கனடாவுக்கு செல்லவுள்ளோருக்கு செக் வைத்த கனடா – தமிழிலும் வெளியான கனேடிய அரசின் அறிவித்தல் !
அண்மைய காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கனடா நோக்கி விசிட் விசாவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதாண்டி கனடா மோகம் தமிழர் பகுதிகளில் உள்ள மாணவர்கள் இடையே ஆழமாக ஊடுருவி உள்ளதை சர்வசாதாரணமாக அவதானிக்க முடிவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வம் மிக்க பின்தங்கிய நிலையை அடைந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கனடாக்கனவை வளர்த்துள்ள பல இலங்கை வாழ் தமிழர்களுக்கு இடியாய் ஓர் செய்தியை கனேடிய அரசு வெளியிட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.
இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் ‘ரொயிட்டர்’ செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது.
அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தினால் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த 4 மாத இணையவழி விளம்பர பிரசாரத்துக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதனைப்போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகையில் மூன்று பங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.