ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகள் முடித்த யாழ் சட்டத்தரணி! உறுதி முடிக்கும் சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் மண்டியிட்டனர்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோர் அடங்கிய குழு இரு வாரங்களுக்கு முன்பாக 13 பெப்ரவரி 2024 அன்று ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஆனால் அவர்கள் சந்தித்துப் பேசிய விடயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அண்மைக்காலமாக உறுதி மோசடிகள் தொடர்பான வழக்குகள் தொடர்பில் யாழ் சட்டத்தரணிகளை பொலிஸார் கைது செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனை தடுக்குமாறு கேட்பதற்காகவே மேற்குறிப்பிட்ட யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியைச் சந்தித்து அவரிடம் மண்டியிட்டுள்ளனர். அதாவது கள்ள உறுதி முடித்த வழக்குகள் தொடர்பில் பொலிஸார் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று ஜனாதிபதியிடம் அவர்கள் கோரியுள்ளனர். பொலிஸார் கள்ள உறுதி முடித்த வழக்குகளில் தங்கள் மீது கடுமையாக நடந்துகொண்டால், பொலிஸார் கொண்டுவரும் குற்றவியல் வழக்குகள் (கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், கொலை போன்ற குற்றவியல் வழக்குகள்) நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும்போது தாம் கடுமையாக பொலிசாரினை குறுக்கு விசாரணை செய்வோம் என அச்சட்டத்தரணிகள் ஜனாதிபதி ரணிலை மறைமுகமாக மிரட்டியதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது.

இது பற்றி மேலும் தேசம்நெற்க்கு தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு சட்டத்திரணிகள் ஏற்கனவே பொலிசாரினால் உறுதி மோசடி வழக்கிற்காக கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு, தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று சட்டத்தரணிகளை இவ்வாறான விசாரணைகளுக்காக பொலிசார் கைது செய்யத் தயாராகிய நிலையில், அவர்களுக்கான முன் பிணை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகின்றது. அவர்களினது கோரிக்கையினை செவிமடுத்த ஜனாதிபதி ரணில், “கள்ள உறுதி முடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொலிசாருக்கு அறிவுறுத்துவது சட்டத்திற்கு முரணானது” என்றும் “அவ்வாறான அறிவுறுத்தல்களை தன்னால் வழங்க முடியாது” எனவும் பக்குவமாக தன்னைச் சந்திக்க வந்த யாழ் சட்டத்தரணிகள்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன், செலஸ்ரியன் ஆகியோருக்குத் தெரிவித்ததாக அறியவருகின்றது.

ஆனால் அதற்கு மாற்றாக ஜனாதிபதி ரணில் சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் அவரின் ஆலோசனையை பெறுமாறும், உறுதி முடிக்கும் அந்த சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைவாக பெப்ரவரி 13 மாலையே சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு வழக்கு உள்ள யாரும் அச்சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் சட்டமா அதிபர் அறிவுறுத்தி இருந்தார். அதனால் செலஸ்ரியனைத் தவிர ஏனைய நான்கு சட்டத்தரணிகளும்: குருபரன், திருக்குமரன், தவபாலன், சயந்தன் ஆகியோர் சட்டமா அதிபரை சந்தித்துள்ளனர்.

சட்டமா அதிபரைச் சந்திக்கச் சென்ற நான்கு சட்டத்தரணிகளுக்கும் அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அச்சந்திப்பிற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றது. இவர்களினது கோரிக்கையினை கேட்டு அறிந்து கொண்ட சட்டமா அதிபர், பொலிஸ் உயர் அதிகாரியிடம் இது தொடர்பான விளக்கத்தைக் கோரிய போது, பொலிஸ் அதிகாரியினால் பின்வரும் விடயங்கள் கூறப்பட்டதாக தெரிய வருகின்றது: “சட்டத்தரணி கௌதமன் ஒரே நாளில் ஒரே காணிக்கு 03 உறுதிகள் எழுதியுள்ளார், இதற்கு நாங்கள் எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது?” என்று அப்பொலிஸ் உயர் அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதே போன்று பல சட்டத்தரணிகளால் பதிவு செய்யப்பட்ட மோசடி உறுதிகள் தொடர்பான விபரங்களையும் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கேட்டுக் கொண்ட சட்டமா அதிபர் “பொலிசாரின் நடவடிக்கைகளை தன்னால் தடுக்க முடியாது” என்ற கருத்தைக் கூறியதுடன் அவ்வாறு சட்டத்தரணிகளை கைது செய்வதாயின் அதற்கு முன் தன்னையும் கலந்தாலோசிகும் வண்ணம் பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக அறியவருகின்றது.

