அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கைக்கு எதிராக ஆஸி. செனற்சபையில் பிரேரணை

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செனற் சபையில் நாளை பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆஸியின் கிறீன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் சரா ஹன்சன் யங் இப்பிரேரணையை அங்கு சமர்ப்பித்து உரையாற்ற உள்ளார்.

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்களை அவர் செனற்சபைக்கு சமர்ப்பித்து இலங்கைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஐ.நா சபையில் ஆதரவு வழங்க வேண்டும் என்று அப்பிரேரணையில் கோருவார். இவரின் இந்நடவடிக்கைக்கு கிறீன் கட்சிக்கான தமிழர்கள் அரசியல் அமைப்பு பேராதரவு வழங்க முன்வந்துள்ளது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் அமெரிக்காவில்

tissainayagam.bmpஇருபது வருடங்கள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் சனாதிபதி ராஜபக்சவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகம் நேற்று அமெரிக்க தலைநகர் வோஷிங்டன் வந்து சேர்ந்துள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  இது குறித்த அறிக்கை ஒன்றையும் அந்த அமைப்பு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

வோஷிங்டன் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய திசநாயகத்தை அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர்களும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதியும் வரவேற்றனர். ஊடகவியலாளர் திசநாயகம் மிகுந்த இன்முகத்துடன் காணப்பட்டதாகவும் தன் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்ததாகவும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்.

திசநாயகம் அமெரிக்கா வந்தது வரவேற்கக்கூடிய ஒரு விடயம் என்றும் 30 வருடங்களாக இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட ஊடகத்துறையினர் மீதான அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது என்பதை அரசு இதன் மூலம் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் இந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜோயல் சைமன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழக உளவுப்பிரிவுத் தலைவர் சிரஞ்சீவி என்ற ராஜூ சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி (ராஜூ) இவர், தமிழகத்தில் இருந்து உளவுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வந்தார்.

ஹெல உறுமய தலைவர் பதவியில் மாற்றம்

hala.jpgஜாதிக ஹெல உறுமய கட்சியின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் கட்சியின் தலைவராக வணக்கத்துக்குரிய அதுரலியே ரத்தன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பதவியை எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதைபொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார் என்றும் அதனால் இத்தலைவர் பதவியை இராஜினாமா செய்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

kp.jpgஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப் பட்டுள்ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தில் பயிர்ச் செய்கை உரமானியங்கள் வழங்க தீர்மானம்; காணிகள் வழங்கவும் ஏற்பாடு – பசில்

tr.jpgவட மாகாணத்திலுள்ள சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தின் போது பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு, காணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஸி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று முன்தினம் கையளித்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்:-

வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மாத்திரம் வழங்கியதுடன் அரசாங்கம் விட்டுவிடவில்லை. தற்போது அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், விவசாய, வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

படை வீரர்கள் வடக்கை விடுவித்ததன் மூலம் வடக்கும், தெற்கும் இணைக்கப் பட்டுள்ளன. உள்ளங்கள் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேச மக்களின் நலனைக் கருத்திற் கொண்டும் அரசாங்கம் மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது. இலங்கைக்கு மிக நீண்ட காலமாக எல்லா நிலைமைகளிலும் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு உதவ முன்வரும் பல நாடுகள் உதவிகளை வழங்குவதுடன், எம்மை கண்காணிக்கவும், எம்மீது அழுத்தம் கொடுக்கவும் முற்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் நின்றும் மாறுபட்ட கொள்கையைக் கொண்டது ஜப்பான். அது எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இதற்காக இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தற்பொழுது சுமுகமான சூழல் காணப்படுகின்றது. எனவே, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி உரையாற்றுகையில்:-

வட மாகாண மக்களின் வாழ் வாதாரத்தையும் விவசாயத்துறையையும் மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம், தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கும். நாங்கள் விவசாய உபகரணங்கள், இயந்திரங்களை இந்த மக்களுக்காக வழங்கி வருகின்றோம். விவ சாயத்துறையை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றார்.

விவசாயத்துறை மேம்பாட்டின் மூலமே அந்த நாட்டில் அபிவிருத்தி ஏற்படுகின்றது. விவசாயம் என்பது அபிவிருத்தித்துறைக்கான ஒரு மைல் கல்லாகும்.இலங்கைக்கு நான் பல தடவைகள் விஜயம் செய்துள்ளேன். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன். அவை பயனளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் தங்களது பாரிய அர்ப்பணிப்புக்களின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பான் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கும் என்றும் அகாஷி தெரிவித்தார்.

வட பகுதி அகதிகளுக்கான அமெரிக்க உதவி 2.25 மில்லியன் டொலரால் அதிகரிப்பு

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடமாகாண மக்களின் மீள்குடியேற்றத்துக்கான நிதி உதவியை 2.25 மில்லியன் டொலரால் அதிகரிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதன் மூலம் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் 9000 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வீடுகளைக் கட்டுதல், மீள்குடியேற்றம் சம்பந்தப்பட்ட ஏனைய இதர நலன்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்காக இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும். இந்நிதிப் பங்கீடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தால் மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னர் மீள்குடியேற்ற முன்னெடுப்புகளுக்காக அமெரிக்கா 33மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்ட அலுவலகம் கிளிநொச்சியில் மீண்டும் திறப்பு

கிளிநொச்சியில் உலக உணவுத் திட்டத்தின் அலுவலகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற கடும் மோதலில் இந்த அலுவலகம் சேதமடைந்த இரு வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செய்திச் சேவை தெரிவித்தது.

குவைத் இளவரசர் சுட்டுக் கொலை

kuwait.jpgகுவைத் இளவரசர் ஷேக் பாசல் (52), அவரது மாமாவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கார் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இளவரசரின் மாமா அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இளவரசரின் உடல் நேற்றே அடக்கம் செய்யப் படுமென குவைத் அரசு தெரிவித்திருந்தது. கொலை குறித்து உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை துப்பாக்கியால் சுட்டும் குவைத் இளவரசர் சையிக் பாசல் தப்பி விட்டார்.

தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12 வது அரசர். ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனக்கைதிகள் இலங்கையில் இருப்பதாக ஜெயலலிதா கூறுவது அதீத கற்பனை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பு

1jaya.jpgஇலங்கையில் ஆயிரக்கணக்கான சீனக் கைதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தாகவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெவித்துள்ள கூற்றை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஜெயலலிதா கூறுவதைப் போன்று இலங்கையில் சீனக் கைதிகளோ அல்லது வேறு நாட்டின் கைதிகளோ இல்லையென்றும் தொழிலாளர்களே கடமையாற்றுகிறார் களென்றும், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பல்வேறு செயற்றிட்டங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்குக் குறுகியகாலம் மட்டுப்படுத்தப்பட்ட வீசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வீசா காலம் முடிவடைந்ததும் நாட்டைவிட்டுச் சென்று விடுவார்களென்றும் அவ்வதிகாரி கூறினார்.

வெவ்வேறு காரணங்களின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் சட்ட ரீதியாகக் கைதிகளாக உள்ளதைத் தவிர வேறு நாடுகளின் கைதிகள் இலங்கையில் எந்த நிலையிலும் கிடையாதென்று வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதைப் போன்று சீனப் பிரஜைகள் இலங்கையில் பணியாற்றுவதால், இந்தியாவுக்கோ தமிழகத்திற்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாதென்று தெரிவித்த, அவ்வதிகாரி ஜெயலலிதா தெரிவித்திருக்கும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார்.

இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உளவு பார்ப்பதற்காகவே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்று முன்தினம் (18) ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் சீனக் கைதிகள் பணியாற்றுவது இந்தியாவுக்கு விசேடமாக தென்னிந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று குறிப் பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நட்புறவு நிலவிய 1960களில் சீனா போர்த் தொடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.