அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை அமைக்கத் திட்டம்

min-meedia.jpgஊடக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் :ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். முகமூடிகள் அணிந்து முச்சக்கரவண்டியொன்றில் விஸ்வமடுவிலுள்ள இவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இந்தப் பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது.

உறவினர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் இந்தப் பெண் தலையில் படுகாயமடைந்துள்ளார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றைய சம்பவத்தில் கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தொண்டராசிரியராகப் பணியாற்றும் 26 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.

முன்னைய பெண் தாக்கப்பட்ட அதே பாணியிலேயே இந்தப் பெண்ணும் தாக்கப்பட்டிருக்கின்றார். முகமூடி அணிந்த நிலையில் முச்சக்கரவண்டியில் வந்த நான்கு இளைஞர்கள் முச்சக்கரவண்டியை விட்டு இறங்கியதுடன், இந்தப் பெண்ணைத் தாக்கியதாகவும் அவ்வேளை இவரது வீட்டில் நின்ற கணவனும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பெண்கள் தாக்கப்பட்ட போதிலும் இவர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்களோ, உடமைகளோ அபகரிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிகாரி வருகை

neel.jpgஇலங் கைக்கு ஐ.நா ஒருங்கிணைப்பாளர் நீல் புனே இன்று அதிகாலை விஜயம் செய்துள்ளதாக விமானநிலைய வட்டாரம் தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

மோசடிகளுக்கு உதவும் சமாதான நீதவான்கள் கைதாவர்

போலி ஆவணங்கள் தயாரிக்கும் சட்ட விரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ள சமாதான நீதவான்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதி அமைச்சு கூறியது. இதற்காக விசேட குழுவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். போலியான ஆவணங்களை தயாரிக்க சில சமாதான நீதவான்கள் உதவி வருவதாகவும் இத்தகையோரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமாதான நீதவான் முத்திரையை பயன்படுத்தி மோசடிகளுக்கு உதவுவதாகவும் அதனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப் பதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இத்தகைய சமாதான நீதவான்களின் பதவி இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

ஹுருளு வனாந்தரத்தில் பாரிய தீ; 2500 ஏக்கர் நாசம்

fi.jpgஹபரண ஹுருளு வனாந்தரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 2,500 ஏக்கர் காடு சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது திட்டமிட்ட காடு எரிப்பாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சீகிரியாவிலுள்ள விமானப்படையினரின் உதவி பெறப்பட்டது. இதனையடுத்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

என்றாலும், நேற்று இரவு வரை தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையென வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையினருக்கு உதவியாக பொலிஸாரும் பணியில் ஈடுபட்டனர்.

வவுனியா புனர்வாழ்வு நிலையம்: க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர்

ஒகஸ்ட் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். இவர்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கொழும்பின் பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு செயலமர்வு நடத்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென கல்வியமைச்சின் உதவியை நாடியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றுவிக்காத 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கென புனர்வாழ்வு நிலையத்தில் இவ்விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 252 ஆண்களுக்கு வவுனியா தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும் 110 பெண்களுக்கு பூந்தோட்டத்திலும் அவர்களது தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களே இவர்களுக்கான கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றனர். புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 260 பேர் கலைப் பிரிவிலும் 09 பேர் கணிதப் பிரிவிலும் 22 பேர் உயிரியல் பிரிவிலும் 71 பேர் வர்த்தகப் பிரிவிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனரெனவும் அதன் ஆணையாளர் மேலும் கூறினார்.

மேலும் டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 172 பேர் தயாராகி வருவதாகவும் அவர் குறிப் பிட்டார்.

காரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் விழாக்கோலம்- சிங்கப்பூர் அறிஞர்களும் பங்கேற்பு

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர்.

தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இ. வெங்கடேசன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில் கெளரவத்திற்குரிய முதன்மை பேராளர்களாக பேராசிரியர் எஸ். தில்லைநாதன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் சி. சிவலிங்கராசா, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, பேராசிரியர் க. அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்வர்.

இன்றைய நிகழ்வில், பெரிய நீலா வணையில் இருந்து காரைதீவு வரையுமான சிறப்பு ஊர்தியுடனான ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இதில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் இலக்கியவாதிகள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வர். இன்று காலை 8.30 அளவில் ஊர்வலம் ஆரம்பமாகும். காரைதீவு சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம் புதுப் பொலிவு பெற்றுள்ளது. பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவின் சகல பொது நல அமைப்புகளும் விழா ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன. பிரதான விழா விபுலானந்த மத்திய கல்லூரியில் 12.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

காலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலை வடிவங்கள், தமிழின்னிய அணிகள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி, கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள், பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலம் நகர்ந்து விழா நடைபெறும் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.

விழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன. சுவாமி விபுலானந்தரின் மருமகள் திருமதி கோமேதகவல்லி செல்லத்துரை (இ. அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார். மாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

எப்பாவல நால்வர் கொலை விசாரணை – கொலைகளை தானே செய்ததாக சந்தேகநபர் ஒப்புதல்; கோடரி, வீட்டுச்சாவி மீட்பு

எப்பாவலயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் தானே அக்கொலைகளை புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதேவேளை குறித்த இளைஞனால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி மற்றும் வீட்டுத் திறப்பு ஆகியனவும் மீட்கப் பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குத்தியும் வெட்டியும் கொல்லப் பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். அவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்நிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து 23 வயதுடைய இளைஞரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கே. பிரியந்தவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலமொன்றின் கீழ் மறைந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் சம்பவதினம் நள்ளிரவு கோடரி ஒன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகவும் பின்னர் வீட்டின் உள்ளிருந்த மூவாயிரம் ரூபா பணத்தை எடுதுக்கொண்டு கதவுகளை மூடிவிட்டு திறப்புகளை வீட்டின் பின்னாலிருந்த கிணற்றுக்குள் போட்டுவிட்டு வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் அநுராதபுரம் வரை வந்து பின்னர் கண்டி, குருநாகல், கொழும்பு பகுதிகளில் அலைந்து திரிந்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரி வீட்டுக்கு அருகிலிருந்த குளம்ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மது மற்றும் ஹெரோயின் போதைவஸ்துக்களுக்கு அடிமையான இவ்விளைஞன் அநுராதபுரம் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவனாவார்.

நாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதம் – BTI பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில்

mos.jpgடெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்றீரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த பக்றீரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பி.ரி.ஐ. பக்றீரியாவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த அடிப்படையில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கென சுகாதார அமைச்சு கியூபாவிலிருந்து தருவிக்கும் பத்தாயிரம் லீட்டர் பி.ரி.ஐ. பக்aரியா கிடைக்கப்பெற்ற தும் அதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இந்த பக்றீரியா வந்து சேர்ந்ததும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கண்டி நகர், அக்குறணை, கம்பளை ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார்.

இதேவேளை இவ் வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 ஆம் திகதி வரையும் டெங்கு நோய் காரணமாக 149 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப் பகுதியில் 20 ஆயிரத்து 647 பேர் இந்நோய்க்கு உள்ளாகினர் என்று அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார். இந்நோய் கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நோய்க்கு இவ்வருடத்தை விடவும் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இந்நோய்க்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறைவு எனவும் அவ்வதிகாரி கூறினார். இதேநேரம் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு ஒரு நாள் என நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாகப் பிரகடனப் படுத்துவதற்கு டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமுள்ள மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் 61 இருப்பதாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் முதல் தெஹிவளை மருத்துவ அதிகாரி பிரிவும் டெங்கு அச்சுறுத்தல் மிக்க மருத்துவ அதிகாரி பிரிவுக்குள் சேர்க்கப் பட்டுள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் மேலும் கூறுகையில், உள்நாட்டில் பி.ரி.ஐ. பக்றீரியாவை கலாநிதி ராதிகா சமரசேகர தலைமையிலான குழுவினரே தயாரித்திருக்கின்றனர்.  இது தனியார் நிறுவன மொன்றின் ஊடாக இம்மாதத்தின் இறுதியில் சந்தைக்கு விடப்படும். இந்த பக்றீரியா கிருமிநாசினிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருமி நாசினிகள் பதிவாளர் இதனைச் சந்தைப்படுத்துவதற்கு தற்காலிக பதிவையும் வழங்கியுள்ளார் என்றார்.

232 தமிழ் அகதிகளுடன் கனடா செல்லும் கப்பல் – கெளதமாலாவில் அவதானித்ததாக தகவல்

232 தமிழ் குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் கப்பலொன்று மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவுக்கு அருகில் வைத்து நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 59 மீற்றர் நீளமான எம். வி. சன் எனும் இக்கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும் 12 இந்திய தமிழர்களும் இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தை நோக்கி இக்கப்பல் சென்று கொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில் கனேடிய அதிகாரிகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ளவர்களில் தமிழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.