தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்தவர் சிவாஜிலிங்கம், இவர் தற்போது யாழ்ப்பாணப் பகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் தமிழகம் வந்திருந்த இவரை மத்திய அரசு உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம், பிரதமர் மன்மோகன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் இந்திய அரசியல்வாதிகளைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இது தவறானது. சர்வதேச கடவுச்சீட்டு விதிகளின்படியும் வேறுநாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. ஆனால், சிவாஜிலிங்கம் இந்த இரண்டு விதிமுறைகளை மீறிவிட்டார். அவர் தற்போது தென்சென்னை பா.ஜ.க.வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரம் செய்து வருகிறார்.
அவரது நடவடிக்கை கடுமையான தண்டனைக்குரியதாகும். எனவே, இந்திய அரசியலில் குழப்பம் விளைவிக்க முயன்றுள்ள சிவாஜிலிங்கத்தின் கடவுச்சீட்டை உடனடியாக ரத்துச் செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தந்தியில் சுதர்சனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம். காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகார் மனுக் குறித்து அவர் கூறுகையில்;
“தேர்தலில் பிரசாரம் செய்து, குறிப்பிட்ட கட்சியை வெற்றிபெற வைப்பது எனது நோக்கமல்ல. அழிக்கப்பட்டு வரும் எனது இன மக்களைக் காக்க எந்தெந்த தலைவர்களை சந்திக்க முடியுமோ, ஆதரவைக் கேட்க முடியுமோ அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். அதேபோன்று, பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி, இல.கணேசன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கவே சென்றேன். இந்தியா சட்டம் மற்றும் சர்வதேச கடவுச்சீட்டு சட்டம் எதையும் நான் மீறவில்லை. இதை அரசியல் ஆக்குவது சுதர்சனத்துக்கு நல்லதா கெட்டதா என்பதை அவரே முடிவு செய்யட்டும். உள்ளூர் அரசியல் சர்ச்சைகளில் நான் ஈடுபடவில்லை’ என்றார்.