அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தனுனவின் சொத்துக்கள் அரசுடமை

danuna_1.jpgஇராணு வத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்த ‘ஹைகோர்ப்’ கேள்விப்பத்திர நிதி மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளில் ஏழு கணக்குகளில் உள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் 1251 அமெரிக்க டொலர்களையும் அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன றேற்று (30) உத்தரவிட்டார்.

தனுன திலகரட்ன நேற்றுக்காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே, கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். தனுன திலகரட்னவை இந்த மாதம் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை ஒட்டுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சந்தேக நபரான தனுன திலகரட்னவுக்கு இலங்கை வங்கியின் பிரதான கிளையில் நிலையான வைப்பு கணக்குகள் நான்கும், ஹொங்கொங் அன்ட் ஷாங்ஹாய் வங்கியில் சேமிப்பு கணக்கில் 15 இலட்சத்து ஏழாயிரத்து 410 ரூபா பணமும் 1251 அமெரிக்க டொலர்களும் உள்ளன. இந்த கணக்குகளில் உள்ள பணத்தை சந்தேக நபருக்கோ அல்லது அவரது சார்பில் வரும் வேறு எவருக்கோ கையளிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட இரு வங்கிகளினதும் நிர்வாகிகளுக்கு மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறு அவர் ஆஜராக தவறியதனால் தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதேவேளை தனுன திலகரட்னவுக்கு சொந்தமாக ஏனைய சொத்துக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் செய்ய நாம் இங்கு வரவில்லை – சல்மான்கான்

asen.jpg“நாங்கள் நடிகர்கள், கலைஞர்கள் இங்கு நாம் வருவது அரசியல் செய்ய அல்ல அந்த வேலைகளை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துபவர்களாக உறவுப் பாலமாக இங்கு வந்திருக்கிறோம். ஐஃபா போன்றதொரு விழாவை இங்கு நடத்துவதன் பின்னணியிலோ படப்பிடிப்பை இங்கு நடாத்துவதன் பின்னணியிலோ எந்தவொரு அரசியலும் இல்லை” என்று சல்மான்கான் கூறினார்.

ஒரு திரைப்படத்தின் படப் பிடிப்புக்காக நாங்கள் பல நாடுகளுக்குச் செல்வோம். அழகிய கடற்கரைகளுக்காக ஒரு நாடு, அழகான மலைப்பிரதேசங்களுக்கு இன்னொன்று என்பதாக அது அமையும். ஆனால் இவையெல்லாம் ஒருங்கே இலங்கையில் இருப்பதால் ‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுவதையும் இலங்கையில் நடத்தத்திட்டமிட்டோம் என்றும் சல்மான்கான் கூறினார்.

‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்பு முழுவதும் இலங்கையில் நடைபெறுகின்றது. இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. ரெடி திரைப்படத்தின் கதாநாயகி அசின், திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் குமார் அபேசிங்க, விஸ்கிராப்ட் நிறுவனத் தலைவர் சபாஷ் ஜோசப், ரெடி திரைப்பட இயக்குநர் அரீஸ் பஸ்மி ஆகியோர் மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய சல்மான் கான், இயற்கையின் வனப்பையெல்லாம் ஒருங்கே, இலங்கை கொண்டிருப்பதாலேயே ‘ரெடி’ திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் மொரிஷியஸ்ஸிலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டது. இலங்கையில் படப்பிடிப்பு நடாத்தப்படுவது குறித்து பலத்த எதிர்ப்புகள் தமிழகத்தில் எழுந்தன.

ஐஃபா நடாத்தப்படக் கூடாதென்று முன்னதாக பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. எந்தவொரு திரைப்படத்தையும் திரையிடத் தடைவிதிக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளரே. தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடாதென்பற்காகவே சில நடிகர்கள் ஐஃபாவைத் தவிர்த்தனர்.

இலங்கையும் எம்மைப்போன்ற கலாசார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சுமார் 80 இலங்கைத் தொழில்நுட்பக் கலைஞர்கள் எம்முடன் இத்திரைப்படத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்களின் திறமை எம்மவர்களின் திறமைக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்றார்.

பெண்கள் வசமாகும் குடாநாட்டு நிர்வாகம்

jaffna.jpgயாழ். குடாநாட்டின் சிவில் நிர்வாகம் தற்போது மகளிர் வசமாகிவரும் நிலையில் யாழ்.அரச அதிபராக இன்று வியாழக்கிழமை திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்கவுள்ளார். குடாநாட்டின் பல பகுதிகளிலும் மிக முக்கிய பதவிகளில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அவர்களில் சிலரது விபரங்கள் வருமாறு;

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகரமேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளா தேவி சதீஷன், சங்காணை பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி, யாழ்ப்பாண கல்விப்பணிப்பாளர் திருமதி.கே.வேதநாயகம், யாழ்.பிராந்திய மாகாண ஆணையாளர் திருமதி எஸ். சிவலிங்கம், யாழ்.பிராந்திய உதவிப் பதிவாளர் திருமதி மகாராணி இராஜரத்தினம், புவிச்சரிதவியல் சுரங்கப்பணிகள் அகழ்வு பணிப்பாளர் எந்திரி கே.யோககௌரி, வலிகாமம் தெற்கு பிரதேசசபை செயலாளர் சுலோசனா முருகேசன், யாழ்ப்பாண சித்தமருத்துவத்துறை தலைவர் திருமதி சிவஞானமணி பஞ்சராசா என பெரும்பாலான சிவில் நிர்வாகப்பகுதிகளுக்கு பெண்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பதிவு செய்யப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் திணைக்களத்திடம் சகல ஆவணங்களுடனும் கையளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக ஆர். சம்பந்தனும் அதன் இணைச் செயலாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக் கட்சிசார்பில் மாவை சேனாதிராஜாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமசந்திரனும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் தற்போது நாட்டிலில்லாததாலும் அவர் செப்டெம்பர் மாதமே நாடு திரும்பவுள்ளதாலும் அவர் நாடு திரும்பிய பின்னரே இது தொடர்பான விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய கட்சிகளைப் பதிவுசெய்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நாள் நேற்றைய தினமென்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரேன்- இலங்கை இருதரப்பு பேச்சு; மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்து

ugrain.jpgஉக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவி ச்சின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உக்ரேன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (30) காலை இடம்பெற்றது. உக்ரேன் நிர்வாகத் தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார துறைகளை மேம்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையிலும் வர்த்தக துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த வர்த்தக ஆணைக் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கும் உக்ரேன் விமான சேவைநிறுவனத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.

இலங்கையிலிருந்து உக்ரேன் இறக்குமதி செய்யும் தேயிலை, மற்றும் பீங்கான் பொருட்களுக்காக அதிக வசதிகளை வழங்குவது தொடர்பாகவும் உக்ரேன் இலங்கைக்கு ஏற்றுமதிசெய்யும் யூரியா உரம் மற்றும் உருக்கு கம்பிகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் அகழ்வு பற்றி ஆராய உக்ரேனிடம் இருந்து தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவும் இரு நாடுகளுக்கிடையிலும் கல்வி பரிமாற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளினதும் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் சுற்றுலா, கடற்படை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் மூன்று உடன்படிக்கைகளை இலங்கையும் உக்ரேனும் நேற்று (30) செய்துகொண்டன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சுற்றுலா தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் உக்ரேனிய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சர் மிக்கேய்ல் குயின்யக்கும் கைச்சாத்திட்டனர்.

யுத்த நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் உக்ரேனின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் மிக்கைலோ யெஸெலும் கைச்சாத்திட்டனர். பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் பாது காப்பு சேவைகளின் பிரதி தலைவர் பொரோ ட்கோவும் கைச்சாத்திட்டனர்.

கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தை சுற்றிவளைக்க வீரவன்ச வலியுறுத்தல்.

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பாக நியமித்துள்ள விசேட நிபுணர்குழுவை கலைத்து விடுவதற்கான தீர்மானத்தை எடுக்கும் வரை இலங்கையிலுள்ள ஐ.நா.அலுவலகத்தை சுற்றி வளைத்து அலுவலர்களை உட்புறத்தில் அகப்படுத்தி வைத்திருக்குமாறு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.நிபுணர்குழு நியமனமானது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைத்தலைவர்களையும் யுத்த கதாநாயகர்களையும் ஆஜராக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையென நேற்று புதன்கிழமை நிருபர்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை சாதாரண நடவடிக்கையாக கருத முடியாது. ஏனெனில் ஐ.நா.வின் அடுத்த கட்ட நடவடிக்கை விசாரணைக்குழு வொன்றை அமைப்பதாக இருக்கும். மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்களுக்கான சாத்தியப்பாட்டை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதாக அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.  இது சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் தலைவர்களையும் யுத்த கதாநாயகர்களையும் ஆஜராக்கும் நிலைமைக்கு இட்டுச்செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஐ.நா.நிபுணர் குழுவுடன் பேசுவதற்கு தயாரென ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்திருக்கும் விடயம் பற்றியும் அமைச்சர் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார். இது நாட்டின் இறைமைக்கு துரோகமிழைக்கும் விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.ஆலோசனை குழு நியமனத்துக்கு இலங்கை கண்டனம்

uno.jpgஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடு என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

30 வருடங்களுக்கு மேலாக இலங்கை பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வன்முறைகளும் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக அது விளங்கியது.

