இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.
வவுனியா அகதி முகாம்களில் குடிநீர், போஷாக்கு, மருத்துவம் உணவு விடயங்கள் தொடர்பில் நாம் திருப்திப்படமுடியாத நிலையே காணப்படுகின்றது. அந்த முகாம்களில் தினமும் 10 முதல் 15 வரையான முதியவர்களும், சிறுவர்களும் மருத்துவ வசதிகளின்றி உயிரிழக்கின்றனர். இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த முகாம்களில் 3500 கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். இவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் மீண்டும் அந்த முகாம்களுக்கே அனுப்பப்படுகின்றனர். அங்குள்ள நிலைமையில் அந்தக் குழந்தையை பராமரிக்கவோ, அரவணைக்கவோ முடியாது.
அகதிமுகாம்களுக்கு செல்வதற்கு எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. நான் பல முறை முயன்றும் எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே, பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அகதிமுகாம்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட அரசு அனுமதி வழங்க வேண்டும்.
msri
எதற்கு அனைத்துக் கடசிக்குழு? செஞசிலுவைச் சங்கம்? எங்களால் முடியாததது எதுவுமில்லை! அகதிமுகாம்களில் வசந்தம் வீசுகின்றது என> பகவான் டக்ளஸ்> கருணா அம்மன் போன்ற சீவகாருண்ணிய பெருந்தகைகள் கண்ணுற்று வந்து அறிக்கைகளாக தந்துள்ளனர்! இதற்குள் நீங்களும் போய் வந்து எங்களைக் குழப்பவோ?
thevi
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் இடம் பெயர்ந்த பொதுமக்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களில் நீண்ட நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடும் என்று தாங்கள் கவலைப்படுவதாக, இலங்கையின் பணிபுரியும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களில் இருக்கக்கூடிய இடம்பெயர்ந்த பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அரசு குறிப்பிட்டிருக்கும் ஆறு மாத காலத்துக்குளேயோ அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள்ளோ தமது சொந்த இடங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை இராணுவம் எதிர்பார்க்கவில்லை என்று இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியான மார்க் கட்ஸ் தெரிவிக்கிறார்.
இந்த இடம்பெயர்ந்த நிலையிலிருக்கும் மக்கள் ஆறு மாதங்களுக்குள்ளோ அல்லது இந்த ஆண்டின் முடிவுக்குள்ளோ இந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வார்கள் என்று அரசு தங்களுக்கு உறுதியளித்துள்ள போதிலும், தமக்கு இது தொடர்பில் மாறுபட்ட சமிக்னைகளே கிடைக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது அங்கிருக்கும் கூடாரங்களை நிரந்தர கட்டிடங்களாக மாற்றியமைக்கும்படி அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தம்மிடம் தெரிவிக்கிறார்கள் என்றும், மூத்த இராணுவ அதிகாரிகளும்கூட, அடுத்த ஆறு மாதங்களில் பெருமளவிலான மக்கள் தமது இடங்களுக்கு திரும்புவார்கள் என்று தமக்கு தோன்றவில்லை என்று கூறுவதாகவும் ஐக்கிய நாடுகளின் அதிகாரியான மார்க் கட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும் அங்குள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரையில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறுகிறார்