வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 148 குடும்பங்களைச் சேர்ந்த 555 பேர் இன்று (11) மன்னார், முசலி பிரதேசங்களில் உள்ள 11 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு நேற்று தெரிவித்தது.
இவர்களை வந்தாரவேளி, கூழாங்குளம், மருதமடு, சில்லமுள்ளச்சி மற்றும் பூநொச்சிகுளம் ஆகிய கிராமங்களில் மீள்குடியேற்ற சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களில் 80 வீதமானவர்களை டிசம்பர் 31ம் திகதிக்கு முன் மீள்குடியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது- இதன்படி முதலாம் கட்டமாக மன்னார், முசலி, சவேரியார்புரம் பிரிவைச் சேர்ந்த 122 குடும்பங்களின் 409 பேர் அண்மையில் மீள் குடியேற்றப்பட்டனர். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீள் குடியேற்றப்பட்டனர்.
இன்று (11) 11 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 5 கிராம மக்களே மீள்குடியேற்றப்பட உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது. மீள்குடியேற்றப்படும் மக்களை தங்க வைப்பதற்கென தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ள தோடு குடிநீர் வசதி, மின்சார வசதி என்பனவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. இவர்களுக்கு குடிநீர் வசதி அளிப்பதற்கென நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிப்பதற்கென இ. போ. ச. பஸ்கள் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதோடு வீதிகள், அரச கட்டடங்கள் என்பனவும் இங்கு அமைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் சுயமாக வியாபார செயற்பாடுகளில் ஈடுபடவும் உதவிகள் வழங்கப்பட உள்ளன எனவும் அமைச்சு தெரிவித்தது. இன்றைய நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், உட்பட பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.