யாழ்ப்பாணத்தில் அரச மருந்து விற்பனை நிலையமொன்றை (ஒசுசல) அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்.போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் மருந்தகத்தின் தேவை குறித்து யாழ்.அரச அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் போது அங்கு செல்கின்ற நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பணிக்கப்படுகின்றனர். தனியார் மருந்தகங்களில் சாதாரண மருந்துகள் உட்பட அனைத்து மருந்துகளும் கூடிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளையாகிய அரச மருந்தகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கும் பட்சத்தில் நோயாளர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதனாலேயே மேற்படி மருந்தகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாண நகரமத்தியில் இதற்கான கட்டிடமொன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் மிக விரைவில் இந்த மருந்தகம் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.