“இலக்கியத்தின் பெயரில் இலக்கியமற்றோர்” – சேனன்

‘இலக்கியச் சந்திப்பு’ என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து சிலர் இயங்கி வருகிறார்கள். இவர்கள் ஒரு சிறு குழு – இருப்பினும் ‘சக்தி வாய்ந்த குழு’. ஏனெனில் இவர்களில் பலர் இலங்கை அரச ஆதரவாளர்கள் – கொடூரங்கள் செய்த அதிகார சக்திகளின் நெருங்கிய நட்புகள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இலக்கியம் செய்வதில்லை. தனது சொந்த தேவைகளுக்காக இந்தச் சந்திப்பை பாவித்துக் கொள்ளும் ஷோபாசக்தி தவிர்ந்து யாரும் எதுவும் இலக்கிய -தத்துவ பங்களிப்பு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அந்த சாதனைகளை கூறுங்கள். இவர்கள் மத்தியல் தத்துவார்த்த தெளிவு உள்ளவர் என ஒருவரைக்கூட குறிப்பிட முடியாது. பல ஆண்டுகளாக வெற்று அலட்டல்களை மட்டுமே இவர்கள் செய்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படும் பலருக்கும் உண்மை விபரங்கள் சொல்லப்படுவதில்லை. அரசியற் பின்னணி தெரியாது கலந்து கொண்டு சிலர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

நிதானமான உரையாடல் – அறிவு பூர்வமான விவாதம் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லை. அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் தந்துவிட முடியாது. வன்முறை மிரட்டல்கள் மற்றும் அவதூறுகள் மட்டுமே இவர்களின் வரலாறாக மிஞ்சி நிற்கிறது.

 

வன்முறை எனச் சொன்னதும் – வெறும் வார்த்தையில் வன்முறை என நினைக்க வேண்டாம். இலங்கையில் நடந்த பல கொடூரங்களை நியாயப் படுத்தல் – மற்றும் – கண்டும் காணாது விடல் – மறைத்தல் – போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் புதிய உச்சக் கட்டமாக இலங்கையில் நடந்த ஏப்ரல் படுகொலை பின்னணி வரலாற்றைத் திரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

 

பாலியல் வன்முறை முதற்கொண்டு பல்வேறு பாரிய குற்றச் சாட்டுகளை எதிர் கொண்டு வருபவர் பிள்ளையான் எனபப்டும் முன்னாள் போராளியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவற்றில் பல குற்றச் சாட்டுகளுக்கு ஏராளமான சாட்சிகள் ஆதாரங்கள் இன்று வெளிவந்துள்ளன. குறிப்பாக ஏப்ரல் படுகொலை சார்பாக இவரின் தொடர்பு பற்றி சர்வதேச ஊடகங்கள் ஸ்தாபனங்கள் உட்பட பலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றைத் திரிபு செய்யும் நடவடிக்கையின் பகுதியாகப் பிள்ளையானின் ‘பிரச்சாரக் குழு’ ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. இவரை நல்லவர் வல்லவர் அறிவின் சிகரம் என்றெல்லாம் புலம்பித் தள்ளும் குடுப்பம்தான் இலங்கியச் சந்திப்பை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. கேட்டால் அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என இவர்கள் சொல்லக் கூடும். அந்தப் பேச்சு ஒளித்து நின்று குத்தும் நடவடிக்கை. விமர்சனத்தோடு ஒன்றுபடும் களப்போறல்ல இலக்கிய சந்திப்பு. தவிர பிள்ளையான் மேலிருக்கும் விமர்சனம் என்பது தள்ளி வைத்து விட்டு போகக் கூடியதல்ல. அதை மறைத்து இலக்கிய அல்லது வேறுவகை ‘கூட்டுகள்’ போடுவது அரசியல் கேவலம்.

 

பிரச்ச்சார தளத்தை நேரடியாக கட்டும் வலிமை இவர்களிடம் கிடையாது. இலக்கிய சந்திப்பு என்ற போர்வையின் பின் இருந்து கொண்டு அரச ஆதரவு அரசியலை மறைமுகமாக செய்வது இந்த சந்திப்பு குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கை யுத்தம் முடித்தமைக்கு ராஜபக்சவுக்கு நன்றி சொன்னது. ஓடிய இரகுத்தம் ஆற முதல் இலக்கிய சந்திப்பை இலங்கைக்கு எடுத்துச் சென்று கொண்டாடியது. யுத்த மறுப்பு செய்ய மறுத்தது மட்டுமின்றி – யுத்த மறுப்பு செய்தோரை பாசிச ஆதரவாளர் என அவதூறு செய்தது. புலிகள் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு படுகொலையை நியாயப் படுத்தியது. பின்பு கொலைகளை தமிழ் மக்கள் மறந்துவிட வேண்டும் என பிரச்சாரம் செய்தது. கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான சமீபத்து போராட்டங்கள் எதையுமே ஆதரிக்க மறுத்தது. என நாம் அடுக்கிக் கொண்டு போக முடியும்.

 

இவ்வளவு கேவலமான அரசியல் பின்னனி உள்ள இவர்கள் இலங்கை அரச ஆதரவு நிலைப்பாடு என நேரடியாக ஏன் சொல்வதில்லை? தம்மை முற்போக்கு நபர்கள் எனக் காட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் – மற்றும் -சிந்தனையாளர்/இலக்கியச் செயற்பாட்டாளர்/பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் மத்தியில் சில ஆதரவை பெறுவது – அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்பை தக்க வைப்பது என்பதும் இவர்களில் பலரதும் நோக்கம். நேரடியாக தமது அரசியல் நிலைப்பாட்டை வாதிக்கும் மன பலம் – மன சுத்தி இவர்களில் யாருக்கும் கிடையாது. பொய்ப் பெயர்களின் பின் இருந்து இயங்குவது – தொலை பேசி மற்றும் தனியார் உரையாடல்களில் குசு குசுப்பது – எவ்வித ஆதாரமும் அற்ற அவதூறுகளைச் செய்வது என்ற வரலாறுதான் இவர்கள் பலரதும் வரலாறு.

 

சந்திரகாந்தன் பெயரில் இம்மாதம் வெளியான (மார்ச்) ‘ஈஸ்டர் படுகொலை இன , மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும் ‘ என்ற நூல் முற்று முழுதான பொய் பிரச்சார நூல். இதை விமர்சித்த அத்தாஸ் பிவரும் புள்ளியை சுட்டிக் காட்டி இருப்பது கவனத்துக்கு உரியது

 

‘…ஈஸ்டர் தாக்குதல் இஸ்லாத்திற்காகப் புரியப்பட்ட ஒன்று என்பதுடன் அவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களால் மேலும் செய்யப்பட முடியும் என்ற வக்கிரப் போக்கு இந்த நூலின் முன் அட்டை சஹ்ரானின் புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் முக்கியமாக நூல் விபரக் குறிப்பில் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்தின் விரபங்கள் எதுவும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை …இந்நூலின் சுமார் 200 பக்கங்களுக்கு மேல் வாசிக்க அவசியப்படவில்லை . ஏனெனில் , இணையத்தளங்களில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் விபரம் , இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியான தாக்குதல்கள் எனக் குறிப்படப்படும் பல விடயங்கள் அப்படியே பிரதியிடப்பட்டுள்ளன…’ (“சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலையும் மரத்தில் மாடு கட்டுதலும்” – அத்தாஸ் – அக்கரைப்பற்று – தேசம் (thesamnet.co.uk))

இஸ்லாமுக்கு எதிரான – ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய உண்மை எதுவுமற்ற – தாக்குதல் செய்தவர்களை காப்பாற்றும் – இந்த நூலை போற்றிப் புகழ்பவர்கள் அதை என்ன நோக்கில் செய்கிறார்கள் என்பதை ஊகிப்பது கடினமில்லை. இந்தத் தக்குதலளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் சந்திரகாந்தன் கையால் இந்தப் புத்தக பிரதியை பெற்றுக் கொள்ளும் தலைவிதிக்கு திணிக்கப் பட்டிருப்பது மேலும் கேவலம்.

 

ஒரு காலத்தில் – புலிகள் மற்றய இயக்கங்களைத் தாக்கிய காலத்தில் – மற்ற இயக்கம் சார் புலி எதிர்ப்பு சக்திகள் ஓன்று கூட்டும் இடமாக இருந்தது இலக்கியச் சந்திப்பு. அத்தருனத்தில் அடக்குமுறை சார் நபர்கள் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கக்கப்படக் கூடிய சூழல் இருந்தது. உயிர் பயக் கெடுதி இருத்த போதிலும் இதைப் பலர் துணிந்து செய்தனர் என்பது மிகையில்லை. இன்று அது தூரத்து வரலாறு. அதிகாரத்துடன் ஏதோ ஒருவகையில் இணைந்து தம்மையும் நிறுவனப் படுத்திக் கொண்ட ‘புள்ளிகள்’ பலருக்கும் அத்தகய ‘கடும் விமர்சன’ போக்கு இன்று தேவை இல்லை. பெண்ணியம் – தேசம் – சாதிய ஒடுக்குமுறை – ஆகிய அனைத்துமே இன்று இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பாவிக்கும் ஆயுதங்கள் என குறுகி நிற்கிறது. இஸ்லாமிய வெறுப்பு ஊறிக் கிடப்பது பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. இந்த லட்சணத்தில் இன உறவு பற்றி பேசப் போகிறார்களாம். அதைப் பல மேடைகளில் ராஜபக்ச பேசி நாம் கேட்டு இருக்கிறோம். நீங்களும் ஒப்பிக்கத் தேவை இல்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்தல் – அதனால் தாம் முற்போக்கு என காட்டுதல் ஆகிய ஒற்றை நோக்கை தாண்ட முடியாத இந்த குழுவுக்கு வெளியில்தான் இலக்கியம் இயங்கி வருகிறது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *