ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து 6ஆம் திகதி முடிவு – பிரபா கணேசன்

sri-lanka-provincial-council.jpgஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் இறுதி முடிவு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்படுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும். மேல்மாகாணசபை உறுப்பினருமான பிரபாகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தலைவர் மனோகணேசன் தலைமையில் எமது மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புகள் தற்சமயம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்கூட்டத்தில் நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை, எமது கட்சி முன்னேடுக்கவேண்டிய நடைமுறைகள், மேல்மாகாண சபைத்தேர்தலில் பெறப்பட்டுள்ள மாபெரும் வெற்றி ஆகிய விவகாரங்கள் ஆராயப்பட்ட உள்ளதுடன், ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்கப்படும்.

மத்திய, மேல், சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்களை தொடர்ந்தும் நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென பதுளை மாவட்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பில் கடந்த வார இறுதியில் ஊவா மாவட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு தலைவர் மனோ கணேசனை சந்திந்து உரையாடியுள்ளது.

எமது கட்சியின் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசிய கூட்டணியில் போட்டியிடுவதா என்ற இரண்டு கருத்துகள் கட்சிக்குள்ளே நிலவும் அதேவேளையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் எமது ஆதரவை ஏனைய சில மலையக கட்சிகள் மற்றும் குழுவினர் கோரியுள்ளனர்.

இவ்வாறு ஆரம்பத்தில் நடைபெற்ற தலைமைக்குழு கூட்ட தீர்மானத்தின் படி இது தொடர்பில் பொது செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன், உப தலைவர் பி.ஜெயபாலன். தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன். நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள், கண்டி மாவட்ட அமைப்பாளரும், ஜ.தொ.கா. நிர்வாக செயலாளருமான அய்யாசாமி இராமலிங்கம், நுவரெலியா மாவட்ட துணை அமைப்பாளர் முரளி ரகுநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை தலைவர் நியமித்துள்ளார். இக்குழுவின் சிபாரிசுகளின்படி மத்தியகுழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *