அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சர்வதேச உதவிகள் இனிமேல் அரசின் வழிகாட்டலிலேயே செலவிடப்படும் – கெஹெலிய ரம்புக்வெல

keheliya_hulugalla_.jpgஇடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் இனிமேல் அரசாங்கத்தின் வழிகாட்டலிலேயே செலவிடப்படவேண்டும். முன்பு போல் அரசசார்பற்ற நிறுவனங்களில் நிகழ்ச்சி நிரலின்படி செலவிடமுடியாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாம் முழு உலகுக்கும் ஒரு முன்னுதாரணமாகும். சிவிலியன்கள் மிகவும் சிறப்பாகக் கவனிக்கப்படும் இது போன்ற முகாம் உலகில் எங்கும் காணமுடியாதென ஐ நாவின் இரண்டாம் நிலைத் தவைர் ஜோன் ஹோம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள குடும்பங்கள் ஒன்றிணைந்து வாழும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும்  தனித்தனி வீடுகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் அங்கு இயங்குகின்றன. இதனையடுத்து இலங்கையில் இடம்பெயர்நதவர்களுக்கு உதவ ஐ.நா நிறுவனமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன. அதற்காக நாம் நன்றி தெரிவிக்கிறோம்.

ஆனால் அவ்வாறான உதவிகள் அனைத்தும் இறைமையுள்ள எமது அரசாங்கம் வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின் அடிப்படையில்தான் பயன்படுத்தப்ட வேண்டும். அவர்கள் வகுத்த திட்டத்தில் செயற்பட எமது அரசாங்கம் இடமளிக்காது. கடந்த காலங்களில் இலங்கையில் செயற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய உதவிகள் வடக்கிலுள்ள தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. புலிகளுக்காக சுகபோக நீச்சல் தடாகம் அமைக்கவும் அதிநவீன தொலைத் தொடர்பு நிலையங்கள் மற்றும் உலகின் முதல்தர அச்சகங்களை அமைக்கவுமே பயன்பட்டன என்பது இன்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் இலங்கைக்கெனச் செலவிடும் பணத்தில் 70 சதவீதம் அந்த நாடுகளின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கென அந்த நாடுகளுக்கே மீண்டும் சென்றடைகின்றன. ஆனால் அரசாங்கம் வகுக்கும் திட்டங்களில் உள்ளுர்ப் பணியாளர்களின் சேவையே பெற்றுக்கொள்ளப்படும். சகல செலவினங்களுக்கும் அரசாங்கமே வழி காட்டும். இவ்வாறான கருத்துக்களை முன்னர் கூறமுடியாதவொரு அச்ச நிலை இருந்தது. ஆனால் இன்று எமது அரசு எழுப்பிய சந்தேகங்கள் உண்மைப்படுத்தப்ட்டுள்ளதால் இன்று அவற்றை துணிந்து கூறக்கூடியதொரு நிலை ஏற்பட்டுள்ளது  என்றும் அமைச்சர் கூறினார்.

புலிகள் 45 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கம் – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவில் 45 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் படையினரால் முடக்கப்பட்டுள்ளனர் எனவும் 500 க்கும் குறைவான புலிகளே இப்போது அங்கு எஞ்சியுள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசதம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. எனினும் புலிகள் அங்கு அம்பகாமம் மற்றும் பொக்கனை ஆகிய பிரதேசங்களில் ஊடுருவி அங்கிருந்து ஒட்டிசுட்டானில் உள்ள படையினர்மீது  130 மற்றும் 120 மில்லி மீற்றர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர். இன்று காலையும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

புலிகள் எங்கிருந்து தாக்குகினறனர் என்பதை படையினரில் ராடர் கருவி தெளிவாகக் காட்டியபோதும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல் நடத்தவில்லை. ஜனவரி மாதம் முதல் இன்றுவரை புலிகளின் பிடியிலிருந்து 37589 பொது மக்கள்  தப்பிவந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர், நேற்றும் 200 பேர் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் மீது புலிகள் நடத்திய எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதலில் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் ஆறு போர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை ஆறு படகுகளில் தப்பி வந்த பொது மக்கள்மீது வேறு படகுகளில் பின்தொடந்து வந்த புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொது மக்கள் தப்பி வந்த ஆறு படகுகளில் 2 சுண்டிக்குளியில் கரை சேர்க்கப்பட்டன. ஏனைய 4 படகுகளையும் கடற்படையினர் முனைப் பிரதேசத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

பக்தர்களின் தரிசனத்திற்காக புத்த பெருமானின் புனித தந்தம்

president_visit_kandy.jpgநாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தியும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் நிலை பெற வேண்டி கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று  புத்த பெருமானின் புனித தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தமது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டார். விசேட சமய வழிபாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்று மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பக்தர்கள் இதனை பார்வையிட முடியும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் புத்த பெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இதனை பார்வையிட நாடு முழுவதிலுமிருந்து சுமார் 10 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் புனித மாளிகை வளாகத்தையும் நகரத்தையும் அசுத்தப்படுத்தா வண்ணம்  சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தினூடாக புலிகளுக்கு ஆயுதக் கடத்தல். சூத்திரதாரிகள் யாரென்பது விரைவில் தெரியுமென்கிறார் அமைச்சர்

keheliya_hulugalla_.jpgகடந்த காலங்களில் கொழும்புத் துறைமுகத்தின் சுங்கப் பகுதியினூடாக உலகின் அதி நவீன ஆயுதங்கள், அச்சக நவீன உபகரணங்கள், மற்றும் மிகவும் விலை மதிப்புள்ள தொலைத் தொடர்புச் சாதனங்கள் விசேட கொள்கலன்கள் மூலம் புலிகளுக்குச் சென்றடைத்துள்ள தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

இப்பெரும் மோசடி எவ்வாறு நடைபெற்றது? இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார்? என்பதைக் கண்டறிய துரித விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,

2002 ஆம் 2004 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில்  நடைபெற்றுள்ள இந்த மாபெரும் மோசடியின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற விபரத்தை இன்னும் சில தினங்களில் அரசாங்கம் வெயிடும்.

நாளை கிழக்கில் ஒரு மங்களகரமான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வாகும். தோற்கடிக்கப்படும் புலிகளால் இனி தமக்கு உயிராபத்து இல்லை என அந்த அமைப்பு கருதுவதாலும் அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பதில் நம்பிக்கை கொண்டதாலும் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுகின்றது. இது மிகவும் பாராட்டுக்குரியது

கிழக்கில் கப்பம் கோரல், ஆட்கடத்தல் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றனர் என சில ஊடகங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பயன்படுத்தப்பட்ட 13 ஏவுகணைகளின் வெற்றுக் கூடுகள் படையினரால் கண்டுபிடிப்பு- பிரிகேடியர் உதய நாணாயக்கார அறிவிப்பு

udaya_nanayakkara_.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் பயன்படுத்தப்பட்ட 13 ஏவுகணை களின் வெற்றுக் கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறுகையில்

இந்த ஏவுகணைகள்  எப்போது யாரால் எந்த இலக்குக்குப் பயன்படுத்தப்பட்டன போன்ற தகவல்கள் அந்து வெற்றுக் கூடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி முதலாவது ஏவுகணை இராணுவத்துக்கு எதிராகப் பயன்படுத்ப்பட்டுள்ளது. கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமி 23 ஆம் திகதி பாவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான இரு ஏவுகணைகளை அண்மையில் கிழக்கில் தொப்பிகலைப் பிரதேசத்தில் படையினர்  கண்டுபிடித்தனர் என்றும் பிரிகேடியர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

cricket_pakisthan.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் நடத்தப்பட்ட தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்கள் மனிதாபிமானமற்றவை. அவற்றை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் ஐ.நா.  தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஐ.நா. சபை கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை,  இத்தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட பாதுகாப்பை கடுமையாக விமர்சிக்கிறார் முரளி

crc-04032009.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகக் கண்டித்துள்ள இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தங்களது நடமாட்டம் குறித்து தீவிரவாதிகளுக்கு உள்ளகத் தகவல்கள் ஏதாவது கிடைத்திருக்கலாமெனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்
.
லாகூர் டெஸ்ட்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஹோட்டலிலிருந்து கடாபி மைதானத்திற்குச் சென்றபோது இலங்கை அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கிலக்கானது.

இது தொடர்பாக முரளிதரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு (“ரேடியோ 5mm’) வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;

எமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போதியதாயிருக்கவில்லை. எமது வாகனத்தில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் எவருமே கடமையில் இருக்கவில்லை. அப்படி எவராவது இருந்திருந்தால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாயிருந்திருக்கும். வழமையாக நாம் செல்லும் போது எமக்கு பாதுகாப்பிற்காக நால்வர் அல்லது ஐவர் வருவர். அதேநேரம், கடாபி மைதானத்திற்கு நாம் செல்லும் பாதை குறித்த உள்ளகத் தகவல்கள் தீவிரவாதிகளுக்கு கிடைத்திருக்கலாம்.

ஹோட்டலிலிருந்து நாங்கள் காலை 8.30 மணியளவில் புறப்பட்டோம். பாகிஸ்தான் அணி 8.35 க்கு புறப்பட்டது. நாங்கள் இரண்டாகப் பிரிந்திருந்தோம். அவர்களுக்கு சரியான நேரம் தெரிந்திருந்திருக்கலாம். அவர்கள் எமது பஸ்சாரதியை சுட முயற்சித்தனர். பின்னர் அவர்கள் பஸ்ஸின் இரு புறங்களிலும் பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். பஸ்ஸின் இரு பக்கங்களிலும் 39 குண்டுத்துளைகளை எண்ணக்கூடியதாயிருந்தது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்களான தரங்க பரண விதாண மற்றும் திலான் சமரவீர ஆகியோர் பலத்த காயம் காரணமாக இறந்திருப்பார்களெனத் தாங்கள் கருதியதாகவும் தெரிவித்தார். இதேநேரம், இந்தத் தாக்குதலானது ஒரு பெரிய சதித் திட்டத்தின் அங்கமாயிருக்கலாமெனத் தெரிவித்துள்ள போட்டி நடுவர் கிறிஸ் புரோட் (இங்கிலாந்து), துப்பாக்கிச் சூடு ஆரம்பமானவுடன் தாங்கள் பொலிஸாரால் கைவிடப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

தாங்கள் யுத்த வலயமொன்றுக்குள் சிக்குண்டதாக நடுவர் சைமன் ரபெல் தெரிவித்தார். இரு அணியும் ஒரேநேரத்தில் புறப்பட்டிருந்தால் வீரர்கள் சென்ற வாகனத் தொடரணிக்கான பாதுகாப்பு அதிகமாயிருந்திருக்கும். ஆனால், இலங்கை அணி புறப்பட்டபோது புறப்படாது ஐந்து நிமிடம் தாமதித்தே பாகிஸ்தான் அணி புறப்பட்டதால் பாதுகாப்புப் பிரிவினர் இரண்டாகப் பங்கிடப்பட இலங்கை அணி வீரர்கள் தாக்குலுக்கிலக்கான போது அவர்களுக்கு பாதுகாப்பாகச் சென்றவர்களின் எண்ணிக்கை அரைவாசியாக இருந்தது. இதேநேரம், இலங்கை அணி வீரர்களின் பஸ்மீதான தாக்குதலின் போது பொலிஸார் செயற்பட்ட விதமும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தாக்குதலின் போது தங்களை பாதுகாக்க எவருமே முன்வரவில்லையெனவும் தாங்கள் தனித்து விடப்பட்டிருந்ததாகவும் இது தங்களை கடும் சீற்றமடைய வைத்ததாகவும் சைமன் ரபெல் தெரிவித்துள்ளார்.

வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவு.

navy_rg.jpgவன்னியில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக அரசு இரண்டு பாதைகளைத் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த திட்டத்திற்கு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் உதவியை அரசு நாடியிருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என “ரொய்ட்டர்” செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் சாலைப் பகுதியூடான ஒரு பாதையையும், முல்லைத் தீவு நகரப் பகுதியூடான ஒரு பாதையையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழுவே தீர்மானித்தது எனவும், இத்திட்டம் உண்மையென அரச அதிகாரி மற்றும் இரு இராணுவ அதிகாரிகள் ஆகியோர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் என “ரொய்ட்டர்” தெரிவித்திருக்கிறது. இதேவேளை, இத்திட்டம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும், எனினும் இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து எந்தவிதத் தகவலும் வெளிவரவில்லை எனவும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு கூறியுள்ளது.அத்துடன், இத்திட்டத்திற்கு இரு தரப்பும் இணங்கினால், மக்கள் தாமாக வெளியேறும் பட்சத்தில் தாங்கள் உதவத் தயார் என்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தெரிவித்தது.

கொழும்பில் ஆனந்த விகடன் விற்பனையாளர் ஸ்ரீதர்சிங் கைது

vkadan.jpgஇலங்கையில் இயங்கும் பிரபல தமிழ் புத்தகக் கடைகளின் உரிமையாளரும் விகடன் விற்பனைப் பிரதிநிதியுமான ஸ்ரீதர்சிங் நேற்று இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார். விடுகலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மற்றும் அவர் தலைமையில் இயங்கும் புலிகளின் விமானப் படை, அது சமீபத்தில் கொழும்பில் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த செய்திகள் ஆனந்த விகடனில் விரிவாக வெளியாகியுள்ளது. இந்த இதழ்களை அவர் விற்பனை செய்ததால் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கிசை காவல் நிலையத்தில் அவரை அடைத்துவைத்துள்ளனர்.

‘ஆனந்த விகடன்’ வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான கட்டுக்களை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் பிரசுரமாகியிருந்த வான் தாக்குதல் குறித்த கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதைக் கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், வியாழக்கிழமை மாலை விகடன் கொழும்பு விற்பனைப் பிரதிநிதியான ஸ்ரீதர்சிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் கல்கிசை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக ஸ்ரீதர்சிங்கின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் ‘ஆனந்த விகடன்’ வார இதழை ‘பூபாலசிங்கம்’ புத்தகசாலை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதப் போராட்டம் – 9ம் தேதிக்கு மாற்றினார் ஜெயலலிதா.

05-jayalalitha.jpg இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகிற 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று திடீரென அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது போராட்டத்தை 9ம் தேதியே மேற்கொள்ளப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அ.தி.மு.க. சார்பில் 10-ந் தேதி நடைபெறுவதாக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.