அரசியல் சட்டம்பிகள் வளைத்துப்போட்ட காணிகள்:

“கள்ள உறுதி முடிப்பதில் எங்கட சட்டம்பிகளை ஒருத்தரும் மிஞ்சேலாது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சட்டத்தரணி கௌதமனின் ஊரவரான ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “இன்றைக்கு இந்த இளம்தலைமுறை சட்டத்தரணிகளுக்கு இந்தக் கள்ள உறுதி எழுதுவதை சொல்லிக் கொடுத்ததே இவர்களின் அப்பன்களான சட்டத்தரணிகள் தான். இன்றைக்கு அரசியல் செய்கிறவையும் இவர்களின் பரம்பரையும் கள்ள உறுதியில் சொத்துச் சம்பாதித்தவர்கள் தான்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“வடக்கு கிழக்கில் காணிகளைக் கணணிப்படுத்துவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முரண்டுபிடித்து தடுத்ததற்கு முக்கிய காரணம், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எவ்வளவு சொத்துக்கள், காணிகள் இருக்கின்றது என்ற உண்மை ஒரு ‘பட்டனை’ அழுத்தியதும் தெரியவந்துவிடும். அதனாலேயே அவர்கள் இதனைத் தடுத்தனர்” என்கிறார் சமத்துவக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு சந்திரகுமார். அன்று காணிகளைக் கணணிப்படுத்தியிருந்தால் தற்போது நிலமற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு காணி கிடைத்திருக்கும். காணியும் முகவரியும் உள்ளவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நிலமற்ற தமிழ் குடும்பங்கள் மிகுந்த பயன்பெற்றிருக்கும்” என மு சந்திரகுமார் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.

தமிழரசுக் கட்சியின் சட்டத்தரணியான இரா சம்பந்தன் குடும்பத்துக்கும் கணக்கற்ற சொத்துக்கள் இருந்தது. திருகோணமலை லிங்கநகர் குடியிருப்பும் இரா சம்பந்தனின் சொத்துக்களுக்குள் அடக்கம். 1987இல் அக்காணிகளில் பலாத்காரமாகக் குடியிருந்த சிங்களவர்களை துரத்திவிட்டு அங்கு தமிழர்களைக் குடியேற்றியவர்களில் மு சந்திரகுமாரும் ஒருவர். 2009 இறுதி யுத்தத்திற்குப்பின் அக்காணியில் குடியேறியவர்களிடம் இரா சம்பந்தன் லட்சக் கணக்கில் பணம் கேட்டிருந்தார். இதுபற்றி லண்டன் வந்த இரா சம்பந்தரிடம் தேசம்நெற் வினவிய போது அவர் அக்காணிகள் தன்னுடையதல்ல என்றார். “அக்காணிகள் உங்களுடைய மனைவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள உங்களுடைய சகோதரர்களின் பெயர்களிலும் தானே உள்ளது” என்பதை தேசம்நெற் அன்று சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சட்டத்தரணி ஆனந்தசங்கரிக்கும் இன்றும் நிறைய சொத்துக்கள் உள்ளது. அதைவிடவும் அதிகமாக கிளிநொச்சி மண்ணே தெரியாத தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் அப்பன், பாட்டன் வளைத்துப்போட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளது. இப்படி பெரும்பாலான சட்டத்தரணிகளுக்கு சொத்துக்களுக்கு எவ்வித குறையும் இருப்பதில்லை. அவர்களுடைய பரம்பரைக்கும் சொத்துக்களுக்கும் நிலத்துக்கும் குறைவில்லை.

ஞானா முனசிங்கவின் காணி – வெளிநாட்டவரின் திருவிளையாடல்கள்:

யாழ்ப்பாணத்துக்கு என்றொரு பண்பாடும் கலாச்சாரமும் இருக்கின்றது என்று அழுத்திச் சொல்பவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய சமூக சீரழிவுகளை எண்ணி சற்றுத் தலைகுனிவது இயல்பாகிவிட்டது. இதற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் பலரினதும் செயற்பாடுகளும், புலம்பெயர் நாடுகளிலிருந்து பாயும் பணமும் முக்கிய காரணமாக உள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் பணம் யாழ்ப்பாணத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை இரண்டாம் தரத்துக்கு பின்தள்ளிவிட்டது. ‘காசே தான் கடவுளடா…’ என்று சமூக விழுமியங்களை அப்படியே அது புரட்டிப் போட்டுள்ளது. புலம்பெயர் ஹொட்டேலியர்கள் தாயக மண்ணின் சமூகச் சீரழிவுகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் கள்ள உறுதி எழுதுவதில் வல்லவர்கள் தான். அது இயலாவிட்டால் வேலிப் பிரச்சினையையும் காணிப் பிரச்சினையையும் கூலிப்படைகளை வைத்துக் கையாள்கின்றனர்.

