பாரிஸ் கவர்ச்சிச் ‘செல்லம்’ சுஜியின் அரசியல் அதிரடி! வீறுகொண்ட லாச்சப்பல் ‘புளி’ முரளி!!!

பாரிஸில் முப்பதினாயிரம் வரையான பெரும்பாலும் ஆண்களைத் தன் ரிக்ரொக் வலைப்பக்கத்தில் வீழ்த்தி தன்னைப் பின்தொடரச் செய்து, ஈழத்தமிழர் மத்தியில் அரசியல் அதிர்வொன்றை ஏற்படுத்தி உள்ளார் சுஜி கூல் என்ற பெயரில் உலாவரும் பெண். மாலை மயக்கம் தரும் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் இட்டு ரிக்ரொக் பதிவிடும் சுஜி இடைக்கிடை அரசியல் பதிவுகளும் இட்டுவருகின்றார். இவருடைய பதிவுகளில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைப் பற்றியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் மிகத் தரக்குறைவாக பதிவுகளை இட்டுவருகின்றார். அவ்வாறு கடைசியாக அவரால் இடப்பட்ட பதிவில் சுஜி தமிழ் தூஷண வார்த்தைகளை தாராளமாகவே வீசி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனை வசைபாடியுள்ளார்.

இதனைக் கண்டு வீறுகொண்டெழுந்த ரிக்ரொக் ‘புளி’கள், இவர்களும் கவர்ச்சிச் செல்லத்தை பின்தொடரும் முப்பதினாயிரத்தில் அடங்குவர். இவ்வாறு வீறுகொண்டெழுந்த கச்சா சிவம் என்ற கனடாப் ‘புளி’, இவளுக்கு (சுஜி க்கு) ஏன் இன்னும் சம்பவம் நிகழ்த்தப்படவில்லை என்ற தொணியில் பொங்கியெழுந்து ரிக்ரொக் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அந்தப் பதிவைப் பார்த்து உசுப்பேறிய கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு கடைக்காரரான, லாச்சப்பல் அக்கா கடை உரிமையாளர் முரளி என்று அறியப்பட்ட பாலசிங்கம் பாலமுரளி செல்லத் தங்கச்சி சுஜீயை பத்து வரையான ஆண்கள் சகிதம் சேர்ந்து தாக்கியுள்ளார். சுஜியின் கையை உரிமையோடு பிடித்து கன்னத்தில் சில தடவைகள் அறைந்தததுடன் அவருடைய சட்டையையும் இழுத்து சேட்டைகள் செய்துள்ளனர். அத்தோடு சுஜியின் மீது முட்டைகளையும் வீசி அடித்துள்ளனர். சுஜி தன்னுடைய ரிக்ரொக்கில் என்னென்ன வசை பாடினாரோ அவ்வளவு வசையையும் பாலசிங்கம் பாலமுரளியும் அவருடன் வந்த கும்பலும் படியது. சுஜி தனக்கு மாதவிடாய் வந்துவிட்டதாக தெரிவித்த போதும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது தன்னை அணுகியவர்களை அண்ணா, அண்ணா என்றழைத்த சுஜி, ஒரு கட்டத்திலும் முரளி கும்பலின் வன்முறைக்குப் பணியவில்லை. “நீங்கள் செய்வது பிழை என்பதை உணருவீர்கள்” என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தார். பத்து வரையான வெறி கொண்ட சருகு புலிக் கும்பலிடம் மாட்டிய இளம் பெண்ணாக அந்த விடியோவில் சுஜி காணப்பட்டார். ராஜபக்சவை தீவிரமாக ஆதரிக்கும் சுஜி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எதிராகவும் அவ்வமைப்புக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தூஷண வசை பாடியுள்ளார் என்றால் அதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. சொல்லப் போனால் அது சிறுமைப்படுத்திச் சொல்வதாகத் தான் அமையும். ரிக்ரொக்கில் காட்டும் ஆக்ரோஷம் பத்து வீறுகொண்ட ரிக்ரொக் புலிப் போராளிகளைக் கண்டதும் அடங்கிப் போனது. முரளி கும்பலும் ஆனையிறவு முகாமை தகர்த்த கணக்கில் புலிப்பாடலோடு அப்பெண்ணைத் தாக்குவதை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஈழத்தமிழ் சமூக வலைத்தள போராளிகள் பலர் உணர்ச்சி பொங்க ‘இவளுக்கு இது தேவைதான்’ என்ற கணக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் கருத்துத் தெரிவித்த தாயகத்தைச் சேர்ந்த மனித உரிமைவாதியும் பெண்ணிய வாதியுமான நளினி ரட்ணராஜா, சுஜி வெளியிட்டது அரசியல்பதிவேயல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்கின்றார். “சுஜி ஒரு அமைப்பு கிடையாது, அறியப்பட்ட ஒரு புள்ளி கிடையாது. சட்டத்தை உங்கள் கையில் எடுக்கின்ற அதிகாரத்தை யார் தந்தது? வீட்டில் உள்ள மனைவி, பிள்ளைகள், தாயார் போன்றவர்களையும் இந்த ஆண்கள் இவ்வாறு தானே நடத்துகின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார் பெண்ணியவாதி நளினி ரட்ணராஜா.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் இவ்வாறான விமர்சனங்கள் அதுவும் பச்சைத் தூஷணத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் பதிவு செய்யப்படுகின்றது. குறிப்பாக ஹிளப் ஹவுஸ் என்கின்ற மேடையில் இவ்வாறான பச்சைத் தூசணப் பேச்சுப் போட்டிகள் நாளாந்தம் மாலையில் அரங்கேறி அதிகாலை வரை நடைபெறும். அதில் பாலியல் வக்கிரம் மடை திறந்த வெள்ளம் போல் பாயும். அரசியலில் தங்களது பெயரும் அறியப்பட வேண்டும் என விரும்பும் முகவரியற்ற பலர் இத்தளங்களைப் பயன்படுத்தி வருவது ஒன்றும் இரகசியமல்ல. இவ்வாறு இயக்கங்களின் மோதல்களால் சமூக வலைத்தளங்கள் நாற்றமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கோட்டும் சூட்டும் போட்டு நுனி நாக்கில் அந்நிய மொழி பேசி நடித்தாலும் கீபோட்டும் மைக்கும் கிடைத்தால் இந்தக் கனவான்களின் பேச்சு கூவத்தையும் மிஞ்சும் நாத்தம் அடிக்கும்.

இவ்வாறான தூஷண மாலைகளைத் தாங்கிய பலர் இன்றும் எம்முன் உயிருடன் உள்ளனர். இந்த முரளி போன்ற ‘புளி’கள் ஆய்வாளர் வி சிவலிங்கம், ரிபிசி ராம்ராஜ், பெண்ணியவாதி ராஜேஸ் பாலா என ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மாற்றுக் கருத்தாளர்களை பச்சைத் தூஷணத்தில் வசைபாடி அவர்களது குடும்பங்களையும் குடும்பப் பெண்களையும் வலைத்தளங்களில் இழுத்து வம்பு செய்து வந்தனர். மனித உரிமைவாதி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பாரிஸில் வாழும் எல்லாளன் என்ற ‘புளி’யும் இவ்வாறான தூஷண மன்னன். மகனுக்கு பிரபாகரன் என்று தான் பெயரும் வைத்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தியதில் இந்தப் புலம்பெயர்ந்த ‘புளி’க்கும்பலுக்கு முக்கிய பங்குண்டு.

இப்போது எழுந்துள்ள அலை ஒரு பெண் எப்படித் தூஷணத்தில் தங்களைக் கேட்கலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. தங்களுக்கு நிகராக தூஷணத்தில் வசைபாடுகிறாள் என்ற ஆதங்கம் அவர்களுடைய மொழியில் தெரிகின்றது. ஆண்களுக்கு மட்டும் தான் தூஷணம் சொந்தம் அல்ல என்பதை தலைவரை வைத்து சுஜி கட்டுடைத்து விட்டாள் என்ற ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவே சுஜி தாக்கப்பட்டுள்ளாள். சுஜி ஒரு உதிரிப் பெண். வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகின்றது. தனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறுகின்றாள். ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை. பிரான்ஸில் வாழும் இப்பெண் வே பிரபாகரன் பற்றியும் அவ்வமைப்பு பற்றியும் வெளியிட்டுள்ள பதிவுகள் சாதாரண மனநிலையுடைய ஒருவர் செய்யக்கூடிய பதிவல்ல. அப்படியிருந்தும் சுஜியின் வலையில் வீழ்ந்து முப்பதினாயிரம் வரையானோர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். ஏன்?

இவர்கள் பற்றி நகைச்சுவையாகத் தேசம்நெற்க்குத் தெரிவித்த முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர், “கச்சா சிவமும் முரளியும் மட்டும் கட்டையரோடு நின்றிருந்தால், தமிழீழம் எப்பவோ கிடைத்திருக்கும்” என்றார். மற்றுமொரு போராளி இது பற்றிக் குறிப்பிடுகையில் அப்துல்லா கஸ்டப்பட்டு மீட்டுக்கொண்டு வந்த தலைவர் இவங்கள் செய்யிறதப் பார்த்து சயனைட் கடித்துவிடப்போகிறாராம்” என்றார்.

ஒரு உதிரிப் பெண்ணான, எதிலிப் பெண்ணான சுஜியைத் தாக்க, பாரிஸ் லாச்சப்பல் தமிழர் வர்த்தக சங்கத்தின் செயலாளர் பாலசிங்கம் பாலமுரளி பொங்க என்ன காரணம். இவர்கள் போன்ற நூற்றுக்கணக்காணோர் இப்பெண்ணுடன் தொடர்பிலும் இருந்துள்ளனர். ஏன்? அவரிடம் அப்படியென்ன அரசியல் கலந்துரையாடல்களை இவர்கள் செய்துள்ளனர்? இவர்களுடைய உடல்மொழியும் வாய்மொழியும் இவர்கள் சமூகத்தின் முன் பொதுத் தளங்களுக்கே வரத்தகுதியற்றவர்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக யாழ் பல்கலைக்கழகமாக இருந்தாலென்ன லாச்சப்பல் வர்த்தக சங்கமாக இருந்தாலென்ன இவ்வாறான பொறுப்பற்ற தகுதியற்ற நபர்கள் தான் பொறுப்பான பதவிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது அயோக்கியத்தனங்களை மறைக்க சுஜி போன்ற எதிலிகளிடம் வீரத்தைக் காட்டி தங்கள் தமிழ் தேசியப்பற்றை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போது தமிழ் தேசியக் கூடாரத்திற்குள் தங்கிருக்கின்ற பெரும்பாலானவர்கள் அயோக்கியர்களாக இருப்பது தமிழ் தேசியவாதத்தின் மிகப் பெரிய பலவீனம் என்றால் மிகையல்ல.

லாச்சப்பலில் உள்ள அத்தனை கடைகளில் தமிழர் வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பண்பாளன் இல்லாமல் போனது லாச்சப்பலில் கடை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அவமானம். பாலசிங்கம் பாலமுரளி தூஷண பூஷணம் செய்வது இதுவொன்றும் முதற்தடவையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் லாச்சப்பல் உணவகமொன்றில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஜெனாவை தாக்க முயற்சித்து இருந்தார். மேலும் பாரிஸில் இடம்பெற்ற தமிழர் எழுச்சி மாநாட்டிலும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி மாவை சேனாதிராஜாவைத் தாக்க முயன்றார்.

பணபலத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகள் தாங்கள் தான் என்ற கோஷத்தையும் வைத்துக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உள்ள ‘புளி’ கும்பல் செய்யும் அலப்பறை தாங்கமுடியாத அளவுக்கு கேவலமாகிக் கொண்டுள்ளது. இத்தோடு லாச்சப்பல் வர்த்தகர்களுக்கு பெரும்பாலும் இலங்கைத் தூதரகத்தோடும் நல்ல உறவு நிலையுள்ளது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பெரும்தொகையான நிதிவசூலிப்பும் நடைபெறுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வில் மாற்றம் இல்லை என்ற வீடியோப் பதிவுகளே தினமும் வெளிவருகின்றது. எல்லாம் இவர்களுடைய வங்கிக் கணக்கிற்குத் தான் வெளிச்சம். தம்மன்னா, சுஜி … இனியொரு ரஜி இவர்களுக்கு கிடைக்காமலா போகும்.

ஈழத் தமிழ் சமூகம் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் அரசியல் ரீதியாக அறிவற்றவர்களாக ஒடுக்குமுறையாளர்களுக்கும் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் பின்னால் ஓடுபவர்களாகவும் அவர்களுக்கு சேவகம் செய்பவர்களாகவுமே உள்ளனர். ஒடுக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைக் கருத்துக்களுக்கும் எதிராகவும் இவர்கள் மூச்சுவிடுவதில்லை. சுஜி போன்ற உதிரிகளும், எதிலிகளும் அகப்பட்டால் இவர்களுக்கு ‘ஜெயசுக்குரு’தான்.

சமூக வலைத்தளங்களை இயக்கும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் அதனை இயக்குவதற்குக் காரணம் மக்களை வளப்படுத்தவோ அரசியல் தெளிவு பெறச்செய்யவோ அல்ல. இந்த சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி கோப்பிரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை உங்களுக்கு மிக அவசியமானதாக்கி அதனை விற்பனை செய்வதற்கே. அதற்கு சுஜி மற்றும் முரளி கும்பலின் ஏட்டிக்குப் போட்டியான பதிவுகள் உணர்வுகளைத் தூண்டி பலரை இதனைப் பார்க்க வைக்கும். அதனால் சமூக வலைத்தளங்களில் இவ்வாறான குப்பை கூளங்கள் தினமும் குவியும். சமூகவலைத்தளங்களை நடத்தும் கோப்பிரேட் நிறுவனங்கள் இந்தத் தரம்தாழ்ந்த பதிவுகளால் இன்னும் இன்னும் மில்லியன் கணக்கில் லாபத்தையீட்டுவார்கள்.

மாறாக இவ்வாறான பதிவு வெளியிடுபவர்களின் நட்பை முறியுங்கள். அவர்களைப் பின்தொடராதீர்கள். மக்களுக்கு அரசியல் தெளிவைக் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வையுங்கள். அதைவிட்டு தமிழ் சமூகத்தை, நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் கொச்சைப்படுத்தும் வகையில் பதிவிடாதீர்கள்.

உன்னுடைய கருத்தோடு எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. ஆனால் உனக்கு அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன். (பிரென்ஞ் அறிஞர் வோல்ரயர்)

சுஜியின் அரசியல் பதிவுகள் கருத்துக்கள் அல்ல அவை வெறுப்புப் பேச்சுக்கள் மட்டுமே என்பதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைவாதி நளினி ரட்ணராஜா தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணல் நாளை வெளியிடப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • BC
    BC

    //இயக்கங்களின் மோதல்களால் சமூக வலைத்தளங்கள் நாற்றமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. கோட்டும் சூட்டும் போட்டு நுனி நாக்கில் அந்நிய மொழி பேசி நடித்தாலும் கீபோட்டும் மைக்கும் கிடைத்தால் இந்தக் கனவான்களின் பேச்சு கூவத்தையும் மிஞ்சும் நாத்தம் அடிக்கும்.//
    யதார்த்தமான உண்மை.

    Reply