ஐரோப் பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு 43 சதவீதமாக அமைந்திருந்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் நேரடித் தேர்தல் ஆரம்பித்த நாளிலிருந்து மிகக் குறைவான வாக்களிப்பு இந்த முறைதான். வாக்காளர்கள் பலர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும், வாக்களித்துள்ளவர்களும் கூட பெரும்பங்கில் தேசிய அரசியல் காரணங்களை முன்னிட்டே வாக்களித்துள்ளதாகவும் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனைப் பொறுத்தவரையில், ஆளும் தொழிற்கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மோசமான முடிவு, பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வாரம் அமைச்சர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், கோர்டன் பிரவுன் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் ஓங்கிவருகின்றன. இளநிலை அமைச்சரான ஜேன் கென்னடி அரசாங்கத்தில் இருந்து கடைசியாக விலகியிருக்கிறார்.