யாழ் நல்லூரடியில் காம விடுதி என்று எல்லோராலும் அறியப்பட்ட லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குடுமி ஜெயா என்று அறியப்பட்ட ஜெயந்திரனும் ஒரு சட்டத்தரணியின் வாரிசுதான். பாரிஸ் லாகூர்னேயில் உள்ள சிவன் கோயிலின் முதலாளி இவர். இந்த ஹொட்டேலை விஸ்தரிப்பதற்கான காணியை சட்டத்துக்குப் புறம்பாக ஆனால் சட்டபூர்வமாகக் களவாடியே ஹொட்டலை விஸ்தரித்துள்ளார். இலங்கையின் நன்கு அறியப்பட்ட இடதுசாரி அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான மங்கள முனெசிங்கேயின் மனைவி ஞானா முனெசிங்கேக்குச் சேரவேண்டிய காணியையே குடுமி ஜெயா ஆட்டையைப் போட்டார். மங்கள முனெசிங்கே நவ சம சமாஜக் கட்சியில் பாராளுமன்றம் சென்றவர். 1993 இல் உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் உருவாக்கப்பட்ட ‘மங்கள முனெசிங்கே ஆணைக்குழுவுக்கு தலைமையேற்றவர். பின்னாட்களில் இந்தியா மற்றும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றியவர். இவருடைய மனைவி ஞானா யாழ்ப்பாணம் நல்லூரடியைச் சேர்ந்தவர்.

தனது ஹொட்டலை விஸ்தரிப்பதற்காக அயலில் உள்ள காணியில் கண் வைத்த குடுமி ஜெயா காணிச் சொந்தக்கரரரைத் தேடி வலைவிரித்தார். அப்போது அக்காணியின் உடமையாளரான ஞானாவுடைய சகோதரி மீனா ரட்ணம் இந்தியாவின் புத்தபக்தியில் உள்ள சாயி பாபாவின் ஆச்சிரமத்தில் இருப்பதை அறிந்து நேரடியாகவே அங்கு சென்றார். அவரோட ஒட்டுறவாகப் பழகி அவருடைய சகோதரிக்கு ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வந்துள்ளார். அக்கடிதத்திலிருந்த கையெழுத்தைப் போடப் பழகி அக்காணிக்கான எழுத்துமூலமான உரிமத்தை, கனடாவில் உள்ள குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவனின் பெயரில் பெற்றுக்கொண்டுள்ளார். அதனை திருட்டுத்தனமாக அக்காணியை விற்பதற்கான ஒப்புதலாக மாற்றி அக்காணியை தனக்குத் தெரிந்த ஒருவருக்கு மாற்றி எழுதியுள்ளார். அதன் பின் காணியை தனது வட்டத்திற்குள் உள்ள மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றி எழுதி, இறுதியில் தன்னுடைய பெயருக்கு மாற்றி பெற்றுக்கொண்டார்.

ஒரு பெயர்பெற்ற சிங்கள அரசியல்வாதியின், ராஜதந்திரியின் மனைவிக்கு சேரவேண்டிய காணியை ஒரு சதமும் செலுத்தாமல் ஆட்டையைப் போட்ட குடுமி ஜெயா, ஞானா முனெசிங்கேக்கு நாமத்தைப் போட்டார்.

இதுபற்றி மங்கள முனசிங்கேயின் குடும்ப நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில், “இதில் இருந்த வேடிக்கை என்னவென்றால் குடுமி ஜெயாவின் சகோதரி ரஞ்சினி ராகவன் கனடாவிலிருந்து இலங்கைக்கோ இந்தியாவுக்கோ வரவில்லை. இருவருடைய கையெழுத்துக்களையும் குடுமி ஜெயாவே வைத்து இந்தக் காணி மோசடியைச் செய்தார்” என்கிறார்.

இவ்வாறான செயல்களை கண்டிப்பதற்கு மாறாக இதனை ஒரு கெட்டித்தனம், புத்திசாலித்தனம் என்று எண்ணும் மனோபாவம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துள்ளது. என்ன செய்தாவது பணம் புரட்டினால் அது கெட்டிக்காரத்தனம் என்று பணம் உள்ளவர்களுக்குப் பின் ஒரு கூட்டம் குவிகிறது. ஹொட்டலியர்களுக்குப் பின்னும் வெளிநாட்டு பணமுதலைகளுக்குப் பின்னும் ஒரு கூட்டம் எப்போது இருக்கும். குடுமி ஜெயா போன்றவர்கள் இவ்வாறான மோசடிகளை தனித்துச் செய்ய முடிவதில்லை. இவ்வாறானவர்களுக்கு சட்டத்தரணிகளும் துணை போகின்றனர். ஒரே நாளில் ஒரே காணிக்கு மூன்று உறுதிகளை முடித்ததாக யாழ் சட்டத்தரணி கௌதமன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருடைய தந்தை வீரகத்தியே அதன் பின்னணியில் இருந்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கும் குடுமி ஜெயாவின் குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உண்டு.

