இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலை முன்வைப்பதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் ஒரு முக்கியமான கட்டத்தைத் தாண்டிவிட்டது. அதுதான் ஜெனீவா நகரில் நேற்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை முன்வைத்த தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த மாநாட்டில் இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐரோப்பிய யூனியன் சமர்ப்பித்த பிரேரணை. அடுத்தது இலங்கை முன்வைத்த பிரேரணை.
இந்த வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. கடந்த முறை 18 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தபோதும் இம்முறை அது 12 ஆகக் குறைந்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாகவே மறுத்துரைப்பதற்கும் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த மாநாடு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்தது. எமது படைவீரர்கள் இராணுவ ஒழுக்க விழுமியங்களைப் பேணி சிவிலயன்களுக்கு மிகக் குறைந்த இழப்புக்களோடு புலிகளுக்கெதிரான போரில் வெற்றி பெற்றதை உலக நாடுகள் பாராட்டியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.