அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுகிழமை சென்னையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது தமிழகம் அவரது குடும்பத்தினர் இதயத்தில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது என நினைவுகூர்ந்ததோடு, இலங்கைப் பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கினார்.
1987 இலங்கை இந்திய ஒப்பந்ததின் வரையறைக்குட்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமையும் சம அந்தஸ்தும் பெற்றுத்தருவதே காங்கிரசின் லட்சியம் என்று கூறினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.
தவிரவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிவருவதாகவும் சோனியா காந்தி கூறினார்.
அதாவது மத்திய அரசின் விடாமுயற்சியின் காரணமாகத்தான் இலங்கை அரசு போர் நிறுத்ததினை அறிவித்திருப்பதாகவும், போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள மக்கள் அனைவரையும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் அவர்களை குடியமர்த்திவிடவேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக இருப்பதாகவும் சோனியா கூறினார்.