அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளிவிடாது முஸ்லிம் இளைஞர்களை பாதுகாத்தது மு.கா.தான்- ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgவடக்கில் புலிகளின் பயங்கரவாதத்திற்கும், தெற்கில் ஜே.வி.பி.யினரின் பயங்கரவாதத்திற்கும் மத்தியில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதப் போரட்டத்திற்குள் தள்ளாது ஜனநாயக ரீதியான போரட்டத்திற்குள் உள்வாங்கியது ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

கண்டி ரெஹான்ஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் கண்டி மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை ஒருவித பீதி மனப்பான்மை ஆட்கொண்டுள்ளது. இதிலிருந்து இச்சமூகத்தை வெளிக்கொணர வேண்டும். இந்த அரசு மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆனால், சகல இன மக்களையும் இதிலிருந்து வெளிக்கொண்டுவர முடிந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.

மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது கட்சியின் எதிர்காலப் போராட்டத்திற்கும் பேரம் பேசலுக்கும் நிச்சயம் பலம் சேர்க்கும். 1988 மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 12 பிரதிநிதிகளை வட கிழக்குக்கு வெளியில் வென்றெடுத்தது. அதன் பிறகு 2004 மாகாணசபைத்  தேர்தலில் நாம் இந்த 12 ஆசனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் அமைச்சரவையில் 27 சதவீதமானோர் முஸ்லிம்கள் . ஆனால் சமூகம் பெற்றுக்கொண்ட பயன்தான் என்ன? இவர்களின் கையாலாகாத நிலை அவர்களுக்கே தெரியும். இதுபோன்று இக்கட்சியின் தலைமைத்துவமும் இருக்க விரும்பவில்லை. எனவேதான், வெளியே வந்தோம். முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் வழிநடத்தக் கூடிய கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது எதிர்கால தேர்தல்களில் நிரூபிக்கப்படும் என்றார்.

ஐ.தே.க., சு.க. மக்கள் பிரிவு திருமணம் ஜே.வி.பி., விக்கிரமபாகு கள்ளத் தொடர்பு – விமல் வீரவன்ச கிண்டல்

vimalveera.jpgஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஐ.தே.க.வுடன் ஜே.வி.பி.யும் விக்கிரமபாகு கருணாரட்ணவும் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“எமது இராணுவத்தினர் மிக விரைவில் முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முற்றாகத் தோற்கடித்துவிடுவர். இவ்வாறான நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு கோருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு திருமணம் செய்துள்ள நிலையில் ஜே.வி.பி. மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கள்ளத் தொடர்பு வைத்துள்ளனர். புலிகளை தோற்கடித்து புதிய இலங்கையை உருவாக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யிடம் கோருகின்றோம்’.

லண்டனில் இருந்து தொலைபேசியில் தமிழ்நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

phone.jpgதமிழ் நாட்டில் 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. லண்டனில் இருந்து போனில் மிரட்டியவன் யார் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. அலுவலகம் ரேஸ்கோர்சில் உள்ளது.

(14) இரவு 10.30 மணி அளவில் இந்த அலுவலகத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. போனில் பேசியவர், “கோவை, திருச்சி, மதுரை ஆகிய 3 விமான நிலையங்களில், தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கும் என்றும், முடிந்தால் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றும் ஆங்கிலத்தில் கூறி போனை வைத்து விட்டார். அந்த டெலிபோன் எண், காலர் ஐ. டி. யில் பதிவாகியிருந்தது. அது இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டன் நகர டெலிபோன் எண் ஆகும்.

கோவை சரக பொலிஸ் டி. ஐ. ஜி. சிவனாண்டி, அதுபற்றி உடனடியாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸார் இதையொட்டி வழக்குப் பதிவு செய்து லண்டனில் இருந்து போனில் மிரட்டியது யார் என்று புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிரட்டலைத் தொடர்ந்து கோவை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் அருண்சிங் தலைமையில் அதிரடி படையினரும், கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு பொலிஸாரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இரவோடு இரவாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கோவை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில், பொலிஸார் தடுப்புகளை அமைத்து விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு தான் அனுமதித்தனர்.

விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் புதிய நவீன கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதனை தாண்டிச் செல்லும் பயணிகள் “ஸ்கேனர்” மற்றும் “மெட்டல் டிடெக்டர்” மூலம் சோதனை செய்யப்படுகிறார்கள்.

விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக விமான நிலையத்தின் நுழைவு வாயிலிலிருந்து பயணிகள் விமானத்திற்குள் ஏறும் வரை அனைத்து பகுதிகளிலும் 32 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இரண்டு புறமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு எந்திர துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர விமான நிலையத்தின் முன்பகுதியில் சுமார் 10 கமாண்டோ வீரர்கள் குண்டு துளைக்காத உடை அணிந்து இயந்திர துப்பாக்கியுடன் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தம் முடிவுறும் தறுவாயில் உள்ளதால் அரசின் திட்டங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் நிமல்

nimal_sripaladesiva_.jpgஇந்திய எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டு நலனில் அக்கறை செலுத்துவது போன்று எமது நாட்டு எதிர்க்கட்சி தலைவரும் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யுத்தம் முடியும் தறுவாயில் அரசை விமர்சிக்காமல் நாட்டு நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு சுகாதார போஷாக்கு நலத்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

குருநாகல் மாவட்ட  ஹிரியாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், குறிப்பிட்டதாவது:- கிழக்கில் தொப்பிகலகாடு தொடக்கம் வடக்கில் கிளிநொச்சி வரை எமது படையினர் வெற்றிகொண்டதை நகைப்புக்கிடமாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் பெற்றோல் விலை குறைப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையான விடயமாகும். அவரது ஆட்சிக் காலத்தில் படைவீரர்களை பலமுள்ளதாக்குவதை விடுத்து எல்.ரீ.ரீ.ஈ.யினரை பலசாலிகளாக ஆக்கினர். இதன் காரணமாக பெருமளவு யுத்த செலவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சிறந்த தலைமைத்துவம் இல்லாத ஐ.தே.கட்சியினால் இந்நாட்டை ஆள முடியாது. தங்களுக்குள் பிளவுபட்டுக் கொண்டுள்ள இக்கட்சியினர் எதிர்கால சந்ததியினர் நலன் பற்றிப் பேசுவது வேடிக்கையாகும். கிளிநொச்சியை பிடிக்க முடியுமானால் பெற்றோல் விலையைக் குறைத்துக் காட்டுங்கள் என சவால் விடுவது சிறுபிள்ளைத்தனமானதும், பலவீனமானதுமான பேச்சாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் வட மாகாண கல்விசார் உயர் மாநாடு

north-education.jpgவட மாகாணத்தின் கல்வித்துறையுடன் தொடர்புடைய உயர்மட்ட மாநாடொன்று இன்று (16.01.2009) காலை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.

இம்மாநாட்டின்போது வட மாகாணத்தின் கல்வித்துறைத் தொடர்பான விடயங்களுடன் யாழ் குடாநாட்டின் கல்வித்துறை சார்ந்த பல்வேறு விடயங்களும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டன.  மேற்படி உயர்மாநாட்டில் கல்வித்துறை சார்ந்த விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் ஏனைய விடயங்கள் குறித்து தனித்தனியாக அடுத்தடுத்த கட்டங்களில் ஆராயப்பட்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சதிகாரர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கி வரவில்லை- பிரணாப் முகர்ஜி

pranab-mukherjee.jpgமும்பை தாக்குல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளையும், பிறரையும், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலையில் எந்த குழப்பமும், மாற்றமும், தொய்வும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், தீவிரவாதிகளை நாடு கடத்துவது பாகிஸ்தானால் இயலாத காரியம் என்றால், சிக்கல் இருப்பதாக கூறினால், அவர்களை பாகி்ஸ்தானிலேயே வைத்து விசாரிக்க இந்தியா சம்மதிக்கும். ஆனால் விசாரணையில் நேர்மை இருக்க வேண்டும்.

ஒப்புக்காக விசாரணை நடத்தப்பட்டால் அதனால் எந்த பயனும் கிடையாது. கேலிக்கூத்தாகி விடும். விசாரணை வெளிப்படையாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் அமைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால், இதுவரை தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வந்த இந்தியாவின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கருதப்பட்டது. அமெரிக்காவின் ‘அட்வைஸ்’படி இந்தியா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் எனவும் பேச்சு எழுந்தது. இந்தியா தனது நிலையிலிருந்து இறங்கி வந்திருப்பதாகவும் பேச்சு எழுந்தது. ஆனால் இந்தியாவின் நிலையில் எந்த தொய்வும், குழப்பமும் இல்லை என்று பிரணாப் முகர்ஜி விளக்கியுள்ளார்.

தனது டிவி பேட்டி குறித்து விளக்கி செய்தியாளர்களிடம் இன்று பேசினார் பிரணாப் முகர்ஜி. அப்போது அவர் கூறுகையில், மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை, இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட பாகிஸ்தானியர்களை, நம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

அவர்களை இந்திய சட்டத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற நிலையிலும் மாற்றம் இல்லை.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். அக்கறையுடன், ஒளிவுமறைவுற்ற வகையில், அது நடந்து கொள்ள வேண்டும். இந்த சதித் திட்டத்தை அது வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

மும்பை சம்பவத்திற்குக் காரணமான பாகிஸ்தானியர்களை நம்மிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து அரசு மாறி விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.சதிகாரர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இந்தியா இறங்கி வரவில்லை. அந்தக் கோரிக்கையை நாம் இன்னும் கைவிடவில்லை. குற்றம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. எனவே இங்குதான் விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்குதான் அவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும் என்றார் பிரணாப்.

பிரணாப் முகர்ஜியின் இந்த முன்னுக்குப் பின் முரணான பேச்சு குழப்பத்தை அதிகரித்துள்ளது.

2வது நாளாக திருமாவளவன் உண்ணாவிரதம்

thirumavalavan-1601.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் இன்று 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். சென்னை அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று காலை தனது சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் திருமாவளவன். பெரும் திரளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் புடை சூழ அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தையும் மத்திய அரசு புறம் தள்ளி விட்டது. இதற்கு தமிழக மக்கள் தக்க சமயத்தில் தக்க பாடம் கற்பிப்பார்கள். பிரணாப் முகர்ஜியை அனுப்புங்கள் என்று கூறினால் மேனனை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார் ராஜபக்சே. இப்படிப்பட்ட நிலையில் ஐந்து லட்சம் தமிழர்களின் உயிர் அங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையிலும் இந்திய அரசு பெருத்த மெளனம் காப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார் திருமாவளவன்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு

president.jpgகண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (16.01.2009) ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரச பொங்கல் விழா எனும் தேசிய தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட ஏராளமான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.ஜனாதிபதி அவர்கள் பொங்கல் பானையில் அரிசியிட்டு சம்பிரதாயபூர்வமாக வைபவத்தைத் தொடக்கி வைத்தார்.பொங்கல் நிகழ்வைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த விழாவின் போது பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு இதுவென்பதுடன் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண தமிழ் மக்கள் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் போது ஜனாதிபதி அவர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் தமிழில் சரளமாக உரையாற்றினார். அந்த உரையின் சாராம்சம் வருமாறு:

கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே.

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். பொங்கல் நாள் உழவர் திருநாள். தமிழர் பெருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அது போல இந்த வருடம் இந்து மக்கள் அனைவருக்கும் நிச்சயமாக நல்ல வழி பிறக்கும் என உறுதியாக நான் நம்புகின்றேன்.

இந்த நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் சந்தேகமில்லாமல் பயமில்லாமல் வாழக் கூடிய சூழ்நிலை நிச்சயமாக வெகு விரைவில் உருவாகும். எமது அரசியல் யாப்பில் உள்ளபடி எல்லா மக்களும் சம உரிமையோடு சமத்துவமாக வாழ வேண்டும். அந்த நிலையை நான் நிச்சயமாக உருவாக்குவேன். இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் நாம் எல்லோரும் இந்த நாட்டு மன்னர்களே. இன மத பேதம் எதுவுமில்லை. நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள். எல்லா மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு எனது கடமை. நான் அதை உறுதியாக செய்வேன்.நாட்டு மக்கள் எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும். மீண்டும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக 5 அமைப்புகளுடன் இணைந்து ஜே.வி.பி. ஆர்ப்பாட்டப்பேரணி

jvp.jpgஊடக அடக்குமுறையைக் கண்டித்து ஜே.வி.பி. தொழிற்சங்கம், மனித உரிமை அமைப்பு உட்பட ஐந்து அமைப்புகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளியரங்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடத்தவுள்ளது. இது தொடர்பாக கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்கா கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்குமேலும் பேசுகையில்; “அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வாதிகார போக்கில் செயற்பட்டுவருகின்றது. இதற்காகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்ற 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்கிறது. இதனை அமுல்படுத்துவது மூலம் அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டு சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் உட்பட சுயாதீன ஆணைக்குழுக்கள் இயங்கும் என்பதால் இதனை செய்யாதுள்ளது. அதேசமயம் நீதிமன்ற தீர்ப்பையும் அரசாங்கம் அவமதித்து வருகின்றது.

அரசின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதன் உச்சமாக சிரச எரியூட்டப்பட்டும் லசந்த விக்கிரமதுங்க என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுமுள்ளார். இவ்வாறான தாக்குதல் மக்களின் செய்தியை அறிந்து கொள்ளும் மற்றும் வெளியிடும் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்துள்ளது. இந்த மக்களின் உரிமைகளை மதிக்காது ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது.

இதனை தடுப்பதற்கு தேசப்பற்றுள்ள தேசிய நிலையம் ஊடகதொழிற்சங்கம் மற்றும் மனித உரிமை அமைப்பு உட்பட ஐந்து அமைபுகள் எம்முடன் இணைந்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளியரங்கில் ஊடக அடக்குமுறையைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளோம். தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் முகமாக யுத்தத்தை நடத்துவதாகக் கூறும் அரசாங்கம் இந்த விடுதலையின் பின் அம்மக்களுக்கு எதனை செய்யப்போகின்றதென கேட்கின்றேன்.

நாட்டில் எழுத்துச் சுதந்திரத்தை தடுக்கின்றவகையில் செயற்படும் அரசு அம்மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுக்கொடுக்குமாவென நான் கேட்கின்றேன். எனவே நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழித்து சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவதனை தடுப்பதற்குரிய தேவையேற்பட்டுள்ள நிலையில் தேசப்பற்றாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தம்பிர அமிலதேரர், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பாலசூரிய மற்றும் மனித உரிமை அமைப்பின் அநுர கருணாதிலக ஆகியோரும் உரையாற்றினர்.

வன்னியில் மூன்று புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்த முடிவு

vavuniy1410.jpg
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் வன்னியில் மூன்று புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் விரைவில் இப்புதிய பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.பல தசாப்தங்களாகச் சீர்குலைந்திருந்த நிர்வாக நடவடிக்கைகளை மீள சீரமைப்பதற்கு வசதியாகவே மேற்படி பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பகுதிகளில் அரச நிர்வாகத்தை மீளக்கட்டியெழுப்பவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவும் மீட்கப்பட்ட பின் உடனடியாகவே இதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பொது மக்களின் நலன்கள் தொடர்பாக ஆராய்வதற்காக அனர்த்த நிவாரண சேவைகள் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் வவுனியாவிற்கு சென்றது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்துள்ள அமைச்சர் பதியுதீன், இடம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.

இது சம்பந்தமாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து தொடர்ந்தும் பொதுமக்கள் வருகை தந்த வண்ணமே உள்ளனர். இவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைத் தடையின்றி பெற்றுக் கொடுப்பதற்காகவும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காகவும் மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்டச் செயலாளர்களுக்கு நிதிவழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், அப்பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவு உயரதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஏ. சீ. எம். ராசீக், வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் உட்பட சகல வசதிகளையும் அம்மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு மூன்று இடங்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.