முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருப்பினும் அரசாங்கம் அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் (2010) பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளது. எனவே, எந்தத் தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க ஐ.தே.க. தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி ஜானக்க ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையிலேயே எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வின் வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார். முதலில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலையே அரசு நடத்தவேண்டும். ஆனால், அது ஜனாதிபதித் தேர்தலை முன்னதாக வைக்க தீர்மானித்துள்ளது. ஐ.தே.க. எந்தவொரு தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க எப்போதும் தயாராகவே உள்ளதென்றார்.