அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கல் – சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிபெற அரசு முடிவு

flee0009.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் நாட்டுக்குள் பரவாமல் தடுக்க இலங்கை உஷார்

mexico_flu_.jpgஉலகின் சில நாடுகளில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் வராமல் தடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முன்னேற்பாடுகளை அமைச்சின் உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மெக்ஸிகோ, ஐக்கிய அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வெவ்வேறு பிரதேசங்களில் இக்காய்ச்சல் பரவி வருகின்றது. இக்காய்ச்சலுக்கு மெக்ஸிகோ நாட்டில் மாத்திரம் குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

1500 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டே இக்காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்முன்னேற்பாட்டின் ஓரங்கமாக கொழும்பு துறைமுகத்திலும், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

இதேநேரம் இக்காய்ச்சலைத் தவிர்க்கும் திட்டத்தின் மற்றொரு அங்கமாக நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவு பணிப்பாளர் டாக்டர் பபா பலிகவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருப்பவர்கள் எவராவது இனம் காணப்படுவார்களாயின் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும் இவ்வாறானவர்களின் இரத்தமாதிரிகளை உடனடியாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்கள் மத்தியில் அதிக காய்ச்சல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டை சுழற்சி, இருமல் போன்றவாறான அறிகுறிகள் தென்படலாம், இக்காய்ச்சல் சில நேரம் நியூமோனியாவாகக் கூட வளர்ச்சி பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி தலைவர் எச்சரிக்கை – உலக வங்கி தலைவர்

roberzoellick.jpg உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இந்நிலையில், வறிய நாடுகளில் சமுதாயத்திற்காக செலவிடப்படும் தொகைகள் பாதிக்கப்படக்கூடாது என உலக வங்கியின் தலைவர் ராபர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிதி மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சகர்களின் மாநாட்டில் பேசிய அவர், செல்வந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியில் கவனத்தை செலுத்துவதை விட்டு, அது வறுமையை எவ்வாறு பாதிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, சுகாதாரம், கல்வி மற்றும் உணவு போன்றவற்றுக்கு செலவிட வேண்டிய தொகையை முன்பு குறைத்த தவறை மீண்டும் செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டார்.

பர்மா மீதான ஐரோப்பிய தண்டனைத் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

ஆங்சான் சூச்சிக்கு ஆதரவாக பர்மியர்களும் சர்வதேச சமூகத்தினரும் குரல்கொடுத்துவருகின்றனர் பர்மாவுக்கு எதிரான தண்டனைத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஒரு ஆண்டு நீடித்திருக்கிறது.

பர்மாவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவி ஆங்க் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

2006ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்த தடைகளை, ஜனநாயகம் தொடர்பில் பர்மாவின் ராணுவ அரசாங்கம் முன்னேற்றத்தை காட்டினால், இந்த தடைகள் தொடர்பில் தாங்கள் மீள்பரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள தடைகளின்படி, பர்மாவின் மூத்த அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கும், பர்மாவுக்கு ஆயுதங்கள் அளிப்பதற்கும், பர்மாவின் தேக்கு, கனிமப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரண கற்கள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ள பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு கோரல்

jaffna-map.jpgநீதிமன்றம், அரச அதிபர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள பொது அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களின் ஒத்துழைப்புடனேயே யாழ்.குடாநாட்டில் பொலிஸார் போக்குவரத்துக் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். இவற்றின் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கும் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றையும் பொலிஸாரின் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருப்பதாக யாழ்ப்பாணப் பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் பொலிஸாரினால் அமுல் படுத்தப்படுகின்ற வீதிக்கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்;

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி யாழ்.குடாநாட்டில் பொலிஸாரால் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக வீதிக் காண்காணிப்பு நடைமுறைப் படுத்தப்படாமையால் மக்களை அவற்றுக்குப் பழக்கப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் அவர்களுக்கான வீதிப் போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கிவருகின்றோம்.

குடாநாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் தினமும் யாழ்நகருக்கு வருகைதருகின்றனர். யாழ்நகரில் அமுல்படுத்தப்படுகின்ற வீதிப் போக்குவரத்து நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனை அவர்கள் தங்கள் பிரதேசங்களிலும் கடைபிடிக்கின்ற போது விபத்துகள் குறைகின்றன. இதனாலேயே வீதிக் கண்காணிப்பு நடைமுறையில் நகர்ப்புறத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ் வீதிக் கண்காணிப்பின் போது மோட்டார் சைக்கிள்களில் இருவர் பயணித்தால் அவர்கள் இருவரும் தலைக் கவசம் அணிவது முக்கியமானதாகும். அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் மற்றும் வாகன வரி அனுமதிப்பத்திரம் என்பனவும் பரிசீலிக்கப்படுகின்றன. அத்தோடு துவிச்சக்கரவண்டிகளில் சமாந்தரமாகச் செல்வோரும் கண்காணிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

இவ் வீதிக் கண்காணிப்பின்போது உரிய ஆவணங்கள் இல்லாதோர் மற்றும் விதிகளை மீறுவோருக்கு கடந்த முதலாம் திகதியிலிருந்து தண்டம் விதிக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றது பாடசாலை மாணவர்களுக்கும் வீதிப்போக்குவரத்து தொடர்பான விபரங்கள் வழங்கப்படுகின்றன.இதன் மூலம் விபத்துகளைக் குறைக்க முடிந்திருக்கிறது.

இவற்றோடு யாழ்.குடாநாட்டில் மக்களுக்கு ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்கின்ற பொலிஸார் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றனர் என்றும் கூறினார்.

பன்றிக் காய்ச்சல்: சர்வதேச கவலைகள் அதிகரித்துவருகின்றன

mexico_flu_.jpgபன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது

மெக்ஸிகோவில் பெருமளவில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலின் காரணமாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த சர்வதேச கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தத் தொற்றின் மூலம் ஐரோபபாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மெக்ஸிகோ நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த ஒரு ஆடவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்தத் தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தான் அறிவுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் ஆண்ட்ரௌலா வாஸிலோவ் கூறியுள்ளார்.

இது ஒரு அறிவுரை மட்டுமேயன்றி பயணத்தடை அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் தொற்று கவலையளிக்கக் கூடிய ஒரு விடயம் என்றாலும் இதன் காரணமாக கலக்கமடைய வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கடந்த ஆறு வருடங்களில் பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது – உபவேந்தர் ஹுசைன்

eastern-university.gif கடந்த 6 வருடங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க அளவில் அபிவிருத்தி கண்டுள்ளதுடன் தென்கிழக்குப் பிராந்திய மக்களின் கல்வியிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறதென தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக “சீடா’ மீளமைப்புத் திட்டத்தினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “அனர்த்த முகாமைத்துவம்’ எனும் தலைப்பிலான பயிற்சிச் செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.

சீடா மீளமைப்புத் திட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் கலாநிதி என்.டபிள்யூ.பி. பாலசூரிய தலைமையில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில் மேலும் தெரிவிக்கையில்; கல்வி நடவடிக்கைகளில் மாத்திரமன்றி மக்களின் அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் இந்த “சீடா’ திட்டத்தை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வந்துள்ளது.

ஊடகவியலாளர்கள் இங்கு பெற்றுக் கொண்ட தமது பயிற்சிகளை சமூகம் பயன்பெறக் கூடியவாறு மீள வழங்க வேண்டும். அத்தோடு, அனர்த்த அபாயத்திற்குள் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்களை நாம் வழங்க வேண்டியது அவசியமானதாகும்.

இதேவேளை, சொற்ப காலத்தில் எனது உபவேந்தர் கடமையை நிறைவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். எனது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊடகவியலாளர்கள் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறேன்.

எனக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று வருகின்ற புதிய உபவேந்தருக்கும் ஊடகவியலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் இப்பிராந்தியத்தின் கல்வி, பொருளாதார, சமூக ஈடேற்றத்திற்கு பெறுமதியான பங்களிப்புகளை நல்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

ஐ.நா. பணியாளர்கள் யுத்தப் பிரதேசத்திற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை: ஜான் ஹோம்ஸ்

john_holmes.jpgமோதல் பிரதேசத்திற்கு மனிதாபிமான பணியாளர்கள் செல்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெறுவதற்கு தம்மால் இயலவில்லை என்று இலங்கையில் பயணம் செய்துவரும் ஐ.நா. மன்றத்தின் தூதரான ஜான் ஹோம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி சர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

ஒபாமாவின் சரியான முன்னெடுப்பை எதிர்பார்க்கிறேன்: 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன்

parames.jpgஇலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, “இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்பினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களும், சர்வதேச கண்காணிப்பு இன்றி அல்லற்படுகின்றனர். இந்த நிலையிலேனும் அமெரிக்கா ஒரு சரியான, காத்திரமான முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

தமக்குச் சரியான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை எவராலும் தடுக்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.