அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் சுதந்திரமாக வாழும் காலம் தூரத்தில் இல்லை – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgசகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் சுதந்திரமாக வாழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மகாபொல புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, மகாபொல புலமைப்பரிசில் திட்டத்தை முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி தான் அறிமுகப்படுத்தினார். அவர் இன்று எம் மத்தியில் இல்லை. என்றாலும் அவரது திட்டத்தை நாம் கைவிடவில்லை.  அது நல்ல திட்டம். யார் என்ன திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் அத்திட்டங்களின் மூலம் நாட்டு மக்கள் அடையும் பலன்களைப் பொறுத்தே நாம் தீர்மானங்களை எடுக்கின்றோம். நாம் நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டுதான் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்றோம். தேர்தல்களை கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுத்தால் அவை நாட்டை இருண்ட யுகத்திற்கே விட்டுசெல்லும். அப்படியான முடிவுகளை நாம் ஒருபோதும் எடுக்க மாட்டோம்.

இப்போது புலமைப்பரிசிலைப் பெறும் பட்டதாரி மாணவ மாணவிகள் பிறந்த காலம் முதல் பயங்கரவாதப் பிரச்சினையை அனுபவித்திருக்கிறார்கள். பிரபாகரனுக்கு நிர்வாகத்திற்கென ஒரு பிரதேசமும் எழுதிக்கொடுக்கப்பட்டிருந்தது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் அச்சம், பீதியுடனேயே வாழவேண்டிய சூழல் நிலவியது. நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறோம். எழுதிப் பிரிக்கப்பட்டிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியுள்ளோம்.

உலகிலேயே அதிகளவு பணயக் கைதிகளை குறுகிய காலத்தில் எமது படைவீரர்கள் வெற்றிகரமாக விடுவித்திருக்கின்றார்கள். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகில் விடுவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஒரே கொடியின் கீழ் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமாக வாழும் சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. அதனால் பல்கலைக்கழக கல்வியைத் துரிதமாகப் பூர்த்தி செய்து விட்டு மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் முன்வர வேண்டும். புதிய நாட்டை கட்டியெழுப்பும் தற்போதைய சூழலில் பட்டதாரிகளின் சேவை எமக்கு மிகவும் அவசியமானது. ஒரே தடவையில் 45 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குச் ஏற்கனவே சேர்த்திருக்கிறோம். ஆயினும் அவர்களிடமிருந்து உச்ச சேவை பெறப்படுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.

யாழ். மாவட்டப் பாடசாலைகள் திங்களன்று இரண்டாம் தவணைக்காக ஆரம்பம்

schools_stu.jpgயாழ். மாவட்டப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக 27 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென சில பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சிலவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் அயல் பாடசாலைகளில் பிற்பகல் வேளையில் கல்வி கற்பதற்குரிய மாற்று ஏற்பாடுகளைக் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திற்கு இதுவரையில் சுமார் 13 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக யாழ். மாவட்ட அரச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் – இராணுவத்தளபதி

sarath-fonseka.jpg புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார். இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

பிபிசியின் சிங்கள செய்தி சேவையான சந்தேசயவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச்செவ்வியில் இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே மறைந்து இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் 8கிலோ மீற்றர் நீளமும் 1.5கிலோ மீற்றர் அகலமும் கொண்ட கடற்பகுதியிலேயே மறைந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் மனித கேடயமாக வைத்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களை விடுவிக்கும் பொறுப்பு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அதேவேளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகிறோம்.

இன்னும் சுமார் 15ஆயிரம் மக்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என நினைக்கிறேன்.சுமார் 300, 400 புலிகளே அங்கு இருக்கின்றனர். பலவந்தமாக ஆயுதம் கொடுக்கப்பட்ட பொதுமக்களும் அதில் இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வருகை

un_humanitarian.jpgஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக அவர் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக ஐ.நாவின் பேச்சாளர் மரி ஒக்காபி தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மேலும் தெரிவித்துள்ளது

சரணடையும் நிலையில் பானு உட்பட முக்கிய தலைவர்கள்?

brig_shavendra.jpgகேர்னல் பானு உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் சிலர் படையினரிடம் சரணடைய ஆயத்தமாக இருக்கின்ற போதும் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோரின் அழுத்தம் காரணமாக இவர்கள் சரணடையாமல் உள்ளனரென 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோர் மக்களோடு மக்களாக புதுமாத்தளன் பாதுகாப்பு வலய பகுதியிலேயே இன்னமும் உள்ளனர் என்பது தயா மாஸ்டரின் வாக்குமூலம் ஊடாக ஊர்ஜிதமாகியிருக்கிறது என்றும் பிரிகேடியர் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுமாத்தளனிலுள்ள 58ஆவது கட்ட ளையிடும் தளபதியின் அலுவலகத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்ற போதே பிரிகேடியர் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

படையினரிடம் சரணடைந்த புலிகளின் ஊடகப் பேச்சளரான தயா மாஸ்டர் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய மிக முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக புலிகளின் தலைமையின் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் அழுத்தம் காரணமாக தமது வாழ் நாளில் பொய்பேச வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப் பட்டதாகவும் இதனால் தாம் மிகவும் மனம் வருந்து வதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் மட்டுமல்ல அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்டனியும் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருப்பதாகக் கூறிய தயா மாஸ்டர் இறுதி நேரத்தில் பிரபாகரன் தப்பிச் சென்றுவிடுவார். போராட்டத்தில் இறுதிவரை நின்று உயிரிழக்க மாட்டார்; அவர் இவ் வாறான மனப்பான்மையை கொண்டவர் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா கூறினார்.

இதேவேளை, பிரபாகரன் இறுதிநேரத்தில் தப்பிச் செல்வதற்காக இன்னுமொரு நீர்மூழ்கியை வைத்திருப்பதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்ததாக பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியின் தென்முனைப் பகுதியிலிருந்து எதிர்முனைக்கு கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்முனையினூடாக மக்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுவிடக் கூடாது என்பதாலேயே இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறிய பிரிகேடியர் சவேந்திர சில்வா, எனினும் படையினர் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தியே எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேறும் மக்களின் நலன் கருதியே இவ்வாறு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரிகேடியர் கூறினார்.

புலிகள் அனைவரும் இறுதி வரை போராட வேண்டும் என்றும் அனைவரும் சிவில் உடையில் நின்றே போராட வேண்டும் என்றும் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவ உளவுப் பிரிவின் தலைவர் பதவி நீக்கம்

korabelnikovafp.jpgரஷ்யா வின் மிகப்பெரிய உளவு அமைப்பான இராணுவ உளவுப் பிரிவின் தலைவரை ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கும் அதிகமாக அந்த பதவியில் இருந்துவந்த வலன்ரின் கொரபல்நிக்கோவ் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆனால், ரஷ்ய இராணுவ ஆட்குறைப்பு திட்டத்துக்கு இவர் முக்கியமான எதிர்ப்பாளர் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஜோர்ஜியாவில் கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில், ஏற்பட்ட சில தவறுகளுக்கு இந்த அதிகாரி மீதே அரசாங்கம் குற்றஞ்சாட்டப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

மேனன், நாராயணன் ஜனாதிபதியுடன் சந்திப்பு-தற்போதைய நிலைமை, மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வு

mahinda-shivshankar-mknarayan.jpg
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆர். கே. நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று நண்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமுகமானதாக அமைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்திய ராஜதந்திரிகள் ஜனாதிபதிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இலங்கையும் இந்தியாவும் ஏற்கனவே மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய வன்னி நிலைவரங்கள் தொடர்பாக இரு நாட்டு ராஜதந்திரிகளும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு அம்சமாகவே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ராஜதந்திரிகள் ஜனாதிபதியைப் பாராட்டியதாகவும் மேற்படி ஊடகப்பிரிவு தெரிவித்தது. நேற்றைய இச்சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

Wanni_War_Welfare_Campவிடுதலைப் புலிகள் வசம் இருந்து இலங்கை அரச படையினர் கடைசியாக கைப்பற்றியிருந்த புதுமாத்தளன் பகுதிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை முதல் முறையாக இலங்கை இராணுவம் அழைத்துச் சென்றிருந்தது.

கொழும்பிலிருந்து புதுமாத்தளன் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த பிபிசி செய்தியாளர், சற்று தொலைவில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியுள்ள பிரதேசத்திலிருந்து வெடிச் சத்தத்தைக் கேட்கக்கூடியதாகவும் புகை கிளம்புவதை பார்க்கக்கூடியதாகவும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் தொடர்ந்து வெளியேறிவருவதை காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

வவுனியா அகதி முகாம்கள் நிலை: அத்தியாவசியத் தேவைகளில் தட்டுப்பாடு

mullaitheevu.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள பல்வேறு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், முகாம்களிலே குடிநீர், உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக முகாம்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் தங்கவைக்கப்படுகிற நிலைமை இல்லை என்றும் முகாமில் உள்ளவர்கள் தமது உறவுகளை தொடர்புகொள்வது இயலாத காரியமாக உள்ளது என்றும் முகாம் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னியில் காயமடைந்த 848 பொதுமக்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதி

puthu.jpgவன்னி யில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 848 பொதுமக்கள் வியாழக்கிழமை வரை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதில் மரணமான 36 பேரது சடலங்கள் ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. வன்னியிலிருந்து கடந்த மூன்று நாட்களிலேயே காயமடைந்த இவர்கள் வவுனியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த 848 பேரில் படுகாயமடைந்த பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பிலிருந்து மருத்துவர் குழுவொன்று வவுனியாவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.