இலங்கைத் தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு : ஜெயலலிதா வலியுறுத்தல்

j-j-j.jpgஇலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர் களுக்கு போட இந்திய ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி தவிக்கின்றனர். இலங்கை அரசின் இந்த இனவெறித் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கடுமையாக கண்டித்துள்ளன. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது குண்டுகளை வீச வேண்டாம் என அமெரிக்க அதிபர் கூட இலங்கை அதிபரை வற்புறுத்தியிருக்கிறார்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். எத்தனையோ தலைமுறைகளாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் வகையில் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அந்தத் தீர்வு நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும் என்ற உளப்பூர்வமான சிந்தனை கருணாநிதிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் சிறிதும் இல்லை. இலங்கை அதிபரோ யார் சொன்னாலும் போரை நிறுத்தப் போவதில்லை என்று கூறி வருகிறார்.

போரில் எவ்வளவு தமிழர்கள் மடிந்தார்களோ அதைவிட பல மடங்கு தமிழர்கள் பசியால், பட்டினியால் செத்து மடிவார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் விமானத்தில் இருந்து உணவுப் பொட்டலங்களைப் போட, இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவம் எவ்விதத் தயக்கமும் இன்றி, சமைத்த உணவையும், காய்கறிகளையும், பழங்களையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் ஏர் டிராப் செய்ய, அதாவது விமானம் மூலம் வானத்தில் இருந்து போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால், எங்கள் சொந்த உறவான தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பட்டினிச் சாவிற்கு உள்ளாக நேரிடும்.

எனவே எனது இந்த வேண்டுகோளை புறந்தள்ளாமல், கால தாமதம் ஏதும் இன்றி நடவடிக்கை எடுத்து, தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு முன்வர வேண்டும். இது நாள்வரை செய்த வரலாற்றுப் பிழைகளுக்கு ஒரு பிராயச்சித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை இந்திய ராணுவம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    விமானம் மூலம் உணவு வகைகளை கொட்டுவது நடைமுறையில் யுத்த மற்றும் அழிவு பகுதிகளில் நடைபெறும் ஒரு செயல். இது மிகுதி மக்களையாவது காப்பாற்றும். பசியோடும் பட்டினியோடும் அந்த மக்கள் படும் அவலம் குண்டு வீச்சுகளை விட சொல்லொண்ணா துயரத்தை தருவது. ஜெ சொல்வது நடைமுறை சாத்தியமானது. உடனடியாக அதையாவது செய்யலாம்.

    சாத்தியமற்ற பேச்சுகளை விட சாத்தியமான ஒன்றை செய்வது வரவேற்கத்தக்கது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மாயா
    இதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளது. உணவுப் பொதிகளை போடும் போது தாழ்வாகப் பறந்தே போட வேண்டும். அது தற்போதைய நிலையில் ஆபத்தானது. மும்மூரமாகச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய தேர்தல் முடிவுகளும் வெளிவரக் கூடிய நிலையில், இப்படியொரு செயற்பாட்டைச் செய்ய முனைந்தால், அந்த விமானத்தை அரசோ அல்லது புலிகளோ சுட்டு வீழ்த்திவிட்டு அடுத்தவர் மேல் பழியைப் போட முயற்ச்சிக்கலாம். இன்று உணவுப்பொதியை போடச்சொல்லும் ஜெயலலிதாவே நாளை ஏதாவது விபரீதம் நடந்தால் மத்திய அரசை விமர்சிக்கவும் செய்வார். அத்துடன் அப்படிப் போடப்படும் உணவுப்பொதிகளை புலிகள் மக்களை எடுக்க விட மாட்டார்கள். யாழ்ப்பாணத்திலும் இந்திய விமானப்படை போட்ட அனைத்து உணவையும் புலிகளே பறித்தெடுத்தனர். எதையும் இலகுவாகச் சொல்லலாம்.

    Reply
  • மாயா
    மாயா

    உங்கள் கருத்து யதார்த்தமானது பார்த்திபன்.

    நாளைக்குள் அல்லது நாளை மறுநாள் மோதல்கள் முடிந்து போகலாம் போல் இருக்கிறது. அப்படியான தகவல்களே மோதல் பிரதேசத்தில் இருந்து கிடைக்கின்றன. சூசை குடும்பத்தினரது வெளியேற்றம் அதை நாசூக்காக நமக்கு தெரிவிக்கிறது.

    மோதல்களின் பின் மக்கள் உணவுக்காக மட்டுமல்ல அனைத்து தேவைக்காகவும் நிச்சயம் கஸ்டத்தை எதிர் நோக்குவார்கள். உடனடி தேவைகளை சிறீலங்கா அரசு 100 சதவீதம் உடனடியாக செய்யும் என எதிர்பார்க்க முடியாது. மக்கள் சோர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். பல பகுதிகளில் இருந்து உதவிகள் வரும் போது அவர்களது மனதில் தெம்பு பிறக்கும்.

    இந்திய தேர்தல் முடிவுகள் வந்த பின்தான் உணவு பொதிகளை அல்லது உதவிகள் கிடைக்கும். அதற்கு முன் சாத்தியமில்லை. தமிழகத்தில் ஜெ வருவார். மத்திய அரசை அமைப்போர் யாராக இருந்தாலும் அவரது உதவி நிச்சயம் தேவை. எனவே அவர் விருப்பம் நிறைவேற்றப்படலாம். எனவே உதவிகளை விமானத்தில் இல்லாமல் கப்பலில் கொண்டு போனாலும் பரவாயில்லை.

    வெளிநாடுகள் உதவிகளை , அரசுக்கு நேரடியாக வழங்காமல் , உதவி நிறுவனங்கள் மூலமே (ICRC , UN) வழங்குகின்றன.

    எனவே முக்கிய உதவி நிறுவனங்களைத் தவிர , ஏனைய உதவி நிறுவனங்கள்,முகாம்களுக்கு உள்ளே போய் பணியாற்ற யுத்தம் முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இது ஒரு புறத்தில் மக்களுக்கான உதவி வழங்கலை அரசு தாமதமாக்கியுள்ள நிலையில், அரசின் பாதுகாப்புக்காக இதை நம்மால் புரிந்து கொள்ளவே வேண்டியுள்ளது.

    தவிரவும் யுத்தம் முடியும் வரை , வந்துள்ள மக்களது பாதுகாப்பு மற்றும் தகவல்கள் வெளியே செல்லாமல் இருக்க அரசு இந்த விதி முறைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசு கூறுகிறது. இப்படியாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், அடுத்த சில வாரங்களில் சுமூக நிலைக்கு வரலாம்.

    Reply