தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது ! இடிக்கப்படமாட்டாது ! இன்னுமொரு இன மத கலவரத்துக்கு நெய்வார்க்கும் புலித்தோல் போர்த்த நரிகள் !

கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது கடவுளை மனிதன் படைத்தானா என்றால் கடவுளை மனிதன் படைத்தான் என்பதற்கு தையிட்டி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புத்தரா, சுத்தரா, யேசுவா, சிவனா, இல்லை தமிழ் கடவுளா, சிங்களக் கடவுளா, அல்லது கூறுகெட்ட கடவுளா என்றால் இந்த நாசமறுத்த மதங்களால் மனுசன் மிருகமானது தான் மிச்சம். மதங்கள் மனுசனின் மனிதாபிமானத்தின் கடைசிச்சொட்டு ஈவிரக்கத்தையும் வற்றச்செய்து மற்றையவனின் இதயத்தை பிளந்து தின்னும் வெறியோடு திரிகின்றனர்.

நாலு பேரை ரயரைப் போட்டு உயிரோடு கொழுத்தினால், அந்த மனிதக் கொழுப்பு எரிகின்ற வாசனையில் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு ஒரு கூட்டம் தவிக்கின்றது. இந்த வாசனை இலங்கை மக்களுக்கொன்றும் புதிததல்ல. அதிகார வெறிகொண்ட சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் கொலை அரசியலில் மிகக் கைதேர்ந்தவர்கள். இலங்கையின் வரலாற்றில் படுகொலைகள் அத்தனையும் அரசியல் தலைமைகளினால் ஊக்குவிக்கப்பட்டு, அரசியல் லாபங்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டன. 2009 ற்குப் பின் உயிர்கள் கொல்லப்படவில்லை, தங்களுடைய அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்ற தவிப்பு குறும் தேசியவாத தமிழ், சிங்கள அரசியல் தலைவர்களிடம் தற்போது மேலோங்கி நிற்கின்றது. தமிழ், சிங்கள குறும்தேசியவாதத் தலைமைகள் என்னவிலை கொடுத்தும் தங்கள் இருப்பைத் தக்கவைப்பார்கள். அதற்கு அவர்களுக்கு இப்போதுள்ள ஒரே துருப்புச்சீட்டு தையிட்டி விகாரையும் ஒரு மத – இனக் கலவரமும்.

சிங்கள இனவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறையாதவர்கள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி. இவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு, தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டே இவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவரை முதுகில் குத்தியவர்கள். அப்போது இவர்கள் வே பிரபாகரனின் துப்பாக்கிக்கு கட்டுப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தார்கள். 2009 யுத்தம் மிகத் தீவிரம் பெற்ற காலத்தில் இவர்கள் யாரும் நாட்டில் இல்லை. இவர்கள் எல்லோருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படப் போகின்றார்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்படுவார் என்ற விடயம் 2009 முற்பகுதியிலேயே தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதனை அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் 2009 முற்பகுதியில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

இறுதி யுத்தம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லை மதி கூறுகையில்: இரா சம்பந்தன் வே, பிரபாகரனின் மறைவுச் செய்திக்காக எப்படிக் காந்திருந்தார் என்பதையும் பஸில் ராஜபக்சவோடு இடம்பெற்ற உரையாடலையும் குறிப்பிட்டிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவரும் அழிக்கப்படப்போகிறார்கள் என்பது இவர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அதன் தலைவர்களையோ காப்பாற்ற இன்று தங்களை விடுதலைப் புலிகளாக சித்தரிக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோ, செல்வம் அடைக்கலநாதனோ, சிவஞானம் சிறிதரனோ (அப்பொழுது இவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.) இதற்காகத் துடிக்கவில்லை.

இவர்கள் யாழ் குடாநாட்டு கிணறுகளில் மலசலம் கலந்து மக்கள் நோய்வாய்ப்படுவது பற்றியும் எவ்வித கவலையும் கிடையாது. அந்தக் குடிநீருக்கும் மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றலுக்கும் ஆப்பு வைத்தவரே சிவஞானம் சிறிதரன் மற்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்ற பா உ க்கள். இவர்களுக்கு தையிட்டியில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரின் காணிகள் இழக்கப்பட்டது பற்றி எவ்வித அக்கறையும் கிடையாது. பா உ சிறிதரன் போன்றவர்களால் முண்டு கொடுத்து நிறுத்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையில் தான் இந்த விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைக்கு துடிக்கும் நீங்கள் அன்று அதனை நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 1000 விகாரைகள் கட்ட திட்டம் போட்ட சஜித் பிரேமதாஸாவை ஆதரித்த தமிழரசுக் கட்சியில் தான் எஸ் சிறிதரன் இன்றும் தொங்கிக் கொண்டுள்ளார்.

சென்றவாரம் இந்த விகாரை உடைப்பு போலித் தமிழ் தேசிய பா உ க்கள் சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியைச் சந்தித்து உள்ளது. தமிழ் – சிங்கள பகுதிகளில் உள்ள இனவாத சக்திகளுக்கு, இப்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டு வருகின்ற புரிந்துணர்வும், ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே ஏற்படுகின்ற நெருக்கமும் பெரும் பதற்றத்தையும் தங்களுடைய இருப்புக்கே ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது. அதனால் தற்போதுள்ள சுமூகநிலையைச் சீரழிக்க நாட்டில் ஒரு இனக்கலவரம் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால் தான்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தையிட்டி விகாரை உடைத்து அகற்றப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றாற் போல் இவர்களின் பாராளுமன்ற நண்பன் உதயன்கம்பன்பில “தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரையில் தமிழர்களைக் கை வைக்க விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார். இவையெல்லாம் திட்டமிட்டு இனவாதத்தைக் கிளறி இரத்தக் களரியொன்றைக் காண வேண்டும் என இந்த அரசியல் வாதிகள் விடாமுயற்சியில் இறங்கி உள்ளதையே காட்டுகின்றது.

பா உ சிறிதரனின் தமிழரசுக் கட்சிக்கு தையிட்டி விகாரை அங்குரார்பணத்திற்கும் அழைப்பு விடுக்பபட்டிருந்தது. பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் கட்சியில் சட்டத்தரணிகளுக்கா பஞ்சம், அப்படி இருக்கையில் நீதிமன்றத் தீர்ப்புக்க எதிராக விகாரை கட்டப்பட்டதாக சொல்லும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அந்த வழக்கு இலக்கத்தை ஏன் வெளியிடவில்லை.

தையிட்டியில் மக்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியின்றி இராணுவம் புத்தவிகாரை அமைத்தது முற்றிலும் உண்மை. அதனை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் தையிட்டி விகாரையை கட்டிய அரசாங்கத்துக்கு ஒரு தூணாக நின்றவர்களே தற்போது விகாரையை இடிக்கச் சொல்லி குரல் எழுப்புகின்றார்கள்.

மேலும் இவ்விகாரை, நயினா தீவு நாக விகாரையின் விகாராதிபதிக்கும் இராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் கட்டப்பட்ட விகாரையாகும். இந்த விகாரை அமைப்பதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒருவர் தனது 20 பரப்புக் காணியையும் அன்பளிப்புச் செய்துள்ளார். இராணுவம் இவ்வாறான தான்தோறித் தனங்களில் ஈடுபட்டால் அதனைச் சட்டத்தின் மூலம் கையாண்டிருக்க வேண்டும். நீதி மன்றத்துக்கூடாக தடையுத்தரவுகளைப் பெற்றிருக்க வேண்டும். மேல் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும். பாராளுமன்றத்தில் போராடியிருக்க வேண்டும். ஆனால் இந்த தமிழ் தேசிய சட்டத்தரணிகள் இதுவரை சட்டரீதியாக ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு பொலிஸ் முறைப்பாடு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் அவ்வப்போது விகாரைக்கு முன்னால் நின்று படம் எடுத்து போஸ்ற் போடுவதுமாகவே உள்ளனர்.

தங்களுடைய காணிகள் தங்களுக்கு வேண்டும் என்று கோருவதற்கு காணி உரிமையாளர்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் ஒரு விகாரை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அதனை உடைக்கக் கோருவது அல்லது அதனை அப்புறப்படுத்தக் கோருவது. ஒரு ஆரோக்கியமான முடிவல்ல. மேலும் இப்போராட்டம் அரசியல் வாதிகளுக்கு அழைப்புவிடுத்து தற்போது அரசியல்வாதிகளின் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தையிட்டி விகாரையை உடைத்து அப்புறப்படுத்தும் போராட்டமாக மாற்றப்பட்டு விட்டது, இந்தப் போராட்டம் காணி உரிமையாளர்களின் கையில் இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் சிவஞானம் சிறிதரனின் இனக்கலவரத்தைத் தூண்டுவதற்கான போராட்டம். அதில் செல்வம் அடைக்கலநாதனும் தெற்கில் உதயகம்பன்பிலவும் இணைந்தகொண்டுள்ளனர்.

இந்த விகாரை கட்டப்பட்டதற்கும் சிவஞானம் சிறிதரனுக்கும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கும் இருக்கும் சம்பந்தம் கூட தேசிய மக்கள் சக்த்தி அரசாங்கத்துக்குக் கிடையாது. அவர்கள் மதம் என்பதை மக்களுக்கு போதையூட்டும் ஒரு நிறுவனமாகவே பார்க்கின்றனர். அதனால் தான் நாக விகாராதிபதியைக் கூட ஜனாதிபதி அனுர சென்று சந்திக்கவில்லை. நாக விகாராதிபதி அனுரவை நம்பமுடியாது என்றும் அவர் மத நம்பிக்கையற்றவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த மிக முக்கியமான பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், போராளி தமிழ் கவி அம்மா மாவீலாறு அணை விளையாட்டாக மூடப்பட்டது எவ்விதம் வினையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவை நோக்கிச் சென்றது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் 2006 முதல் பொங்கு தமிழ் நடத்தி போருக்கு அழைத்தபோதும் புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் யாழ்பாணத்து புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் ஷெல் தங்கள் மீது விழாது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு யுத்த போதையேறி நின்றனர். எவ்வளவுக்கு அதிகமாக மக்கள் சாகின்றார்களோ அவ்வளவுக்கு சர்வதேச நாடுகள் தலையீடு செய்து தமிழர்களுக்கு தீர்வுகொண்டு வந்து தரும் என்று முட்டாள்தனமாக நம்பினர். தமிழர்களை வழிநடாத்திய முட்டாள்தனமான அரசியல் தான் தமிழர்களை இந்நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. அதில் யாழ்ப்பாணத்து தமிழ் தலைமைகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் நடந்துமடிந்த யுத்தத்தைப் பயன்படுத்தி நான் உட்பட யாழ்ப்பாணத்து மக்கள் தொகையில் மூன்றில் ஒன்று வெளிநாடு சென்றுவிட்டது. இன்னுமொரு மூன்றில் ஒன்று பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன் போன்று கொழும்பில் ஒரு வீடு யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு என்று வாழ்கிறது. ஆனால் இவர்களை நம்பினால் தையிட்டி குடும்பங்களுக்கு அவர்களுடைய ஆயுட்காலத்தில் காணி கிடைப்பதற்கான வாய்ப்பு கிடையாது.

அதனால் தையிட்டி உரிமையாளர்கள் முதலில் தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மக்கள் நலன்சார்ந்த அரசுக்கு தங்களுடைய பிரச்சினையை விளக்கி, ஆதாரங்களை வழங்கி, ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வரவேண்டும். அந்தத் தீர்வு இனிமேல் விகாரையை இடித்து காணியைத் தர வேண்டும் என்று கோருவதாக இருக்க முடியாது. ஏனெனில் அது இலங்கையில் இன ஐக்கியத்தை சீர்குலைப்பதுடன் எதிர்காலத்தில் தவறான முன்ணுதாரணமாக அமையும். தையிட்டி விகாரை தமிழ் மக்களின் இன ஐக்கியத்துக்கான சமிக்ஞ்யையாக அடையாளமாக மாற வேண்டும். விகாரைக்கு மிக அவசியமான காணியைத் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பாலும் அனைத்து பௌத்தர்களும் உடன்படுகின்றனர். தமிழ் மக்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் விகாரையை உடைக்க வேண்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துவிடவில்லை. இதனை வைத்து சுயநல அரசியலை முன்னெடுப்பவர்கள் இதிலிருந்து ஒதுங்கினால் மக்களே தங்களுடைய பிரச்சினையை சுமூகமான விழியில் தீர்த்துக் கொள்வார்கள். அதனால் விகாரை உடைக்கப்படக் கூடாது. உடைக்கப்பட மாட்டாது.

தமிழகம் ஒரு காலகட்டத்தில் பௌதத்திற்கு மாறிய போது தமிழகத்திற்கு அருகிலிருந்த வட இலங்கையிலும் பௌத்தம் பரவியது. இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டுவந்தவர்கள் தமிழர்களே. அதனால் வடபகுதியில் பௌத்த மத வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. பௌத்தம் தமிழர்களுடைய மதம். அதன் பின்னரே அது சிங்களவர்களுடைய மதமானது. ஆனாலும் இந்து சமயமமும் பௌத்தமும் மிகுந்த உறவைக்கொண்ட சமயங்கள். இந்து சமய சாமிகளின் படங்கள் திருவுருவங்கள் இல்லாத பௌத்த விகாரைகள் இலங்கையில் இல்லை.

1980க்கள் வரை யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்தனர். அவர்களுடைய பேக்கரித் தொழில் மிகச் செழிப்பாக இருந்தது. யாழில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், வடக்கைவிட்டு துரத்தப்பட்டனர். பின்னர் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தையும் வடக்கையும் விட்டு துரத்தப்பட்டனர். அவர்கள் தங்களுடைய காணி, நில புலங்களை விட்டுவிட்டுத்தான் சென்றனர். வன்னியில் அரச காணிகள் யாழ்ப்பாணத்தாருக்கு வழங்கப்பட்ட போது மலையகத்திலிருந்து வந்த காணியற்ற மக்களுக்கு யாழ்ப்பாண அதிகாரிகள் காணிகளை வழங்கவில்லை. இன்றும் அந்த மக்கள் காணி அற்றவர்களாகவே வாழ்கின்றனர். யாழ்ப்பாணத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற, வன்னி, மலையகம், கிழக்கு மக்கள் போராடி மாண்டனர். யாழ்பாணத்தார் வெளிநாடு சென்றனர். இந்த அரசியலை ஜி ஜி பொன்னம்பலம் செய்தார். இப்போது அவருடைய பேரன் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் செய்கின்றார்.

வெள்ளாளர் வாழும் இடங்களில் ஒடுக்கப்பட்டசமூகத்தவர் காணிகளை வாங்க அனுமதிப்பதில்லை. இன்றும் ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் சாமிக்கு எட்ட நிற்பதற்காக பல விதிமுறைகள் உள்ளது. இன்றும் யாழ் மண்ணில் ஒடுக்கப்படுகின்ற சமூகங்களின், மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு குரல் கொடுக்க ஒரு கஜேந்திரகுமார், ஒரு சிறிதரன், ஒரு அடைக்கலநாதன் கிடையாது. ஆனால் பௌத்த விகாரையை உடைக்க நான் முந்தி நீ மூந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் கரவெட்டியில் உள்ள கன்பொல்ல போன்ற கிராமங்கள் உருவாகத் தான் இந்த வலதுசாரித் தமிழ் தேசியம் வழிகோலும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *