அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எவ்வித திட்டங்களையும் முழுமையாக செய்யவில்லை -மகிந்த சமரசிங்க

mahinda-samara-sinha.jpgமோதல் நடைபெறும் பகுதிகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எதுவிதமான திட்டங்களையும் முழுமையாக மேற்கொள்ளவில்லையென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே இவ்வாறு கூறிய அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்;

மோதல் நடைபெறும் பகுதிகளில் பணியாற்றிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை விளக்கும் படங்களை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இவ்வாறு விளம்பரப் படங்களை காட்சிப்படுத்துவதை மட்டுமே இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் பணியாகக் கொண்டிருந்தனவே தவிர, செயல்திட்டங்கள் எதனையும் பூரணப்படுத்தவில்லை.

ஆனால் மனிதநேயப் பணிகள், விளையாட்டு மைதானப் புனரமைப்புகள், சனசமூக நிலையப் புனர்நிர்மாணம் என்பனவற்றிற்காகப் பெருந்தொகைப் பணத்தினை இவ்வமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. இவ்விடயம் தொடர்பாகவும் இலங்கையில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடும். அதேவேளை, பொதுமக்களின் பாவனைக்காக ஏ9 வீதியைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் வீதியைத் திறப்பதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படுமெனவும் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பிரதேசம் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் அங்குள்ள வாவிப்பகுதி கைப்பற்றப்பட்டால் 20 சதுர கிலோமீற்றருக்கும் கூடுதலான பிரதேசம் மட்டுமே அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மிகுதியாக உள்ள பிரதேசம் கைப்பற்றப்படவுள்ளதோடு நாட்டின் முழுப் பிரதேசமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொது சன முன்னணியின் கீழ் போட்டியிடும் மத்திய சூழல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் உதயகமன்பிலவின் இணையத்தளத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளுக்கு நாள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் சுருங்கிவருவதாக தெரிவித்த கோதாபய ராஜபக்ஷ மேலும் தனது உரையில்; இந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகள் இரு இராணுவப்பிரிவுகளை நிறுவுவதற்கு போதுமான பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். முன்னைய புலனாய்வு பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் , விடுதலைப்புலிகளின் ஆளணி வசதிகள் மிகக்கூடுதலாக இருக்குமென நாம் எதிர்பார்த்தோம்.

அவர்களின் அவ்வாறான ஒழுங்கமைப்புகளை நாம் முறியடித்துள்ளதோடு , மிக விரைவில் அவர்களது பகுதிக்கு மூச்சுவிட முடியாத நிலைக்கு அவர்களை கொண்டு வந்து நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு கமன்பிலவைப் போன்றவர்களின் ஆதரவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மிகவும் உதவியாக அமைந்ததாக கோதாபய குறிப்பிட்டார்.

புற்றுநோய் பரவுவது போன்ற பாதிப்பை இந்த யுத்தம் கொண்டிருப்பதோடு , இந்த பிரச்சினையை குறைந்தபட்சம் அடுத்த 10 பரம்பரைகளுக்கு நாம் விட்டுவைக்கப்போவதில்லை. இப் பயங்கரவாத பிரச்சினை 30 வருடங்களை நிறைவு செய்துள்ளநிலையில் இதனை அடுத்த தொடர்பு அத்தியாயத்திற்காக நாம் விட்டுவைக்கப் போவதில்லை. இந்த யுத்தம் ஒரு புற்றுநோயை போன்றது.

ஒரு கட்டத்தில் கதிரியக்க சிகிச்சை மூலமாக மேலும் புற்றுநோயை குணப்படுத்தலாம் . அவ்வாறே பயங்கரவாதத்தின் மூலமான யுத்தத்தையும் வெற்றி கொள்ள முடியும் . பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் அக்குரஸ்ஸவியில் நடைபெற்ற சம்பவம் போன்ற நிலைமைகள் இனிமேல் ஏற்படாது. குறைந்த பட்சம் 10 தலைமுறைகளுக்கு பயங்கரவாதத்தின் கெடுபிடி இல்லாத நாட்டையே நாம் எதிர்பார்க்க விரும்புகிறோம்

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட கடற்படை சிப்பாய், பெண் கான்ஸ்டபிள் கைது

பொது இடத்தில் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஒரு கடற்படை சிப்பாயும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அனுராதபுரம் நீதிமன்ற மேலதிக நீதிவான் சிவன்த மங்சநாயக்க முன்னிலையில் இவ்விரு சந்தேக நபர்களையும் ஆஜர் செய்த பொலிஸார் மதவாச்சி நகர மத்தியில் பொது மக்களுக்கு அருவருப்பூட்டும் விதத்தில் இவ்விருவரும் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிவான் அவ்விருவரையும் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார். புனாவை கடற்கரை முகாமைச் சேர்ந்த சமில் இந்திக்க ரணதுங்க என்ற சிப்பாயும் மதவாச்சி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பணியாற்றும் பி.நில்மினி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளுமே பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.

குவைத்தில் காலமான கனகநாயகத்தின் உறவினர்களை தொடர்புகொள்ள கோரிக்கை

வெளி விவகார அமைச்சு அறிவிப்பு குவைத்தில் காலமான இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவரின் உறவினர்களை தம்முடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவர் குவைத் நகரில் இறந்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இவரின் கடவுச்சீட்டு இலக்கம் M 123850 (NEW) ICM 035568ஆகும்.

இறந்தவரின் வாரிசுகளைப் பற்றியோ அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களைக் கொடுக்க முடிந்தவர்களோ இல. 14 சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் “கொன்சுலர்’ பிரிவுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தொலைபேசி இலக்கம் 0112437635, தொலைநகல் 0112473899.

தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது : மலேசிய எதிர்க்கட்சி தலைவர்

karpal.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட  முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார். தமிழீழம் மலர்ந்தே தீரும்.
 
பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
நண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மகா நாயக்க தேரர்களுடன் ஆனந்த சங்கரி சந்திப்பு – புத்தரின் புனித தந்தத்திற்கும் தரிசனம்

anada_sangari.jpgதமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தற்போது பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித தந்தத்தை நேற்று (13) காலை தரிசித்ததுடன் கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்த அதி வணக்கத்திற்குரிய மகா தேரர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது அனைத்து வகையிலும் தமது அதிகாரத்தையும் ஆட்சியையும் பறிகொடுத்து தொடர்ச்சியான தோல்விகளை அனுபவித்து வரும் பயங்கரவாத புலிகளின் தலைவர் பிரபாகரன் மத வழிபாட்டுத் தலங்களையும் அதில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும் இலக்கு வைத்து மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சர்வதேச அரங்கில் இதனை தெளிவுபடுத்த வேண்டியது எமது அனைவருடைய பொறுப்பாகவுமாக உள்ளது.

தன் வசம் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் பொது மக்களை உடன் அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும்படியும் மேலும் அது போன்று பயங்கரவாத குழுத் தலைவர் பிரபாகரனையும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட வேண்டுமெனவும் நான் பகிரங் கமாக தெரிவிக்கின்றேன் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக் குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித்தக்கியை சந்தித்துப் பேசும் போது ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டினார்.

‘வணங்கா மண்’ கப்பல் – உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கி பயணமாகும்

vanangkaa-mann.jpgஈழத் தமிழ் உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துகளுடன் ‘வணங்கா மண்’ என்னும் கப்பல் தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா வாழ் புலம்பெயர்ந்த உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ள ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கிய பயணம் என இந்நடவடிக்கையை சிறப்பித்துக்கூறும் ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது. சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பு நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் அனைத்துமே எமது மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றது.

இந்நிலையில் எமது உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் ‘வணங்கா மண்’ நடவடிக்கை பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் குண்டு மழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா?  வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது இனம் அழிய விடுவோமா?

அரசுகள் கைவிட்டால் என்ன?  மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து எமது துயரை சொல்வோம். அவர்கள் ஆதரவை பெற்றுக்கொள்வோம்.  எம் உறவுகளை காத்திடுவோம். தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம்.  என்று வேண்டி நிற்கிறது ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி சரத் 1 கோடி கையெழுத்து இயக்கம்

sarathkumar.jpgஇலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துகளை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை கட்சியின் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியி்ல் முதல் கையெழுத்தை சரத்குமார் போட்டார்.

இதைத் தொடர்ந்து அப் பகுதி பொது மக்கள், கடைக்காரர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது சரத்குமார் கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு உரிமை கோரி 60 ஆண்டு காலமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். உடனே, இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஐ.நாவுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்கள், மத்திய அமைச்சர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மக்கள் விரும்பும் தொகுதியில் நான் போட்டியிடுவேன். சேவை மனப்பான்மை, தொலைநோக்கு பார்வையுடன் உழைக்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்கள் கட்சியின் பிரச்சாரம் தொடங்கும் என்றார்.

7 இலட்சம் டொலர் ஜப்பான் நிதியுதவி

japan.jpgவட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்காக 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கான சுவிஸ் அமைப்பிடம் இது தொடர்பாக ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளதென இலங்கைக்கான தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் புலம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் இடம்பெறுகின்றன. இம் மக்களின் நலன் கருதி, அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கான உதவிகளை ஜப்பான் அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கான சுவிஸ் அமைப்பிடம் வழங்கியுள்ளதுடன் அப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

வவுனியாவில் 1000 கட்டில்கள் கொண்ட நடமாடும் வைத்தியசாலை அமைக்கத் தீர்மானம் – சுகாதார அமைச்சு தகவல்

health-care.jpgவடக்கில் மோதல் நடைபெறும் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக 1000 கட்டில்களைக் கொண்ட நடமாடும் வைத்தியசாலை ஒன்றை வவுனியாவில் அமைக்கத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கென தற்காலிக சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும் முல்லைத்தீவிலிருந்து கூடுதலான அளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையில் நடமாடும் வைத்தியசாலைகள் இல்லை என்பதால் வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு அல்லது கடனுதவியாக நடமாடும் வைத்தியசாலை ஒன்றைப் பெறத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.