இலங்கையில் தனி ஈழம் அமைத்துத் தருவேன் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தகுந்த பதிலளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், எந்தவொரு நபருக்கும் வேறு ஒரு நாட்டைத் துண்டாட உதவியளிப்பதாகக் கூறமுடியாது. இந்தியவைத் துண்டாட வெளிநாட்டவர் ஒருவர் உதவுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளுமா? என்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே கேள்வியும் அவர்களுடையதே. பதிலும் அவர்களுடையதே. இதில் தலையிடவேண்டிய அவசியம் எமக்கில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மோதிக் கொள்கின்றனர். இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஓரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
“நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக வாக்களப் பெருமக்களைக் கவரும் விதத்தில் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம்பிள்ளை
முதலில் எனக்கும் – அடுத்ததாக உங்களுக்கும்……