யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமாதான முன்னெடுப்புக்களுக்கு ஆதரவளிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீ ரவிசங்கரிடம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் சமாதான முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க முடியும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ஸ்ரீ ரவிசங்கரிடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். சமாதான முன்னெடுப்புக்களுக்கு மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஸ்ரீ ரவிசங்கர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து அல்லலுறும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா போதியளவு உதவிகளை வழங்கவில்லை என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குற்றம் சுமத்தியுள்ளார்.