‘சட்டத்தரணி தொழில் ஒரு சுரண்டல் தொழில்’ – சட்டத்தரணி ரங்கன் தேவராஜன்

இவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடைய சிலரும் இல்லாமல் இல்லை. பிரித்தானியாவில் நீண்டகாலம் சட்டத்தரணியாக இருந்த ரங்கன் தேவராஜன் தற்போது யாழில் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார். இவர் பாதிக்கப்பட்ட பலருக்கு அவர்களுடைய காணிகளை சட்டப்படி பெற்றுக்கொடுப்பதில் கட்டணம் வாங்காமல் பணியாற்றி வருகின்றார். இவர் பொதுவில் சட்டத்தரணிகள் பற்றிக் குறிப்பிடுகின்ற போது “சட்டத்தரணிகள் தொழில் என்பது மோசமான ஒரு தொழிலாக்கப்பட்டுவிட்டதுஇ மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஒரு தொழிலாக இது மாறி இருக்கின்றது” என்று இவர் லண்டனில் இருக்கின்ற போது தன்னுடைய நண்பர்கள் மத்தியில் குறிப்பிடுவார். இவர் தன்னுடைய சேவை மனப்பான்மையால் பிழைக்கத் தெரியாதவர்’ என்று பெயரெடுத்தவர். லண்டனிலும் கட்டணம் வாங்காமலேயே குரலற்றவர்களின் குரலாக வாதாடியவர்.

அன்று தமிழ் ஹவுசிங்கின் Thamil Community Housing Association பொறுப்பதிகாரியாக இருந்த, தற்போதைய ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் மாறன் என்பவரை வேலையால் கலைக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் ரங்கன் தேவராஜன் தொழில் நீதிமன்ற விசாரணை தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடைத்து மாறனுக்கு நிதியைப் பெற்றுக்கொடுத்தார். கணிசமான தொகை இழப்பீட்டையும் பெற்றுக் கொடுத்தார். இந்த வழக்கை ரங்கன் தேவராஜன் நண்பருக்கான உதவியாகவே வாதாடி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பற்றி புறம்தூற்றி அவர் 20,000 பவுண்டுகள் தனக்குத் தரவேண்டும் என லண்டனில் தவறணையில் சட்ட நிறுவனம் நடத்தும் ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவர் சண்டே லீடர் பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இறுதியில் ரரின் கொன்ஸ்ரன்ரைன் நீதிமன்றில் மண்கவ்வியதுடன் அபராதமும் செலுத்தப் பணிக்கப்பட்டார். இது பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

“நான் இருபதினாயிரம் பவுண்டஸ் தரவேணுமெண்டு கொன்ஸ்ரன்ரைன் திரும்பத் திரும்பக் கதையளந்து திரியக் காரணம். கொன்ஸ்ரன்ரைன் வழக்குப்போட்டு வாங்கிக்கட்டியதால் தான். இந்த வழக்கைவிட கொன்ஸ்ரன்ரைனின் நெருங்கிய உறவினரான யோகரத்தினம் என்ற பெயருடைய இன்னொரு பிரகிருதிக்கு எதிராக நீதிமன்றில் நான் போட்ட வழக்கொன்றிலும்; அன்னார் மூக்கை நுழைத்து ஒரு இரண்டாயிரம் பவுண்டஸ் வரை இழந்ததும்இ என்னை வைத்துப் பணம் பண்ண வெளிக்கிட்டு பல்லுடைபட்டதும், கொன்ஸ்ரன்ரைனின் ஆத்திரத்திற்கான இதர காரணங்கள்” என்றார். (ரரின் கொன்ஸ்ரன்ரைன் பற்றி சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் முகநூலில் மேற்கொண்ட பதிவு அருகில்.)

(Cartoon: Morten Morland (The Times, 2010)

கொஞ்சம் சொத்துக்களை வளைத்துப் போட்டு பணமும், சட்டப்படி நாலு வசனத்தில் கடிதமும் எழுதத் தெரிந்ததும், மற்றவர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் பறிப்பதற்கு என்றே ஒரு சட்டம்பிக் கூட்டம் உள்ளது. சும்மா இருந்து பணம் பண்ணும் வித்தையை கோயில் ஆசாமிகள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், ஹொட்டேலியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் பற்றி மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஆசாமிகள் கோட்டும் சுட்டும் போட்டுத் தான் திரிகிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *