புலிகளின் இறுதி ஏழு நாட்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அந்த ஏழு நாட்களின் மர்மம் இன்றும் தொடர்கின்றது. இன்னும் தொடரும். இது பற்றி இன்னும் பல புனைவுகள் வெளிவரும். உண்மையை அறியவோ தேடவோ தயாரில்லாத போது புனைவுகள் தான் கோலோச்சும். இப்பதிவின் உள்ளடக்கம் யுத்த நாட்களிலேயே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவை. இவற்றைக் கோர்வையாகப் பார்க்கின்ற போது இந்த வன்னி யுத்தத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

வாருங்கள் என்ன அன்று நடந்தது என்பதைப் பார்போம். இப்போது 2000ம் ஆண்டுகளில் ஆரம்பித்த ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காமல் புலிகள் முரண்பட்டுக்கொள்கின்றனர். கருணா அம்மான் 2004இல் புலிகளில் இருந்து பிரிந்து செல்கின்றார். 2006 இல் புலிகள் கோடிகளை வாங்கிக்கொண்டு மகிந்த ராஜபக்சவை வெல்ல வைத்தனர். மணலாற்றில் புலிகள் யுத்தத்திற்கு தயாராகினர். கிழக்கு இழப்புகள் அதிகமின்றி இலங்கை இராணுவத்தின் வசமானது. தொடர்ந்து நடந்த யுத்தத்தில் வடக்கும் இலங்கை இராணுவத்தின் வசமாக ஆரம்பித்தது. புலிகளின் தலைநகரான கிளிநொச்சி 2009 ஜனவரியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

2009 ஏப்ரலில் பிரபாகரன் முல்லைத்தீவுப் பகுதியில் இருப்பது சற்லைட் படங்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் முற்றுகையை உடைத்து பிரபாகரனைக் காப்பாற்ற நடந்த சண்டையில் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தியத் தேர்தலுக்கு முன்னதாக இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவே இலங்கை இராணுவம் இந்த முற்றுகையை மேற்கொண்டது. ஆனால் இந்தியத் தேர்தலில், மத்தியில் தங்கள் விரோதியான ராஜீவ் காந்தி குடும்பத்தின் காங்கிரஸ் கட்சியும் மாநிலத்தில் தங்கள் விரோதியான கலைஞர் கருணாநிதியின் திமுகா வும் தோல்வியடைந்து, மத்தியில் பிஜேபியும் மாநிலத்தில் ஜெயலலிதாவும் வருவார்கள் என்றும் அவர்கள் வந்தால் தாங்கள் காப்பாற்றுப்படுவோம் என்றும் புலிகள் நம்பியிருந்தனர். அதனாலேயே ஏப்பிரலில் சரணடைவுக்குச் செல்லவில்லை.

மே 13 2009: இந்திய பாராளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்பு. தமிழ்நாட்டில் மே 14 2009 இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த இந்தியத் தேர்தலை நம்பியே புலிகள் ஏப்ரலில் இடம்பெற்ற கடும் மோதலோடு சரணடையாமல் தொடர்ந்தும் தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.

மே 14 2009 அமெரிக்க அதிபர் ஒபாமா: ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்” கேட்டுக்கொண்டார். இதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் பாதுபாப்பு புலனாய்வு மற்றும் முக்கிய அதிகாரிகள் இலங்கை சம்பந்தமாக இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இவ்வாறான முன்னைய சந்திப்புக்களை வைத்துக்கொண்டே அமெரிக்க கப்பல் வரவிருப்பதாக புலம்பெயர் புலிகள் உப்புச் சப்பற்ற பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

May 14, 2009 : Press Trust of India / Washington வெளியிட்ட செய்தி: இலங்கை விவகாரத்தில் ஒபாமா அரச நிர்வாகம் இந்தியாவுக்கு முழுமையாக தகவலை வழங்கி புதுடெல்லியுடன் நெருங்கிப் பணியாற்றி வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்றுகின்றோம் என அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலாளர் ரிச்சட் போச்சர் தெற்காசிய ஊடகவியலாளர் குழுமத்தை வெளிவிவகாரத் திணைக்களத்தின் பொகி பொட்டம் தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது தெரிவித்துள்ளார். ரிச்சட் போச்சர் இலங்கை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்கிறார் அன்றைய ஒபாமா அரசின் வெளிவிவகார ஆலோசகரன ஹிலரி கிளிங்டன். இவர் இந்தியாவின் அன்றைய வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய ராஜதந்திரிகள் சில தடவைகள் தங்களிடம் விஜயம் செய்ததாகவும் அதனால் தங்களால் இந்தியாவோடு நெருங்கிப் பணியாற்றக் கூடடியதாக இருந்ததாகவும் ரிச்சட் போச்சர் தெரிவித்தார்.

ஒவ்வாரு இணைத் தலைமை நாடுகளின்: பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் ஜப்பான் கூட்டம் முடிந்ததும் கூட்டத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றார் ரிச்சட் போச்சர். நாங்கள் இந்தியாவுக்கு எப்போதும் தகவலை வழங்குவதுடன் முடிவுகள் எடுப்பதிலும் இந்தியாவை கலந்துரையாடியே செய்வோம். ஆகவே இலங்கை விவகாரத்தில் இந்தியாவோடு முழுமையாக இணைந்தே செயற்பட்டு இருக்கின்றோம் எனவும் ரிச்சட் போச்சர் தெரிவித்தார். புலிகளை அழிப்பதில் சர்வதேசமும் இந்தியாவும் எவ்வளவு கூட்டாக இணைந்து செயற்பட்டன என்பதனையே இது காட்டுகின்றது.

மே 14 2009 : முல்லைத்தீவில் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கியுள்ள புலிகளை இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழுமையாகத் தோற்கடித்து புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை படை வீரர்கள் விடுவித்துவிடுவார்களென நம்புகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தொழில் புரியும் இலங்கையர்கள் மத்தியில் மே 14 2009 உரையாற்றியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

மே 15 2009 : இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்தார். புலிகளைக் காப்பாற்ற, மக்களைக் காப்பாற்ற அமெரிக்க கப்பல் வருகின்றது என்ற வதந்தியின் பின்னணி இவைகள் தான்.

மே 15 2009 : படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, மகன், மகள், மற்றும் இரு உறவினர்கள் இன்று (மே 15 2009) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநயாக்க தெரிவித்தார்.

மே 15 2009: புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் இலக்கு வைத்து படையினர் தாக்குதல் நடத்திய வண்ணம் முன்னேறி வருவதாகவும் இறுதிக்கட்ட நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மே 16 2009: இன்று (மே 16 2009) காலை இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாகியது. விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமான அரசியல் கட்சிகள் தோல்வியடைந்தன. ஜெயலலிதா அம்மாவின் வரவுக்காக காத்திருந்த தம்பியின் நிலை கையறுநிலைக்கு வந்தது. ஏப்பிரலில் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தத்தை பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து இந்தியத் தேர்தல் முடியும்வரை காத்திருந்தது மிகுந்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. யுத்தத்தின் அதிகூடிய உயிரிழப்புகள் இறுதி ஒரு மாதத்திலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மே 16 2009: ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

மே 16 2009: ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்புவேன் என்று கூறியுள்ளார். முன்னதாக, பிபிசிக்கு செவ்வி வழங்கிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள், இன்னமும் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மே 17 2009: வெள்ளைமுள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400 X 600 மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும், இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவித்திருந்தன.

மே 17 2009: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மே 17 2009: சூசை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி வருமாறு கூறியிருந்தார்: “ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை (மக்களை) அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை….. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது…. நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை” என்றார் புலிகளின் சிறப்பு கடற்படைத் தளபதி சூசை.

சூசை மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் நேற்று முன்நாள் (மே 15 2009) இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்…. போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்…..” என்றார்.

மே 17 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன்: “எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடையும் போராளிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்.”

மே 17 2009: ”தமிழ் புலிகள் சர்வதேச சமூகத்திடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக தம்மிடம் மிகத் தெளிவாகத் தெரிவித்து உள்ளனர்” என மே 17 2009 மாலை நோர்வே அபிவிருத்தி மற்றும் உதவி நிவாரண அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ரொய்டர் செய்திஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார். மே 17 2009 தமிழ் புலிகளுடன் உடன் தான் பல தடவைகள் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து உள்ள எரிக் சொல்ஹெய்ம் அந்தப் பகுதிகளுக்குச் சென்று சுயாதீனமாக நிலைமைகளை ஆராய்வதும் காயப்பட்டவர்களை மீட்பதுமே இப்போதுள்ள முக்கிய விடயம் எனத் தெரிவித்து உள்ளார்.

மே 17 2009: இராணுவம் காலை எல்ரிரிஈயினால் சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர். இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17 2009: புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

மே 17 2009: முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கி இருக்கலாமெனவும் இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதில் புலிகளின் தலைவர் அடங்கவில்லை என்பதை அன்று தேசம்நெற் இன் பிரதான செய்தியாளரான பி எம் புன்னியாமீன் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

மே 18 2009 திவயின : இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் விசேட பிரதிநிதியான விஜேநம்பியாருடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி. தொலைபேசியில் கதைத்துள்ளார். இருவரிடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நம்பியாரிடம் கே.பி. கேட்டுக் கொண்டுள்ளார். கே.பி.யுடனான இந்த உரையாடலை நம்பியார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசல கூடத்தில் இருந்து நடத்தி உள்ளார். நம்பியார் இந்தியாவின் வெளிநாட்டு செயல்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள அதேநேரம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிக்கும் ஒரு அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 2009: காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 18 2009: புதினம் – இணையத் தளம் : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று (மே 17 2009) ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று (மே 18 2009) அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தனர்.

படுகாயமடைந்த பல ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகளும் பொதுமக்களும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ எனப்படும் பகுதியில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று (மே 18 2009) அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் – அதாவது இன்று (மே 18 2009) காலை பா.நடேசன் சீ.புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. இவர்கள் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. இதனை தேசம்செற் பிரதான செய்தியாளரும் தனது தகவல் மூலங்களுடாக உறுதிப்படுத்தி இருந்தார்.

18 May 09 The Economic Times செய்தி வருமாறு கூறுகின்றது: பிரபாகரனதும் அவருடை ஆட்களுடனும் மே 18 காலை நான்கு மணியளவில் சண்டை வெடித்தது. 90 நிமிடங்கள் வெடித்த இச்சண்டையில் கால்நூற்றாண்டுகளாக இந்த நாட்டை பயங்கரத்துக்கு உட்படுத்தியவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏரிப்பகுதியில் மரணித்தார். பாராளுமன்ற உறுப்பினருமான கருணா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் பிரபாகரனது தலையின் மேற்பகுதி வெடித்து காயப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கு முன்னரே இராணுவம் பிரபாகரனது மகன் சார்ள்ஸ் அன்ரனியையும் அவரது தலைமைச் செயற்பாட்டாளர்களையும் கொன்றுள்ளது.

The fighting with Prabhakaran and his men erupted at 4 am Monday (May 18 2009) and was over within 90 minutes, leaving the man who had terrorized the country for over a quarter century dead near a lagoon in Mullaitivu district. Karuna, who is also an MP and vice president of the ruling Sri Lanka Freedom Party (SLFP), confirmed that the upper portion of Prabhakaran’s head was blown off. By then, the military had already killed his son Charles Anthony as well as all his top associates.

மே 18 2009: புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களை படையினர் கண்டெடுத்தததகத் தெரிவித்தனர்.

மே 18 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் சிறப்புக் கடற்படைத் தளபதி சூசை ஆகிய மூவரும் ஒரு மணி நேரங்களிற்குள் முன் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வெளியானது. இதனை தேசம்செற் பிரதான செய்தியாளரும் தனது தகவல் மூலங்களுடாக உறுதிப்படுத்தி இருந்தார்.

May 19 2009: South Asian Media Net க்கு டொக்டர் கோகொண்ன வருமாறு தெரிவித்தார்: அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது. நோர்வே இனிமேல் நடுவர் / ஒழுங்கமைப்பாளர் அல்ல. எல்ரிரிஈ தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க விரும்பினார்கள், கொஞ்சம் காலதாமதமாக.

South Asian Media Net: “The government stance is clear. Norway is no longer the facilitators. The LTTE wanted to surrender their arms a little too late,” Dr. Kohona said.

மே 19 2009 : புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி சூசையின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கரையமுள்ளி வாய்க்காலின் சதுப்பு நிலப்பகுதியில் இவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மே 20 2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் மே 20 சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரியவந்தது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இவர்களது உடல்கள் இந்திய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு பின் உடனடியாகவே அவை நீக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு அழிந்து போவார்கள் என்பதை ஒரு கோரமான கனவில் கூட பார்க்க விரும்பாத பெரும்பான்மைத் தமிழர்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பமும் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர் என்ற தகவலை ஜீரணிக்க வாய்ப்பே இல்லை. மே 17க்குப் பின் கொல்லப்பட்டவர்கள் அனைவரும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உட்பட, சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறி சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர். இதனை அப்போதே தேசம்நெற் வெளியிட்டு இருந்தது.

தற்போது 15 வருடங்களுக்குப் பின்னும் பிரபாகரனும் குடும்பமும் உயிரத்தெழுந்துவிட்டதாக இந்திய உளவு நிறுவனமான றோ – RAW புலி ஆதரவாளர்கள் சிலரை வைத்து ஒரு நாடகத்தை இயக்குகிறது. இவ்வாறு பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்ற வாதத்திலேயே யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் அர்த்தமற்றவையாக்கப்பட்டன. பல்வேறு புனைக் கதைகளுக்குப் பின் எவ்வாறோ பிரபாகரனும் அவரது குடும்பமும் இல்லையென்ற உண்மையை பலரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். அதன் ஒரு கட்டமாக பதினைந்து ஆண்டுகளின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இறுதி நிகழ்வை நடாத்த பிரபாகரனின் சகோதரனின் மகன் முன் வந்திருக்கின்றார். ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள 15 ஆண்டுகள் எடுத்துள்ளது.

மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவன் இறந்த செய்தியை மறைக்கக் கூடாது அவருக்கான இறுதி அஞ்சலிகள் செலுத்தப்பட வேண்டும் என அடேல் பாலசிங்கம் புலத்து விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு தற்போது தமிழ் மக்களின் அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட்டு விட்டார். உண்மைகளை ஏற்றுக்கொண்டு முன்நோக்கி நகர்வதற்கு ஒரு அரசியல் துணிவும் ஆளுமையும் வேண்டும். அது இல்லையானால் பொய்மையிலேயே காலங்கள் நகர்ந்துவிடும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *