துப்புரவு தொழிலாளர்களை இழிவுபடுத்தி நூதன போராட்டம் செய்த வடக்கின் வேலையில்லாப் பட்டதாரிகள் !
வேலையில்லா பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பின் போது பட்டமளிப்பு விழாவில் அணியும் ஆடைகளுடன் தெருவில் குப்பை அள்ளுதல் மற்றும் தெருவை கூட்டுதல் போன்ற செயற்பாடுகளையும் பட்டதாரிகள் முன்னெடுத்திருந்தனர். இதற்கு முன்னர் சிமெந்து பைகள் சுமப்பது, கட்டிடம் கட்டுவது போன்ற வீதிப் போராட்டங்களையும் வேலையில்லாப் பட்டதாரிகள் அரங்கேற்றினர்.
இதேவேளை குறித்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கு அப்பால் பட்டதாரி மாணவர்களின் கவனயீர்ப்பு செயற்பாடுகள் பலரை முகஞ்சுழிக்க வைத்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது. பொதுவாகவே நமது தமிழ் சமூகத்தில் தொழில் ரீதியான ஏற்றத்தாழ்வுகள் காலாதி காலமாக நீடித்து வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு செயற்பாட்டில் தங்களுக்கு துப்புரவு செய்யும் தொழிலும் குப்பை அள்ளும் தொழிலுமே மீதமிருப்பது போல ஓர் பாவனையை நிகழ்த்தி காட்டி, அந்த தொழில்களை இழிவாக பாவனை செய்வது போல் ஓர் தோற்றத்தை ஏற்படுத்தியதுடன் – குறித்த தொழில்களை செய்யவே தமக்கு பட்டம் வழங்கப்பட்டது போலவும் காட்சிப்படுத்தியிருந்தனர். இது குறித்த தொழில்களை செய்வோரை மேலும் இழிவுபடுத்துவதாக அமைவதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அண்மையில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா கூட ஓர் புலம்பெயர் தமிழரிடம் பேசும் போது நீங்கள் வெளிநாட்டில் கக்கூசு கழுவி காசு சேர்க்கிறீர்கள். நான் இந்த நிலத்தில் கௌரவமாக வாழ்கிறேன் என பேசியிருந்தார். அதே பா.உ இராமநாதன் அர்ச்சுனா வேலையில்லா பட்டதாரிகளிடம் பேசும் போது புலம்பெயர் மக்களிடம் இருந்து பணம் பெற்று புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்போது பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் கூறியிருந்தது வேடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் பட்டதாரிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்பட இலங்கையின் எந்த பல்கலைக்கழகங்களும் தூரநோக்கோ சமூக அறிவோ ஏதுமற்ற வகையில் உற்பத்தி செய்கின்றன என்பதை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் நூதன போராட்டம் காட்டி நிற்கின்றது.
பட்டதாரிகளை தூரநோக்கோ சமூக அறிவோ ஏதுமற்ற வகையில் யாழ் பல்கலைக்கழகமும் – ஏனைய பல்கலைக்கழகங்களும் பட்டதாரிகளை உற்பத்தி செய்கின்றன என்பதை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் நூதன போராட்டம் காட்டி நிற்கின்றது.