அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

35000 மக்கள் மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவிப்பு : பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு

puthu.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து 35000 மக்களை காப்பாற்ற இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி இன்று மாலை தெரிவித்தார். மேலும் இந் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், தற்கொலைத் குண்டுத்தாக்குதல்  மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  காயப்பட்ட 17 பேர் விமான ஹெலிகப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரன் சரணடைய 24 மணி நேர காலக் கெடு : அரசு அறிவிப்பு 

 “24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்”

இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : “பாதுகாப்பு பகுதியில் இருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். விரைவில் ஒட்டு மொத்த மக்களையும் மீட்டு விடுவோம். விடுதலைப்புலிகள் முற்றிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

பிரபாகரனுக்கு 24 மணி நேரம் கெடு விடுக்கிறோம். அவரும் அவரது குழுவினரும் அதற்குள் சரணடைய வேண்டும். இல்லை என்றால் எங்கள் படை அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் : புதுமாத்தளன் மேற்கு பகுதிமண் அரணின் 3 கி.மீ. படையினர் வசம் 
 
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் அரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. அதேவேளை பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் வரும் பொதுமக்கள் மீது இன்று 3 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு அரசாங்கம் 24 மணி நேர காலக்கெடுவினை அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்துள்ள இந்த காலக் கெடு நாளை நண்பகலுடன் முடியவடையவுள்ளது.

civiling_flee_vanni_01.png

civiling_flee_vanni_02.png

ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீட்பு!

pokkanai.jpgபுலிகளிடம் சிக்கியிருந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் இன்று காலை படைப் பிரிவினரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் பணிகளை படையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் மேட்டை தகர்த்து பொதுமக்களுக்கு தப்பி வருவதற்கு படையினர் வழி வகுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது. 

இந்தியாவின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று இலங்கை வருகிறார்

sri_sri_ravisangar_.jpg இந்தியாவின் ஆன்மீகத்தலைவரும், வாழும்கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று (20.04.2009) இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் தலைவர்களையும் சர்வமத தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளமுள்ள வாய்க்கால் நோக்கி படையினர் நகர்வு

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் அமைந்துள்ள வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்தை பாதுகாப்புப் படையினர் அண்மித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்திற்கு 700 தொடக்கம் 800 மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 53வது மற்றும் 58வது படைப் பிரிவினர் நிலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்கான ஒரு பிரதான பாதையை அமைத்து புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே படையினரின் நோக்கம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

56 சடலங்கள் அரச செலவில் அடக்கம்

வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் பொறுப்பேற்காததும், அடையாளம் காணப்படாததுமான 56 உடல்கள் அரச செலவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் உடல்கள் பூந்தோட்டம் பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கனரக இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுமார் இரண்டு வாரத்திற்கு மேலாக இந்த சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

4 இலட்சத்து 90 ஆயிரம் துப்பாக்கி ரவைகள், அதிகளவான ஆயுதங்கள் புதுமாத்தளனில் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 4 இலட்சத்து 90 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுவரும் படையினர் ஒரே இடத்திலிருந்து 4 இலட்சத்திற்கு மேற்பட்ட ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முதலியார் கட்டுக்குளம் பிரதேசத்திலிருந்து எட்டு இலகு ரக விமானக் குண்டுகள் உட்பட 650 ரி-56 ரக துப்பாக்கி ரவைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, அம்பகாமம், ஒலுமடு மற்றும் முதலியார் குளம் பிரதேசங்களில் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுமாத்தளன் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின்போது 130 மி.மீ. ரக கனரக பீரங்கி ரவுண்ட்கள் 10, எஸ்.ஏ-14 ரக ஏவுகணைகள் 2, 12.7 ரக பீரங்கிக் குழல்கள் 2, தற்கொலை அங்கிகள் 3, ரி-56 ரக துப்பாக்கிகள் 3, அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் 2, அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பொருத்தப்பட்ட 60 மி.மீ. ரக குண்டுகள் 14, 60 மி.மீ. ரக புகைக் குண்டுகள் 7, பாவிக் கப்பட்ட ஏவுகணையின் வெற்றுக் கூடு 1, கைக்குண்டுகள் 14, ஆர்.பி.ஜி குண்டுகள் 23, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 250, 5.56 ரக துப்பாக்கி ரவைகள் 4 இலட்சத்து 90 ஆயிரம் (490,000), இயந்திரத் துப்பாக்கிகள் 2, அமுக்கவெடி 1, சார்ஜ் பேக்ஸ் 11, இயந்திரத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 500, தொலைத் தொடர்பு கருவிகள் 3, பவுச்சர்ஸ் 3 என்பவற்றை ஒரே இடத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் மூன்றாம் படையணியினர் முதலியார் குளத்தில் வைத்து எட்டு இலகுரக விமானக் குண்டுகள் மற்றும் 650 ரி-56 ரக அம்யூனிசன்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, படையணியினர் அம்பலகாமம் பகுதியில் நடத்திய தேடுதல்களின்போது இரண்டு ரி-56 தோட்டாக்கள், ஒரு 81 மில்லிமீற்றர் குண்டு, 37 ரி-56 ரவைகள், ஹெல்மட் 3 ஆகியவற்றையும் மீட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர் நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப் படுத்த ஒருபோதும் முடியாது – ஜனாதிபதி

