புதுமாத்தளன் – பாதுகாப்பு வலயம்: போதியளவு உணவு அனுப்பிவைப்பு – தட்டுப்பாடில்லை என்கிறது உலக உணவுத்திட்டம்

taking-to-green-ocean.jpgபுதுமாத்தளன் பகுதியில் எஞ்சியுள்ள மக்கள் சீரான முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை யென்ற புலிகள் இயக்கத்தின் குற்றச்சாட்டை உலக உணவுத் திட்டம் நிராகரித்துள்ளது. அங்கு சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 3,328 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதாகவும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கை காரியாலயம் தெரிவித்தது.

புதுமாத்தளனில் உள்ள மக்களுக்கு சீரான முறையில் உணவு அனுப்பப்படுவ தில்லையெனவும், இதனால் அங்குள்ள மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் புலிகள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் அசேட் அஸ்ரத், புதுமாத்தளனுக்கு சீராக உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தவறானது என்று கூறினார். அரசாங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளனுக்கு கப்பல் மூலம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதுவித தடங்கலும் செய்யவில்லை.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதில் சிக்கல் உள்ளது. அதனால் பெருமளவு உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப முடியாதுள்ளது. உணவுப் பொருட்கள் பெரிய கப்பலில் எடுத்துச் சென்று அவை சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு மாற்றப்பட்டு கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சிறிய படகுகளில் 30 தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

புதுமாத்தளனுக்கு உணவுப் பொருட்கள் கிரமமாக எடுத்துச் செல்லப்பட்டு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எதுவும் கிடையாது எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இது வரை 674 மெற்றிக்தொன் அரிசி, 1074 மெற்றிக் தொன் கோதுமை மா, 29 மெற்றிக்தொன் மரக்கறி மற்றும் சீனி, பருப்பு, எண்ணெய், சோயா கலன், சோளம் என்பன அனுப்பப்பட்டுள்ளன. இதேவேளை நேற்று (5) கப்பல் மூலம் புதுமாத்தளன் பகுதிக்கு மருந்து வகைகள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • நண்பன்
    நண்பன்

    என்னதான் போனாலும் புலிகளின்ட கடைக்கில்ல போகுது. புலிகளிட வணங்கா மண் கொண்டு போனதையா புலிகள் விக்கிறாங்கள்?

    Reply