தனி ஈழம் என்ற கருத்தியல் சிந்தனையினை தேசிய, சர்வதேச ரீதியாக தோற்கடிக்க வேண்டும் : ஐ.தே.க. எம்.பி.

dayasiri-jayasekara-000.jpgபயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று தற்போது எழுந்து வருகின்ற தனி ஈழம் குறித்த கருத்தியல் ரீதியிலான வாதமும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதும் தேசிய அபிவிருத்தியுமே இன்றைய உடனடித் தேவையாகும். இந்நிலையில் ஈழக் கோரிக்கை விடுக்கின்ற அரசியல் கட்சிகள் எதுவாயினும் அதனை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றி குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 29 நாடுகள் ஆதரவளித்துள்ளன என்பதற்காக அந்நாடுகளுடன் உறவையும் ஏனைய நாடுகளுடன் பகையையும் வளர்த்துக் கொள்ள முடியாது.
அதேபோல் இந்தியாவும் அமெரிக்காவும் நேச நாடுகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவுடன் உறவும் அமெரிக்காவுடன் பகையும் என்று இருக்க முடியாது. எனவே ஐரோப்பிய நாடுகளுடன் பகைமை வளருமாயின் எமது நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய அடி விழுந்து விடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே சர்வதேசத்துடன் ஒத்துப்போகின்ற வகையில் அரசு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்ததாகும்.

இன்று நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஈழக் கோரிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற ஒரு விடயமாக மாறி வருகின்றது. வட பகுதி மக்களிடத்தில் ஈழம் என்ற சிந்தனையும் கனவும் இன்னும் நிலைபெற்றுள்ளது. இது பாரதூரமானதாகும். இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டிய பொறுப்பும் அவர்களின் சகவாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

அதேவேளை அந்த மக்களின் மனங்களில் பதிந்துள்ள தனி ஈழம் என்ற சிந்தனையை துடைத்தெறிந்து யாவரும் இலங்கையரே என்ற தன்மையை உருவாக்க வேண்டும். அதேபோல் தேசிய மட்டத்தில் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஈழம் தொடர்பான கோரிக்கையும் அது தொடர்பான கருத்தியல் சிந்தனையும் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர நோக்குடனும் செயற்பட்டு முறியடிக்க வேண்டும். இதற்கு நேர்மையான அரசியல் தீர்வு அவசியமாகும். அதிகாரப் பகிர்வு என்பதும் கிரமமான முறையில் அமைவதும் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதும் அரசாங்கத்தினது பாரிய கடமையாகவுள்ளது.  என்றார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *