நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்தியமைக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் – தென்மாகாண முதலமைச்சர்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் சமாதானத்தை முழுமையாக நிலை நிறுத்தியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நோபல் பரிசு பெற அருகதையுள்ளவர். எனவே அவரது செயற்பாட்டில் சமாதானத்தை நிரந்தரமாக நிலை நிறுத்தியமைக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும். இதற்காக முழு உலக நாடுகளும் அழுத்தங்களை வழங்க வேண்டும் என தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா காலியில் வைத்துக் கூறினார்.

கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென் மாகாண சபையினால் காலியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் ஜனாதிபதிக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

நாடு சுதந்திரமடைந்து 61 வருடங்களாகின்றன. எனினும் இதுகாலவரை இனங்களிடையே உண்மையான சமாதானம் ஏற்படவில்லை. சமாதானமாக மக்கள் வாழ்கின்றார்கள் எனக் கூறிய போதும் ஒரு இனம் இன்னொரு இனத்தை சந்தேகங்களுடனேயே நோக்கினர். ஏதாவது ஒரு தீய சக்தி நாட்டையும் இனங்களையும் குழப்பி தவறான வழிநடத்தல்களிலேயே ஈடுபட்டனர். இதற்குக் காரணம் அரசியல் பேராசையேயாகும்.

அதேநேரம் பிரிவினைவாதிகளும் தோன்றி நாட்டை கூறுபோட முனைந்தனர். அதற்காக எந்தப் பயங்கரவாதங்களையும் மேற்கொள்ள அவர்கள் பின் நிற்கவில்லை. உலகமே எதிர்பாராத விதத்தில் இந்த யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த கடந்த மூன்றரை வருட காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரவு பகலாகப் பாடுபட்டார். படையினரும் அவருக்குத் துணையாக நின்றனர்.

இவ்வாறான வெற்றிகளுக்கு நாட்டின் தலைவருக்கு அரசியல் சாணக்கியம் இருக்க வேண்டும். எமது ஜனாதிபதிக்கு அது இருந்ததாலேயே அவர் வெற்றி பெற்று சமாதானத்தை நிலை நாட்டியுள்ளார். அவரது கரிசனை மிக்க உரை நாட்டு மக்களை மேலும் கவர்ந்து விட்டது. இந்த நாட்டில் தேசப்பற்றுள்ள மக்களும் அவ்வாறில்லாத மக்களுமாக இரு வகையான மக்களே இருக்கின்றனர். சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற வார்த்தைகள் என்றோ அகராதியிலிருந்து எடுத்தெறியப்பட்டு விட்டது. இந்த வார்த்தைகளிலிருந்து அவரது பெருந்தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது. அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது அவசியமாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    கிடைத்தது+கிடைக்கப்போவதுகள்> போதாதோ? இதற்குள் நோபல்பரிசில்லாத கவலை> முதலமைச்சருக்கு!

    Reply