நீண்ட கால மற்றும் சிரமமான போராட்டத்தின் பின் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து அரசாங்கம் நாட்டை மீட்டெடுத்தது. தற்போது நாட்டையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் படிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை விசாரணை சட்ட விதிகளின் கீழ் நியமித்துள்ளார். இலங்கை சட்டத்தின் கீழ் அமைக்கப்படக் கூடிய ஆகக் கூடிய நியதிச் சட்ட ஆணைக்குழுவாக இது அமைகிறது. இந்த ஆணைக்குழுவானது தேசிய ஒற்றுமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.

இலங்கை மனித உரிமைகளை தொடர்ந்து ஊக்குவித்தும், பாதுகாத்தும் வந்துள்ளது. இதனை ஐ.நா. போன்ற முறையான அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க ப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடாகும்.

அத்துடன் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை க்கு எதிரான தரப்பினர் இதன்மூலம் முறையற்ற வகையில் பயனடையவும் இதனால் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அந்த விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்; இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இராணுவ செயற்பாடுகளின்போது பாரிய அளவிலான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறது என்று வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

இதேவேளை மேற்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டமை தேவையற்றது என ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை பலமான அரசியலமைப்புடன் கூடிய இறைமையுள்ள நாடாகும். அரசியலமைப்புப்படி நிறைவேற்று அதிகாரமும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் அதிகாரமும் கொண்ட ஜனநாயக நடைமுறை எமக்கு உள்ளது. அத்துடன் துடிப்புடன் இயங்கும் நீதித்துறையும் உள்ளது. நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளதுடன் அவர்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறுகிறார்.

மோதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராயும் அதி காரத்துடன் கூடிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளார். இந்நிலையில் அதற்கு சமாந்தரமாக ஒரு விசார ணையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த முற்படுவதானது இலங்கை அதன் தேசிய நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற் படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாக ஆரம்பித்துள்ள நடைமுறையை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகை யிலானதும் குறைத்து மதிப்பிடும் வகையிலானதுமாகும்.

அங்கத்துவ நாடொன்றின் விருப் பத்தை கவனத்திற்கொள்ளாது ஐக் கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் மூவர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார். தேவையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள இது வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறி யுள்ளதாக அரச தகவல் திணைக்கள அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

புறக்கோட்டையில் இன்று அதிகாலை கிரனைட் தாக்குதல்

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தென் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமனம்

safeena_dean.gifதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி மற்றும் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதி என்ற பெருமை இவரையேசாரும்.

கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். கல்முனையை பிறப்பிடமாக கொண்ட சபீனா இம்தியாஸ், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழம் என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது

கடலுக்குள் புதிய நகரம்: 450 ஏக்கரில் நிர்மாணம்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி 450 ஏக்கரில் புதிய நகரமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியந்த விக்ரம கூறினார். துறைமுக அதிகார சபையில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது;

கொழும்பு துறைமுகப் பகுதியில் 285 ஹெக்டயர் அளவு நிரப்பி விரிவுபடுத்தப்படுகிறது. இதனுடன் இணைந்ததாக கொழும்பு துறைமுகத்தில் இருந்து காலிமுகத்திடல் வரையான 450 ஏக்கர் பகுதி நிரப்பப்பட்டு புதிய நகரமொன்று உருவாக்கப்படும். கடலை நிரப்பி ஆரம்பக் கட்ட பணிகளை துறைமுக அதிகார சபை மேற்கொள்ளும்.

இதற்காக 350 மில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளது. திட்டமிட்ட முறையில் புதிய நகரம் நிர்மாணிக்கப்படும். இதன் மூலமாக கொழும்பு நகரின் நெரிசல் குறைவடையும். இது தவிர தெஹிவளையில் இருந்து கொள்ளுபிட்டிவரை கடலோரமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதையை காலிமுகத்திடல் வரை நீடிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். இதன்படி காலி முகத்திடலில் இருந்து கொள்ளுபிட்டி வரையான கரையோரமும் நிரப்பப்படும்.