அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மலை ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ajmal.jpgமும்பை யில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மலை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்கப் போவதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை  ஆரம்ப நிலையிலேயே இந்தியா நிராகரித்துள்ளது.  மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியானார்கள். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேரை கமாண்டோ படை சுட்டுக் கொன்றது. அஜ்மல் கசாப் என்ற ஒரே தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

அவன் இப்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கும், பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தினர் என்பதற்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை கடந்த மாதம் 5ம் தேதி பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கான

சதித் திட்டத்தில் ஒரு பகுதி தனது நாட்டில்தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரக்மான் மாலிக், மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணை ஏஜென்சி விசாரணை நடத்தி 8 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. அவர்களில் 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 2 பேர் பிடிபடவில்லை. அவர்களில் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்பும் ஒருவன். இது தொடர்பாக இந்தியாவிடம் இன்னும் நிறைய தகவல்களை கேட்போம்.

அப்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். அஜ்மலை எங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் இதுவரை கேட்கவில்லை. ஆனால், எங்களுடைய விசாரணைக்கு தேவைப்பட்டால் அவனை ஒப்படைக்கும்படி கேட்போம் என்றார்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று உடனடி பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறுகையில், இந்தியாவில்தான் தாக்குதல் நடந்துள்ளது. எனவே, அஜ்மல் கசாப்பை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியாவில் குற்றம் செய்தவரை எந்த அடிப்படையில் இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்? அஜ்மலிடம் இந்தியாவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றனர்.

மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரும் இதே கருத்தை கூறினார். என்ன விலை கொடுத்தாலும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க மாட்டோம். அவன் செய்துள்ள குற்றத்துக்கு தூக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அதற்கு முன்பாக அவனை எங்கும் செல்ல விடமாட்டோம் என்று அவர் கூறினார். மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஜெயந்த் பட்டீல் கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஸ்கர் -இ- தொய்பா தீவிரவாதி ஷாகிர் ரக்மான் லக்வி, இன்னொரு தீவிரவாதி ஷரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில்தான் உள்ளனர். இவர்களை ஒப்படைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. அப்படி இருக்கும்போது அஜ்மலை ஒப்படைக்கும்படி எந்த வகையில் அந்த நாடு கேட்க முடியும்? என்றார்.

நாளை தமிழகம் கொந்தளிக்க வேண்டும் – வைகோ

1102-vaiko.jpgநாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.

முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.

தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் பற்றிய பேச்சு: ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்

1102-vaiko.jpgதிருச்சியில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய கோரி தமிழ்நாடு தேவேந்திரர் குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறப்புரையாற்றிய பின்னர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’ மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால் விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார். எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள் போர் நிறுத்தம் என்றால் இரண்டு புறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

விடுதலைபுலிகளை பொறுத்த வரை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரிலேயே நார்வே தூதுக்குழு கேட்டு கொண்டதற்கு இணங்க போர் நிறுத்தம் செய்தனர். ஆனால் போர் நிறுத்தத்தை இலங்கை அரசுதான் முறித்தது. இலங்கை போர் என்பது ராஜபக்சே அரசும், இந்திய அரசும் சேர்ந்து நடத்துவது ஆகும். ஆனால் மத்திய அரசும் தமிழக முதலமைச்சரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போரை நிறுத்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
இந்திய அரசு ஒப்புக்காக போரை நிறுத்த கூறினாலாவது மற்ற நாடுகள் போரை நிறுத்த கோரி குரல் கொடுக்கும். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

எல்ரிரிஈயினரின் பெருந்தொகை படைப் பொருட்கள் கண்டுபிடிப்பு

truck.jpgவிஸ்வமடுப் பகுதியில் எல்ரிரிஈயினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவரும் 57வது படைப்பிரிவின் 571 வது, 572 வது பிரிகேட் படையினர் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நேற்று (பெப்:15) அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் விட்டுச் சென்ற பல படைப்பொருட்களை படையினர் கண்டுபிடித்துள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

571வது பிரிகேட்டின் 17வது கஜபா படையணியினர் விஸ்வமடுப் பகுதியில் நடத்திய தேடுதலில் 20 கைக்குண்டுகள், இரண்டு விருத்தி செய்யப்பட்ட வெடிக்கவைக்கும் உபகரணம்(IED) மற்றும் 81 மிமீ மோட்டார் குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் தேடுதல் நடத்திய  572வது படைப்பிரிவின் 7வது காலால் படையினர் பெருமளவான இராணுவ உபகரனங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பீப்பாக்களையும் கைபற்றியுள்ளனர்.

இப்படையணி எல்ரிரிஈ பயங்கரவாதிகளால் கைவிடப்பட்ட முகாமையும் கண்டுபிடித்துள்ளனர்.  7 வது காலால் படையினர் இத்தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடித்துள்ள மற்றய  உபகரணங்களின் விபரங்கள் பின்வருமாறு

09 x எல்ரிரிரிஈ பவுச் , 2530 x ரி-56 ரவைகள் ,250 x எப் என்சி ரவைகள் , 07 x கைக்குண்டுகள் , 41 x எல்ரிரிஈ தொப்பிகள், 52 x எல்ரிரிஈ  சீருடைகள் , 03 x ஜெகட்டுகள் , 05 x எல்ரிரிஈ பெக், 02 x 81 மிமீ மோட்டார் குண்டுகள்

விஸ்வமடுப் பகுதியில் 572பிரிகேட்டின்  9வது விஜயபாகு படைப்பிரிவினர் இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகையான ஆட்டிலறி செல்களைக் கைபற்றியுள்ளனர். மேலும் 14 கிறீஸ் பெரல்கள்(210லீ), பசளைக் (யூரியா) களஞ்சியசாலைக் கட்டிடங்கள் மற்றும் டோசர் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களையும் கைபற்றியுள்ளனர். அத்துடன் கைப்பற்றப்பட்ட மற்றய பொருட்களின் விபரங்கள் பின்வருமாறு.  115 x 122மிமீ.ஆட்டி செல்கள், 40 x 130மிமீஆட்டிசெல்கள், 75 x 81மிமீ மோட்டார் பியூஸ்கள், 05 x 82 மிமீமோட்டார் குண்டுகள், 180 x 60 மிமீ.​மோட்டார் பியூஸ், 10 x 130மிமீஆட்டிலறி பியூஸ், 20 x 130மிமீ வெற்றுச் செல்கள், 01 x கண்ணிவெடி, 01 xடோசர் 02 x ரி- 56 துப்பாக்கிகள்.

ஆயுதம் தரித்த புலிகளுடன் பேசுங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை! – ப. சிதம்பரம்

p-chidambaram.jpgஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகள் அறிவித்தால், உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெற இந்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உரிய ஏற்பாடு செய்யும். இதுதான் இந்திய அரசின் கொள்கை என இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது: இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மதிக்காமல்,  அதை புலிகள் காலில் போட்டு மிதித்ததே,  இன்றையப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம்.

ஆயுதம் ஏந்திய போராளிகளுடன் எந்த நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தாது. எனவே புலிகள் ஆயுதத்தை கீழே போடாதவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நாம் இலங்கை அரசை வற்புறுத்த முடியாது

இந்திய அரசின் பெரும் முயற்சியின் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா தளங்களிலும் சம உரிமை அளிக்கும் விதத்தில் 1987-ம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம் உருவானது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்தை முதலில் ஏற்காவிட்டாலும்,  பிறகு ஏற்க சம்மதம் தெரிவித்தார். அவர் சம்மதம் அளித்ததால்தான், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுடன் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தம் மட்டும் அமுலாகியிருந்தால், இந்நேரம் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வும்,  ஜனநாயக அரசும் கிடைத்திருக்கும். அங்கே ஒரு தமிழ் மாநிலமும்,  தமிழர் ஒருவர் முதல்வராக ஆளும் வாய்ப்பும் அமைந்திருக்கும். அமிர்தலிங்கம் உள்ளிட்ட ஏராளமான இலங்கைத் தமிழினத் தலைவர்களையும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும்; புலிகள் படுகொலை செய்தது மாபெரும் தவறு.

இலங்கைத் தமிழர்களின் சர்வாதிகாரமிக்க தலைவராகத் தான் திகழ வேண்டும் என பிரபாகரன் கருதுவதே பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். அவரை சர்வாதிகார தலைவராக்குவது நமது வேலையல்ல. இந்தியா மட்டுமல்ல, உலகில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த நாட்டு அரசும், ஆயுதம் ஏந்திய போராளிகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடாத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.  இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல. நம் காலனியாதிக்க நாடும் அல்ல. அது ஒரு இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு.

எனவேää ஆயுதம் ஏந்திய புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு இல்லை என்றும் அமைச்சர் ப. சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

புத்தளத்தில் மறுவாக்களிப்பு 21ஆம் திகதி! தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவிப்பு

sri-lanka-election-01.jpgபுத்தளம் தேர்தல் தொகுதியில் ரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை தமிழ் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் வாக்களிப்பை நடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது இந்த வாக்களிப்பு நிலையத்தில் மோசடி இடம்பெற்றதாக புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரியினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இதன் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க ரத்துச் செய்தார்.

இந்த வாக்களிப்பு நிலையத்தின் முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் தேர்தல் தொகுதியின் இறுதி முடிவுகளை அறிவிப்பது பிற்போடப்பட்டுள்ளதுடன்ää புத்தளம் மாவட்ட மற்றும் வடமேல் மாகாண இறுதி முடிவுகளும் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் 500 கர்ப்பிணிகள் அனுமதி

pregnant-lady.jpgஅரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள 500 கர்ப்பிணித் தாய்மார்களை வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களை அனுமதித்ததாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளதுடன் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கட்டுப்பாடற்ற பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து வந்த இந்த கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை நூற்றுக்கணக்கானோர் கைதாகித் தடுத்து வைப்பு

colombo.jpgகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நேற்று அதிகாலை முதல்மாலை வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை மேற்கொண்டுள்ளனர்.  இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைதாகி பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், 300க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது.

பத்துக்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களை இலக்கு வைத்து பாரியதாக்குதல்களை நடத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு கட்டங்களாக நிரந்தர மீளக்குடியேற்றம் – பசில் ராஜபக்ஷ எம்.பி

vanni.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்தோர் நான்கு கட்டங்களாக சொந்த இட ங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நான்கு கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த உறுதியான திட்டத்தின் மூலம், ஏப்ரல் மாதமளவில் அவர்களது சொந்த இடங்களில் நிரந்தரமாக குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  கடந்த வியாழனன்று அமைச்சுக்களின் செயலாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் அரசாங்கம் முழுமையாகச் செய்து வருகிறது. அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

புலிகளின் பிடியிலிருந்து கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு முதல்நாள் சூடான சாப்பாடும், சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் அவர்கள் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். யு.என். எச். சி. ஆர். மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனங்கள் இவர்களுக்கான கூடாரங்களை வழங்கவுள்ளதெனவும் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சு தேவையான அனைத்து சுகாதார ஏற்பாடுகளையும் செய்துள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள்: சீமான்

seeman-1302.jpgதமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.  இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை ராஜபக்சே சொல்லவில்வை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்?  இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.

புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் சீமான்  பங்கேற்று பேசினார்..

இயக்குனர் சீமான் பேசுகையில், இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.  7 நாடுகளின் ராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.

உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள்.  எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் என்றார்.

கூட்டத்தில் பேசிய சீமான், ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந்தேதி சந்தித்த டைரக்டர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாதையாகும். புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார்.  சீமானை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.