நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை – மூவரை பணி நீக்கம் செய்த சபாநாயகர் !

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை – மூவரை பணி நீக்கம் செய்த சபாநாயகர் !

அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் பணி புரியும் பெண் உறுப்பினர்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து உரையாற்றியதுடன் சபாநாயகர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மூவரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் குறித்த பெண் பணியாளர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு விசாரணைகளின் போது, நாடாளுமன்றத்தின் 15 ஊழியர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சபாநாயகர், குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

கடந்த காலங்களை விட அண்மைய காலங்களில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றங்கள் 20 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் பாராளுமன்றம் எனும் நாட்டின் உயரிய பீடம் ஒன்றில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் சர்வசாதாரணமாக நடைபெற்றிருந்தது பலரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. இந்த நிலை இலங்கையின் அரச அலுவலகங்கள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை நீடிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *