கறுப்பினத்தவர் கொலை – மீண்டும் அம்பலமான அமெரிக்கப் பொலிஸாரின் வக்கிரமுகம்
நியூயோர்க் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பினத்தவரான 43 வயது ரோபேர்ட் ப்ரூக்ஸ் என்ற கைதி பொலிஸாரால் தாக்கப்பட்ட காணொலி வெளியாகியுள்ளது. கடந்த டிசெம்பர் 9ஆம் திகதி ரோபேர்ட் ப்ரூக்ஸ் சிறைச்சாலை மருத்துவமனையில்வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார். உடற்கூற்றுப் பரிசோதனையில், அவரது மரணத்துக்கு “கழுத்தை அழுத்தியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல்” காரணம் என உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 13 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஒரு சிறைச்சாலை மருத்துவமனைத் தாதியர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் போது அதிகாரி ஒருவரின் உடல் கமெராவில் பதிவாகிய காணொலியை நியூயோர்க் சட்டத்துறை அதிகாரி 27ஆம் திகதி வெளியிட்டுள்ளார். காணொலியில் ரோபேர்ட்டை மூன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தாக்குவது, அவரின் முகத்திலிருந்து இரத்தம் வடிவது, அவரின் கழுத்தை அதிகாரி ஒருவர் நெரிப்பது போன்ற பல கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
தன்னுடைய காதலியை கொலைசெய்யும் நோக்கில் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் ரொபேர்ட் ப்ரூக்ஸ்க்கு 2017ஆம் ஆண்டு 12ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2020இல் ஜோர்ஜ் பிளெய்ட் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்த காணாலி கறுப்பினத்தவர்களின் மீதான அமெரிக்கப் பொலிஸாரின் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருந்தது. தொடர்தும் ஆங்காங்கே இவ்வாறான சம்பங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் ரோபேர்ட் ப்ரூக்ஸ் தாக்கப்பட்ட காணொலி மீண்டும் பொலிஸாரின் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.