mahinda.jpgபுத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ ஒருபோதும் முடியாது

எமது நாட்டை வேறு தேசங்களுக்கு அடிமைப்படுத்தவோ அவற்றின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவோ முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்து நாட்டைப் பாதுகாக்க முன்வருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார். மேல் மாகாண ஐ.ம.சு.மு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று மாலை நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உங்களைப் போன்ற மூன்று இளைஞர்களின் தந்தையாக இருந்து உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமைப்படுகின்றேன். உங்கள் மத்தியில் இருக்கும் துடிப்பையும், எதையாவது புதிதாக செய்யவேண்டு மென்ற ஆர்வத்தையும் நானறிவேன். 

இந்நாட்டின் எதிர் காலத்தைப் பொறுப்பெடுக்கவிருப்பவர்கள் நீங்களே, உங்களைப் போன்ற பருவத்தை நானும் கடந்து வந்திருக்கிறேன். மிகவும் குறைந்த வயதில் பாராளுமன்ற உறுப்பினரானேன்.

தாய் நாட்டின் மீது பற்றுள்ள இளம் சமுதாயத்தினரே புலிகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த வடக்கையும், கிழக்கையும் விடுவித்திருக்கின்றனர்.

நாட்டின் இளம் சமுதாயத்தினர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை அண்மையில் கிளிநொச்சிக்கு சென்ற சமயம் நான் புரிந்துகொண்டேன். திருமலை கடற்படை முகாமிலும், விமானப்படை முகாமிலும் நடைபெற்ற வைபவங்களில் கலந்துகொண்ட வேளையிலும் இதனை நான் அறிந்துகொண்டேன்.

இலட்சக்கணக்கான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவது வேறு தொழில்களில் ஈடுபட முடியாமல் அல்ல. மாறாகத் தாய் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்று காரணமாகவே அவர்கள் இவ்வாறு இணைகின்றனர்.

இளம் சமுதாயத்தினருக்கு நல்லதொரு நாட்டையும், சமுதாயத்தையும் உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.

அவர்களது எதிர்பார்ப்புக்கள் இனம்காணப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவதற்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுபானத்திற்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தின் மூலம் நல்லொழுக்கமுள்ள சமுதாயம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்கள் அனைவரும் அச்சமும், சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எனது நோக்கமாகும் என்றார்.
 

புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானம்: “ரிவிர” பத்திரிகை தகவல்

army-wanni.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனது நல்ல நண்பர்- கருணாநிதி : பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

karunanidhi-prabhakaran.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

jayalalitha.jpgஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட லண்டன் ரைம்ஸ் பத்திரிகையாளர்

london-times.jpgகொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. “இந்த வழியால் வாருங்கள்’ என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கணினியில் என்னைப்பற்றிய விபரத்தை அவரின் சகா ரைப் செய்தார்.

அவரின் திரையில் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வந்தது. எனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தடுப்பு அறைக்கு காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டேன்.

இரவு முழுதும் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் திருப்பி அனுப்பப்பட்டேன்.

நான் வியப்படைந்தேன் என்று என்னால் கூற முடியாது. சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் தெற்காசியாவில் 12 வருட செய்தி நிருபராக பணியில் ஈடுபட்ட நான் முதலாவதாக திருப்பி அனுப்பப்பட்ட போதும் நான் ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறமுடியாது என்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் தெற்காசியாவுக்கான நிருபர் ஜெரமி பேஜ் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக “தமிழ்புலி மோதல் தொடர்பாக செய்தி சேகரிப்பதிலிருந்தும் எவ்வாறு நான் தடுக்கப்பட்டேன்’ என்ற தலைப்பில் “லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பல்வேறுபட்ட விண்ணப்பங்களின் மத்தியிலும் ஆகஸ்டின் பின்னர் இலங்கைக்கான பத்திரிகையாளர் விசா எனக்கு மறுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்களாக சுயாதீனமான பத்திரிகையாளர்கள் தமிழ்புலிகளுக்கு எதிரான இராணுவநடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பதை இலங்கை அரசாங்கம் தடுத்திருந்தது.

அதனால் உல்லாச பயணியாக செல்ல முயற்சித்தேன். மோதல் சூன்யப் பகுதியில் ஐ.நா. புள்ளி விபரத்தின் பிரகாரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அகப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக எழுத முயற்சித்தேன்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உல்லாசப் பயணிகளாக செல்லும் ஏனைய நாடுகள் சிம்பாப்வே, துர்க்மெனிஸ்தான், வடகொரியா என்று நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பத்திரிகைகள் புலிகளுக்கு ஆதரவானவை எனவும் ஏனென்றால் அங்கு அதிகளவில் தமிழ் சமூகம் இருப்பதாகவும் அரசாங்கம் நினைப்பதால் நான் சந்தேகப்படுவோர் பட்டியலில் இருந்தேன்.

அது அபத்தம்.

இந்த 26 வருட உள்நாட்டுப் போரில் எந்தத் தரப்புடனும் நான் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. புலிகள் அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுவென தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று “த ரைம்ஸ்’ திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு வந்துள்ளது. அத்துடன் அரசின் தந்திரோபாயம் மற்றும் தமிழர், சிங்களவர்களின் உபாயங்கள் தொடர்பாகவும் விமர்சன ரீதியான செய்திகளை “த ரைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.

இது ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் செய்யும் விடயமாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் உறுப்பினர்களை நான் கிரமமாக பேட்டி கண்டுள்ளேன். ரஷ்யாவில் செச்னிய மோதல் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் செய்திகளை வெளியிட்டுள்ளேன். சீனாவில் மாற்றுக் கருத்துடையவர்களையும் திபெத் சுதந்திரத்திற்கான பணியாளர்களையும் நான் பேட்டி கண்டுள்ளேன். இதே விடயத்தை இலங்கையில் செய்வது தடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி மிகவும் அபாயகரமானதாகவும் உள்ளது.

கடந்த தடவை நான் இலங்கைக்கு சென்றது லசந்த விக்கிரமதுங்க பற்றி எழுதுவதற்கு. பத்திரிகை ஆசிரியரான அவர் கடந்த ஜனவரியில் கொலை செய்யப்பட்டார்.

மற்றொரு செய்தியானது மோதல் பகுதிகளிருந்து வெளியேறும் மக்களை அரசாங்கம் முகாம்களில் வைத்திருக்க திட்டமிடுகின்றது என்பது பற்றியே செய்தியாகும். முட்கம்பி வேலியடைத்த முகாம்களுக்குள் மூன்று வருடங்களுக்கு அவர்களை வைத்திருக்க போகும் திட்டம் பற்றியதாகும். செய்தியாளர் மாநாட்டில் என்னை அரசு கண்டித்திருந்தது. அதேசமயம் அரசாங்க சமாதான செயலகத் தலைவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. முகாம்களில் முட்கம்பி வேலியை பயன்படுத்துவதை நான் உணர்ச்சி வசப்பட்ட விடயமாக்கியிருந்ததாக அவர்குற்றம்சாட்டியிருந்தார்.

“துரதிர்ஷ்டவசமாக குளிரான காலநிலைப் பகுதியிலிருந்து வந்த ஒரு மனிதரால் உபகண்டத்தில் முட்கம்பியானது சாதாரணமான பொதுவான பொருள் என்பதையும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் காற்றோட்டத்திற்கும் பார்க்கவும் இது இடமளிக்கின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை’ என்று அவர் எழுதியுள்ளார்.

வவுனியா இடம்பெயர் மக்கள் நலன்புரி முகாம்களில், திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், கொலைகள் இடம்பெறுகின்றன: ஜேர்மனிய எழுத்தாளர்

thomas.jpgவவுனியாவில் வன்னியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மருத்துவ வசதியற்ற முகாம்களாக இருப்பதுடன்,  திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், என்பனவும் இடம்பெறுவதாக பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான சுற்றுலாவை மேற்கொண்டு விட்டு அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார். அத்துடன் அவர் வன்னியில் இருந்து வந்த மக்களிடம் தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் இருந்து தப்பி வந்துள்ளனர். அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதும் சாதாரண நிகழ்வுகள் என தோமஸ் சேய்பேட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினர் இந்த முகாம் பகுதிகளை பல ஆண்டுகளுக்கு நடத்தும் வகையில் விஸ்தரிக்க திட்டம் கொண்டுள்ளனர். அத்துடன், 15 சதுர கிலோமீற்றர் பகுதியில், வன்னியில் வசித்து வரும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், நாள்தோறும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி இதனை தடுக்காவிட்டால், வன்னியில் பாரிய படுகொலைகள் இடம்பெறும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தோமஸ் எச்சரித்துள்ளார்.