தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற் படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் சமந்த போகாபிட்டிய நேற்றுத் தெரிவித்தார். இப்பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறும் காலங்களில் மலையகப் பிரதேசங்களிலும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், கம்பஹா, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழும் மக்கள் இம்மழை வீழ்ச்சி காலங்களில் விழிப்பாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் இப்பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ள பல இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி மே மாதம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையும் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறினார்.
இம்மண்சரிவு தொடர்பாக ஆய்வு செய்யவென நேரில் சென்று திரும்பிய பூகற்பவியலாளர் சமந்தா போகபிட்டிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதேநேரம், நோட்டன் பிரிஜ், விதுளபுர மண்சரிவு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மண் சரிவுக்கு உள்ளான பிரதேசத்திற்கு மேலாக அமைந்திருக்கும் வீதியில் சேருகின்ற தண்ணீரை, இப்பிரதேசத்திற்கு அருகில் கீழாக ஓடிக்கொண்டிருக்கின்ற களனி கங்கையுடன் ஒழுங்கு முறையாக சேர்வதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தால் இந்த அனர்த்தத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இம்மண் சரிவு ஏற்பட்ட பிரதேசத்திற்கு இரு பக்கத்திலும் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திற்கு ஒரே விதமான மண் அமைப்பே காணப்படுகின்றது. அதன் காரணத்தினால் இப்பிரதேசத்திலுள்ள ஐந்து வீடுகளில் வாழுகின்ற மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கும் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
விதுலிபுர மண்சரிவுக்கு மேலதிகமாக வேறு வேறு இடங்களிலும் சிறுசிறு மண் சரிவுகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.
அதனால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண் சரிவுகள் மேலும் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றது என்றும் அவர் கூறினார்.