விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளும் – வீரகேசரி வாரவெளியீடு

idps200_1.jpgஇலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.

இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.

இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் “ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, “இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்” என எச்சரித்துள்ளார்.

“”இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்” என்று நோர்வே கூறியுள்ளது. “”இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்” என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது.

Show More
Leave a Reply to thevi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • thevi
    thevi

    இது வரை புலிகளின் ஊதுகுழலாய் இருந்து விட்டு இப்போது தமிழர்களின் உரிமைகள் பற்றி எழுதுவதில் என்ன பலன்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அப்போ நேற்றுவரை அரசின் ஆதரவுகளாக இருந்து விட்டு இன்று தமிழர்களின் உரிமை பற்றி பேசலாம் என்கிறீர்களா தேவி?

    Reply
  • thevi
    thevi

    எது வீரகேசரியா சாந்தன்?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம் தேவி!

    Reply
  • thevi
    thevi

    உங்களைப் போல் குதர்க்கம் பேசுபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் சாந்தன். புலிகள் மாற்று இயக்கங்களை தங்கள் ஆயுத அச்சுறுத்தல் மோசமான பிரச்சாரம் மூலம் அரசின் பக்கம் ஓட வைத்தார்கள். உங்களைப் போன்றவர்கள் மாற்று இயக்கங்கள் தனித்துவமாய் இயங்கியிருக்க வேண்டும் என த்துவம் பேசுவார்கள். ஈழ அரசியலில் மற்றவர்களுக்கு இருந்தவை இரண்டே இரண்டு தெரிவுகள் தான். ஒன்று புலியின் பக்கம் போவது அல்லது அரசின் பக்கம் போவது. ஈழவிடுதலை தான் தமது நோக்கம் என புலி கருதியிருந்தால் தனது சமூகத்திற்குள்ளே இருந்த ஐக்கியத்தை நாசம் செய்திருக்க மாட்டாது. புலியின் ஜனநாயக மறுப்பு ,சகிப்புத்தன்னையற்ற தன்மை, ஆணவம் ,அரசியல் அறிவின்மை இவை பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள்.

    Reply
  • IHSAN
    IHSAN

    சிறுபான்மை அரசியல் ஐக்கியம் காலத்தின் அவசியம்– பேருவளை – இஹ்ஸான்

    பேரினவாதம் சிறுபான்மையின் சமவாழ்வுரிமையை மறுத்த நிலைகளில் எழுந்த அதன் அரசியல் போராட்டங்களை பலவீனுப்படுத்தியது. ஒரு சிறுபான்மையின் சர்வதிகார ஆயுதப்போராட்டத்தையும் அடக்கிவிட்டு ஆர்ப்பரிக்கிறது. ஒரு சிறுபான்மையின் போராட்டம் சாத்தியமற்ற மதிப்பீடுகளில் கட்டுண்டுபோனதே நடப்புப் போர்காலத்தில் தமிழ்ச் சிறுபான்மையின் குரல்கள் சர்வதேசம் கண்டுகொள்ளாமல் இருக்கத் துணைபோனது. பிரிந்துவாழ்வதே எமது தேர்வு என்ற தமிழ் சிறுபான்மையின் சிந்திப்பிலிருந்து வேறுபட்டதே முஸ்லீம் சமுகத்தின் சமவாழ்வுரிமைப் போராட்டம் கட்டியெழுப்பப்பட்டது. இனி தமிழ்ச்சிறுபான்மை இலங்கையின் சிறுபான்மையினம் என்ற யதார்த்தத்தினை உள்வாங்கி தம் அடைவுகளுக்கான முயற்சிகளை சிந்திக்க நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இது இருசிறுபான்மைகளினதும் அரசியலில் கருத்தொற்றுமைக்குச சார்பாக நோக்கப்படவேண்டும். ஏனெனில் தமிழ்ப் பிரிவினைவாதமற்ற இலங்கை அரசியற் சூழல் இருசிறுபான்மைகளுக்கும் கடும்போட்டியைத் தோற்றுவிக்கும். இச்சூழலில் சிறுபான்மையினது இஸ்திரமான அரசியலுக்கு சிறுபான்மையின் இன ஜக்கியம் காலத்தின் அவசியமாகக் கருதுகிறேன். ஏனெனில் பேரினவாதத்தின் அதிகாரப்பலத்தை ஒரு வரையரைக்குள் நெசிக்கி வைக்க சிறுபான்மையின் அரசியல் ஜக்கியம் புரிந்துகொள்ளப்பட வேண்டியதொன்று.

    Reply