தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!

தன்னுடைய நாட்டுப் பணிப் பெண்ணை அடிமையாக்கிய இலங்கைப் பெண் ராஜதந்திரிக்கு சர்வதேச தொழில் அமைப்பில் நியமனம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த ஹிமாலி அருணதிலக்க, தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி தன்னுடைய வீட்டு வேலைக்கு அழைத்து வந்த பெண்ணை அடிமையாக வைத்து, வேலை வாங்கியமைக்காக, அவருக்கு 6,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த, அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு குழந்தைகளின் தாயான பிரியங்காவை வேலைக்குக் கூட்டிவந்து அவரை ஒரு நாளைக்கு பதின்நான்கு மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை வாங்கிவிட்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு டொலர் வரையே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பிரியங்கா, ஹிமாலியிடம் 2015 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது அவருடைய கடவுச்சீட்டையும் இந்த ராஜதந்திரி கைப்பற்றி வைத்திருந்தார். சிங்களம் தவிர வேறுமொழி தெரியாத பிரியங்கா வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளார். யாருடனும் பழக அனுமதிக்கப்படவில்லை.

இவ்வளவு கொடுமைகளைப் புரிந்ததற்காக பிரியங்காவுக்கு வழங்க வேண்டிய சம்பளம் அதற்கான வட்டி எல்லாவற்றையும் மதிப்பீடு செய்து, ஹிமாலி அருணதிலக்க 5,50,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அவரை அடிமையாக தடுத்து வைத்திருந்த குற்றத்திற்கு மேலும் 1,00,000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதே போன்றதொரு சம்பவம் பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்றது. ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு எதிராக வைக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவிலும் இவர்கள் ஒருவரைத் தடுத்துவைத்திருந்து கொடுமைப்படுத்தியது தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்து இருந்தனர். இலங்கையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. இந்த ராஜதந்திரிகள் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஹிமாலி அருணதிலக்கவுக்கு எதிராகத் தீர்ப்பளித்த போதும் முன்னைய இலங்கை அரசு அவரை ஜெனிவாவில் ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர பிரிதிநிதியாக நியமித்துள்ளது. மேலும் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கும் இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஊழலுக்கு எதிரான அரசாங்கம், நாட்டை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் நேர்மை, ஒழுக்கம் தொடர்பில் கூடிய கவனமெடுப்பதுடன் இவ்வாறானவர்களை அவர்களுடைய பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *